ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

தங்களது தொலைநோக்கிகளைக் கொண்டு சிலவேளைகளில் விண்ணியலாளர்கள் இரட்டையர்களை விண்ணில் காண்பதும் உண்டு – புதிதாக கண்டறியப்பட்ட ஒரு வால்வெள்ளி வெறும் வால்வெள்ளி அன்று, அது இரண்டு சிறுகோள்களும் கூட!

சிறுகோள் 288P  தொலைவில் இருக்கும் வியாழனுக்கும், செவ்வாய்க்கும் இடையே உள்ள சிறுகோள்பட்டியில் சம்சாரிக்கிறது. இதனால் இதனை அவதானிப்பது என்பது கடினமான காரியம்.  ஆனாலும், அண்மையில் அது பூமிக்கு அருகில் கடந்து சென்றதால், அதனை தெளிவாக அவதானித்து ஆய்வுசெய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அவதானித்ததில் கிடைத்த ஆச்சர்யம் என்னவென்றால், 288P எனப்படும் சிறுகோள் ஒன்றல்ல, மாறாக இரண்டு சிறுகோள்கள்!

படவுதவி: ESA/Hubble, L. Calçada

இந்த ஜோடி சிறுகோள்கள், “இரட்டைச் சிறுகோள்” என அழைக்கப்படுகின்றன, காரணம் இவை ஒன்றையொன்றை சுற்றிவரும். மேலும் இந்த இரண்டு சிறுகோள்களும் அளவிலும், நிறையிலும் ஒரே அளவில் இருப்பதால் இவற்றை இரட்டையர்கள் என்றும் கருதலாம்.

இந்த சிறுகோள்களின் நிறையை அளவிடக்கூடியதாக இருப்பதே மிகப்பெரிய சாதனைதான். மேலும், இந்த இரட்டைச் சிறுகோள்கள், வால்வெள்ளி போலவும் தென்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!

சிறுகோள்களில் காணப்படும் திண்மப் பனிக்கட்டிகள் சாதாரண வால்வெள்ளிகளின் வாலைப்போலவே சூரியனது வெப்பத்தால் உருகுகின்றன. 288P யின் இந்தப் பண்பு, இச்சிறுகோள்களை வால்வெள்ளியாக கருதவும் காரணமாகின்றது!

இப்படியான தனித்துவமாக கண்டுபிடிப்புகள், 288P போல வேறு விசித்திரமான பொருட்களும் விண்வெளியில் இருக்குமா என விஞ்ஞானிகளை சிந்தனையில் ஆழ்த்தியுள்ளது. அப்படியாக வேறு சில பொருட்களை கண்டறியும் வரை விண்ணியலாளர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இந்த 288P மட்டுமே.

மேலதிக தகவல்

புதிய ஆய்வுகளின் படி, பூமிக்கு நீர் பனியால் உருவான வால்வெள்ளிகளால் கொண்டுவரப்பட்டது என்கிற நீண்டநாள் கருத்துக்கு மாறாக, பூமிக்கு நீர் பனி நிறைந்த சிறுகோள்கள் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1729/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam