வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும்.

இந்த இரண்டு கோள்களையும் ஆய்வு செய்யப் போதுமானதாக குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தொழிற்படக்கூடியவாறு வொயேஜர் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டன.  வியாழன், சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்யவென புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு அதற்கும் அப்பால் இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களையும் அருகே சென்று நோட்டம் விட்டு பூமியில் இருக்கும் மூளைகளுக்கு பல புதிய விருந்துகளை அனுப்பிவைத்தன.

540354main_voyager20110427-full
வொயேஜர் விண்கலம்

பூமியில் இருந்து புறப்படும் போது அவற்றின் நோக்கம் ஐந்து வருடங்களில் வியாழன், சனி ஆகிய கோள்களையும் அவறின் துணைக் கோள்களையும் ஆய்வு செய்வதே, ஆனால் பூமியில் இருந்து அவற்றை வெற்றிகரமான ப்ரோக்ராம் செய்து ஐந்து வருட திட்டத்தை 12 வருட திட்டமாக மாற்றி மாற்றிய இரண்டு கோள்களையும் ஆய்வு செய்து இன்று நாற்பது வருடங்களாக வெற்றிகரமாக விண்வெளியில் சூரியத் தொகுதியைவிட்டு விண்மீனிடைவெளி நோக்கி இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

பல விஞ்ஞான புத்தகங்களை மாற்றி எழுதும் அளவிற்கு நான்கு கோள்களைப் பற்றியும், அவற்றின் 48 துணைக்கோள்களைப் பற்றியும், கோள்களின் காந்தப்புலம் பற்றியும் எண்ணிலடங்கா தகவல்களை வொயேஜர் விண்கலங்கள் திரட்டித் தந்துள்ளன. விண்ணியலிலும், கோள் விஞ்ஞானத்திலும் பல புதிய பாதைகளை வொயேஜர் விண்கலங்களின் தரவுகள் திறந்துவைத்தது எனலாம்.

1970 களின் கடைசியில் அமைந்த அபூர்வமான கோள்களின் சுற்றுப்பாதை அமைப்பினால் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை குறைந்தளவு எரிபொருள் கொண்டு, குறைந்த காலப்பகுதியில் சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு உருவானது. இப்படியான சுற்றுப்பாதை அமைப்பு ஒவ்வொரு 175 வருடங்களுக்கு ஒருமுறை வரும். இந்த அமைப்பினால் ஒரு கோளைச்சுற்றிவிட்டு அடுத்த கோள் என கோள்களின் ஈர்புவிசையை கவன்போல பாவித்து குறைந்த எரிபொருளில் பயணித்துவிட முடியும். இப்படியாக ஈர்புவிசையை பாவித்து வேகத்தை அதிகரித்து பயணிப்பது “ஈர்ப்பு உதவி” என அழைக்கப்படுகிறது. 1973-1974 காலப்பகுதியில் நாசா வெள்ளி, மற்றும் புதனை ஆய்வு செய்ய அனுப்பிய மேரினர் 10 விண்கலம் ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்தி பயணம் செய்ததால் நாசாவிற்கு ஏற்கனவே இந்த முறையை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துவது என்று தெரிந்திருந்தது.

இந்த ஈர்ப்பு உதவி முறையை பயன்படுத்தினால் இறுதியாக இருக்கும் நெப்டியூனை சென்றடைய 30 வருடங்களுக்கு பதிலாக வெறும் 12 வருடங்களே போதும்.

நான்கு கோள்களையும் ஆய்வு செய்வது முடியுமான காரியம் என்று தெரிந்தாலும், நான்கு கோள்களையும் ஆய்வு செய்யக்கூடியவாறு விண்கலத்தை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக அமையும் என்று நாசா கருதியது. அவ்வளவு தொலைவு பயணிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு ஆய்வுக் கருவிகளை செயலிழக்காமல் பாதுகாப்பதும் மிகவும் கடினமான காரியமாகும். இதனால் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மட்டுமே வொயேஜர் விண்கலங்கள் ஆய்வு செய்யுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது.

10,000 இற்கும் அதிகமான பயணப்பாதைகள் கருத்தில் எடுக்கப்பட்டு இறுதியாக இரண்டு பாதைகள் தெரிவு செய்யப்பட்டன. இந்தப் பாதைகள் வியாழன் மற்றும் அதன் துணைக்கோள் Io, சனி மற்றும் அதன் பெரிய துணைக்கோள் டைட்டன் ஆகியவற்றை அருகில் சென்று ஆய்வு செய்யவும், பின்னர் வொயேஜர் 2 முடியுமானால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை சென்றடையுமாறும் தெரிவுசெய்யப்பட்டன.

நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து வொயேஜர் 2 ஆகஸ்ட் 20, 1977 இல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் வேகமானதும் குறைந்த தூரம் கொண்ட பாதையில் செல்லுமாறு விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் Titan-Centaur ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

வேகமாக பயணித்த வொயேஜர் 1, வியாழனை மார்ச் 5, 1979 இல் அடைந்தது. அதன் பின்னர் சனியை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. வோயஜெர் 2 விண்கலம் வியாழனை ஜூலை 9, 1979 இலும், சனியை ஆகஸ்ட் 25, 1981 இலும் அடைந்தது.

வோஜெயர் 1 இன் பயணப்பாதை விண்கலத்தை சனியின் துணைக்கோள் டைட்டன் இற்கு மிக அருகிலும், சனியின் வளையங்களுக்கு பின்னாலும் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. வோஜெயர் 2 இன் பயணப்பாதை சனிக்கு அருகில் சென்றால் அதன் ஈர்ப்புவிசையால் வொயேஜர் 2 யுரேனஸை நோக்கி பயனப்ப்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

சனிக்கு அருகில் வொயேஜர் 2 செல்லும் போது, அதனது ஆய்வுக்கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் இருந்ததால் யுரேனஸை நோக்கி முழு செயற்பாட்டுடன் பயணிக்கக்கூடியவாறு இருந்தது. பூமியில் நாசா வொயேஜர் 2 ஐ யுரேனசிற்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. மேலும் அதனை நெப்டியுனுக்கு செல்லும் திட்டமாகவும் மாற்றியமைத்தது.

 

Interstellar_probes_(cropped).jpg
வொயேஜர் மற்றும் பயனியர் விண்கலங்களின் பயணப்பாதைகள்

 

வொயேஜர் 2 ஜனவரி 24, 1986 இல் யுரேனஸை சென்றடைந்தது. முதன்முதலாக பூமிக்கு யுரேனஸ், அதன் துணைக்கோள்கள், அதன் காந்தப்புலம் மற்றும் யுரேனஸை சுற்றிய கருப்பு வளையும் ஆகியவற்றின் படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பிவைத்தது.

இதே காலப்பகுதியில் வொயேஜர் 1 சூரியத் தொகுதியை விட்டு வடக்கு நோக்கி வெளியே செல்லும் பாதையில் பயணத்தை தொடர்ந்தது. மனிதன் உருவாக்கிய கருவிகளில் இதனது கருவிகள் தான் முதன் முதலாக heliopause பிரதேசத்தை உணரும். Heliopause எனப்படுவது சூரியனது காந்தப்புலத்தின் எல்லை முடிவடைந்து விண்மீனிடைவெளி (interstellar space) தொடங்கும் பிரதேசமாகும்.

ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனை நெருங்கிய வொயேஜர் 2, அதன் பின்னர் தெற்கு நோக்கி விண்மீனிடைவெளி பிரதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது.

இரண்டு வொயேஜர் விண்கலங்களும் விண்மீனிடைவெளியை நோக்கி பயணிப்பதால், இன்று வோஜெயர் திட்டம் – வோஜெயர் விண்மீனிடைவெளித் திட்டம் என அழைக்கப்படுகிறது.

இன்று வொயேஜர் 1 பூமியில் இருந்து 20 பில்லியன் கிமீ தொலைவில் ஏற்கனவே விண்மீனிடைவெளியில் பயணித்துக்கொண்டிருகிறது. ஆகஸ்ட் 2012 இல் வொயேஜர் 1 விண்மீனிடைவெளியை அடைந்துவிட்டது .இதனது தற்போதைய வேகம் (சூரியனுக்கு சார்பாக) செக்கனுக்கு 16.9 கிமீ.

வொயேஜர் 2 தற்போது Heliosheath எனப்படும் பிரதேசத்தில், பூமியில் இருந்து 17 பில்லியன் கிமீ தொலைவில் பயணிக்கிறது. Heliosheath எனப்படும் பிரதேசம் heliosphere பிரதேசத்தின் வெளி எல்லையாகும். இந்தப் பிரதேசத்தின் சூரியக்காற்றின் (solar wind) விண்மீனிடைவெளி வாயுக்களின் அழுத்தத்தால் குறைவடையும். இதன் தற்போதைய வேகம் செக்கனுக்கு 15.3 கிமீ (சூரியனுக்கு சார்பாக).

வோஜெயர் விண்கலங்கள் அதனது சக்தி முதலில் இருந்து சக்தி கிடைக்கும் வரை தொடர்ந்து எமக்கு அது சேகரிக்கும் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

அணுச் சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாகும் இந்த வோஜெயர் விண்கலங்களில் வொயேஜர் 1 இன் சக்திமுதல் 2025 வரை தொழிற்படும் எனவும் வோஜெயர் 2 இன் சக்திமுதல் 2020-2025 வரை தொழிற்படும் எனவும் கணக்கிட்டுள்ளனர். எனவே குறைந்தது அந்தக் காலம் வரை தொடர்ந்து எமக்கு தரவுகளை இந்த விண்கலங்கள் அனுப்பிக்கொண்டே இருக்கும்.

அதன் பின்னர் எமக்கு இவை தகவல்களை அனுப்பாவிட்டாலும் தொடர்ந்து அதனது வேகத்தில் பயணித்துக்கொண்டே இருக்கும். இன்னும் 300 வருடங்களில் வொயேஜர் 1 ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசத்தை அடையும்.

ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசம் சூரியனைச் சுற்றிக் காணப்படும் ட்ரில்லியன் கணக்கான சிறிய பனிப்பாறைகளால் ஆன பிரதேசமாகும். அண்ணளவாக 50,000 AU தொடக்கம் 200,000 AU (0.8 ஒளியாண்டுகள் தொடக்கம் 3.2 ஒளியாண்டுகள் வரை) வரை இந்தப் பிரதேசம் அகண்டு காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரதேசத்தைக் கடக்க வோஜெயர் 1 இற்கு அண்ணளவாக 30,000 வருடங்கள் எடுக்கும்.

வோஜெயர் 1 எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை, எனவே ஊர்ட்மேகப் பிரதேசத்தை கடந்தவுடன், ஏதாவது விண்பொருளுடனும் முட்டிமோதாவிட்டால் பால்வீதியில் தன்னந்தனியாக பயணித்துக்கொண்டே இருக்கும்.

வோஜெயர் 2 விண்கலம் 2016 இல் விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது 2019 அல்லது 2020 இல் இது விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வொயேஜர் 2 விண்கலமும் எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை எனவே இதுவும் வொயேஜர் 1 ஐ போல பால்வீதியில் உலாவரும்.

வொயேஜர் விண்கலங்களைப் பற்றி மேலும் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உண்டு. இந்த இரண்டு விண்கலங்களும் தங்கத்தாலான தரவுத் தட்டுக்களை கொண்டு செல்கின்றன. வேறு ஏதாவது அறிவுள்ள ஏலியன்ஸ் உயிரினம் வொயேஜர் விண்கலங்களை கண்டறிந்தால், அவற்றில் உள்ள தரவுத் தகட்டில் இருந்து பூமியைப் பற்றியும் அதன் அமைவிடம் பற்றியும் அறிந்துகொள்ளமுடியும்.

1024px-Voyager_Golden_Record_fx
வொயேஜர் விண்கலங்கள் கொண்டு செல்லும் தங்கத்தரவுத் தகடு.

பூமியின் படங்களும், பூமியில் உள்ள உயிரினங்களின் படங்களும், உலகின் 55 மொழிகளில் வணக்கம் தெரிவித்து செய்திகளும், பூமியின் இயற்கை ஒலிகள், குழந்தை அழும் சப்தம், அலைகளின் சப்தம், மற்றும் மொஸார்ட் போன்ற மேதைகளின் இசையமைப்புகளும் என்று பல விடையங்களை இந்த தங்கத் தகடு கொண்டுள்ளது.

மனித இனமே அழிந்தாலும் மனிதன் என்கிற அறிவுள்ள உயிரினம் வாழ்ந்ததற்கு சாட்சியாக வொயேஜர் விண்கலங்கள் பால்வீதியை சுற்றிவரலாம்.

தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, இணையம்


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam