எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

பிஜ்ஜெட் ஸ்பின்னர்ஸ்தான் இன்றைய புதிய யோயோ அல்லது ரூபிக்ஸ் கியூப் என்று கூறலாம். படபடப்பான கையை இலகுவாக்கவும் ஒருமுகப்படுத்தவும் உருவான விளையாட்டுக் கருவிகள். இணையத்தில் இந்த விளையாட்டுக் கருவிகள் பற்றிய எண்ணிலடங்கா விடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் “பிஜ்ஜெட் ஸ்பின்னரின் சுழலும் இயற்பியல் தத்துவம்” பற்றிய வீடியோக்களும் அடங்கும்.

விண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும் போது அதனைச் சுற்றி சுழல்கிறது. இப்படியாக சுழலும் விண்பொருட்களைப் பற்றிப் படிப்பது புதிய சுவாரஸ்யமான, எதிர்பாராத புதிய கதைகளை எமக்குச் சொல்லலாம்.

பிரபஞ்சத்தில் சுயாதீனமாக மிதந்துகொண்டிருக்கும் பிரபஞ்சத் தூசாலான மேகங்களில் இருந்து விண்மீன்கள் பிறக்கின்றன. இந்த மேகங்கள் ஒடுங்கி, சிறிதாகி அடர்த்தியும் வெப்பமும் அதிகரிக்கும். மேகத்தின் மத்தியின் வெப்பநிலை 10 மில்லியன் பாகையாக அதிகரிக்கும் போது, அங்கே ஒரு புதிய விண்மீனின் வாழ்க்கை தொடங்கும்.

இந்த மேகங்கள் ஒடுங்கும் போது இவை சுழலவும் தொடங்கும். சிறிதாக சிறிதாக இவற்றின் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கும். பிஜ்ஜட் ஸ்பின்னரை நீங்கள் சுழற்றியிருந்தால் அது எவ்வளவு வேகமாக சுழன்றாலும் ஒரு கட்டத்தில் அதன் சுழற்சி ஓய்வுக்கு வரும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்குக் காரணம் உராய்வுவிசை ஆகும்.

காற்றில்லா விண்வெளியில் உராய்வு மிக மிகக் குறைவு, இதனால் புதிதாக உருவாகிய விண்மீன்கள் மிக வேகமாக சுழல்வதை நாம் அவதானிக்கின்றோம். ஆனால் பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய விண்மீன்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகம் குறைவாகவே சுழல்கின்றன. இவற்றின் வேகத்தை குறைப்பது எது?

இதற்கான விடையை விண்ணியலாளர்கள் கண்டறிந்துவிட்டனர்: வாயுத் தாரையே (jets of gas) இதற்குக் காரணம்.

OrionKL

மேலே உள்ள படத்தில் இருப்பது போல புதிதாக உருவான விண்மீன்களில் இருந்து வாயுத் தாரைகள் வேகமாக வெளிவருகின்றன. விண்மீனோடு சேர்ந்து இந்த வாயுத் தாரைகளும் சுழல்கின்றன, இதனால் சக்தி இழக்கப்பட்டு விண்மீனின் சுழற்சி வேகம் குறைகின்றது.

இதனை விளங்கிக்கொள்ள, சுழலும் கதிரை ஒன்றில் இருந்து சுழன்று பாருங்கள். முதலில் கால்களை கதிரையின் கீழே வைத்துக்கொண்டு, பின்னர் கால்களை விரித்தவாறு சுழன்று பாருங்கள். கால்களை விரித்தவாறு சுழலும் போது உங்கள் சுழற்சி விரைவாக நின்றுவிடுவதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த உதாரணப்படி உங்கள் கால்கள்தான் வாயுத் தாரைகள்.

மேலதிகத் தகவல்

அதிகநேரம் ஒருவரின் மூக்கில் வைத்து பிஜ்ஜெட் ஸ்பின்னரை சுற்றிய உலக சாதனை நேரம் 1 நிமிடமும் 46 செக்கன்களும். உங்களால் அதனை முறியடிக்கமுடியுமா?


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1724/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam