ஒரு வருடத்தில் பலமுறை இரவு வானம் நூற்றுக்கணக்கான தீப்பந்துகளால் ஒளிர்கிறது. இவற்றை நாம் “எரி நட்சத்திரம்” என்கிறோம். உண்மையிலேயே இவற்றுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும் சிறு கற்களே இவை. இவற்றை நாம் விண்கற்கள் என்கிறோம்.
சில வேளைகளில் விண்கற்கள் குழுவாக பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும். இதனை நாம் எரிகல் பொலிவு என அழைக்கிறோம்.
எரிகல் பொலிவு தூமகேதுகள் / வால்வெள்ளிகளால் உருவாகின்றது. தூமகேதுகள் விண்வெளித் தூசு, கற்கள் மற்றும் பனியால் உருவானவை. இவை சூரியனுக்கு அண்மையில் பயணிக்கும் போது வெப்பம் காரணமாக இவற்றில் இருக்கும் பனி உருகுகின்றது. இதன் காரணமாக இதிலிருக்கும் சின்னஞ்சிறிய கற்கள் மற்றும் தூசுகள் வெளியேறி அழகான வால் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
தூமகேதுவின் வால் பிரதேசத்தினுள் பூமி நுழையும் போது, இந்த தூசுகளும் கற்களும் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகின்றன.
Phoenicids (FEE-ni-kids என உச்சரிக்கப்படும்) ஒரு சுவாரஸ்யமான எரிகல் பொலிவு ஆகும். 1956 ஆம் ஆண்டில் கடைசியாக இந்த எரிகல் பொலிவு இரவுவானை அலங்கரித்தது. அதற்குப் பிறகு இது மீண்டும் வரவில்லை. விண்ணியலாளர்களை இது ஆச்சரியத்தில் ஆழத்த்தியது: Phoenicids எங்கிருந்து வந்தது, ஏன் Phoenicids மீண்டும் பூமிக்கு வரவில்லை?
இதற்கான விடையை அறிய விண்ணியலாளர்கள் Blanpain எனும் காணாமற் போன ஒரு தூமகேதுவைத் தேடிச்சென்றனர்.
1819 இல் இரண்டு விண்ணியலாளர்கள் Blanpain எனும் தூமகேதுவைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதே ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தத் தூமகேது மர்மமான முறையில் மறைந்துவிட்டது.
கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு பின்னர், அந்தத் தூமகேது பயணித்த அதே பாதையில் ஒரு சிறிய குறுங்கோள் ஒன்றை விண்ணியலாளர்கள் அவதானித்தனர். இந்தக் குறுங்கோள் தொலைந்துவிட்ட தூமகேதுவின் எச்சம் என்பது பிறகு கண்டறியப்பட்டது!
அந்தத் தூமகேதுவில் இருந்து அனைத்து பனி, வாயு மற்றும் தூசுகளும் வெளியேறியிருக்க வேண்டும். இந்தத் தூசாலான அடிச்சுவடு அந்தத் தூமகேது பயணித்த அதே பாதையில் பயணித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இந்தத் தூசால் உருவான சுவடு பூமியுடன் மோதியதால் Phoenicid எரிகல் பொலிவு இடம்பெற்று இரவுவானை அலங்கரித்து இருக்கின்றது.
மேலதிக தகவல்
எரிகல் பொழிவை உருவாக்கும் தூசுகளும் கற்களும் ஒரே திசையில் இருந்தே வரும். பெரும்பாலான எரிகல் பொழிவுகள் அதுவரும் திசையில் இருக்கும் விண்மீன் கூட்டத்தைச் சார்ந்து பெயரிடப்படும். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருக்கும் விண்மீன்களுக்கும் எரிகல் பொழிவுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அந்த விண்மீன் கூட்டங்கள் மிகத் தொலைவில் இருக்கின்றன.
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://www.unawe.org/kids/unawe1725
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam