நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

நம்மில் பலர் விண்வெளியில் எதிர்காலம் என்பது மிதந்து செல்லும் விண்கலங்களும், நிலவில் குவிமாட வடிவில் கட்டப்பட்ட பச்சை வீடுகளும் என்று மனதில் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் பூமிக்கு அப்பால் ஒரு எதிர்கால வாழ்கையை நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும். நிலவில் இருக்கும் நிலத்தடிக் குகைகள் எதிர்கால பணக்காரர்களின் சொகுசு வில்லாக்களாக மாறலாம்.

நிலவு எமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு உலகு. பூமியில் இருந்து வெறும் மூன்று நாட்கள் பயணத்தில் அடைந்துவிடக்கூடிய நிலவே மனித குலத்தின் அடுத்த வீடாக இருக்கும்.

இந்தக் கனவை நனவாக்க விஞ்ஞானிகள் நிலவில் இருக்ககூடிய நிலத்தடிக் குகைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவின் மேற்பரப்பில் சங்கிலித் தொடராக காணப்படும் இடிந்த குழிகள், நிலவின் மேற்பரப்பின் கீழே பாரிய குகைகளும் சுரங்கங்களும் மறைந்து காணப்படலாம் எனக் கருதத் தூண்டுகிறது. இந்தச் சுரங்கங்கள் பாரிய நிலத்தடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தச் சுரங்கத்தில் வீதிகளையோ, அல்லது முழு நகரங்களையோ எதிர்கால சந்ததியினர் அமைக்கக்கூடியதாக இருக்கும்.

எமக்கு அருகில் இருந்தாலும் பூமியை விட நிலவு மிகவும் ஆபத்தான ஒரு சூழலைக் கொண்டுள்ளது. நிலவின் வெப்பநிலை, பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குறைவாகவும், அல்லது 100 பாகை செல்சியஸ் அளவு அதிகமாகவும் காணப்படும்! இதற்குக் காரணம் நிலவில் பூமியைப் போல ஒரு வளிமண்டலம் இல்லை.

Lanzarote-cave
Lanzarote எனும் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் ஒரு தீவில் ESA யின் விண்வெளிவீரர்கள் பயிற்ச்சியில் ஈடுபடுகின்றனர். படவுதவி: ESA/L. Ricci

ஆகவே, நிலத்திற்கு கீழ் வாழ்வதனால் இப்படியான ஆபத்தான வெப்பநிலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், மேலும் நிலவில் விழும் விண்கற்களில் இருந்து எம்மை பாதுகாப்பதுடன் சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்தும் எம்மைப் பாதுகாக்கும். இதைத் தவிர்த்து, இப்படியான நிலத்தடி சொர்க்கங்கள் நிலவிலோ செவ்வாயிலோ உயிர்கள் வாழத் தகுந்த இடமாக இருக்கும்.

நிலவில் இருக்கும் குகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பூமியில் அதுபோன்ற குகைகளைத் தேடி ஆய்வுகளை நடத்துகின்றனர். நிலவில் உள்ள குகைகளைப் போலவே இங்கிருக்கும் குகைகளும் சுரங்கங்களும் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் எரிமலைக் குழம்பு பொங்கி வழிந்ததால் உருவானவை.

இன்று விண்வெளி வீரர்கள் இந்தக் குகைகளில் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எதிர்காலத்தில் நிலவிலோ, செவ்வாயிலோ இப்படியான சூழலில் எப்படி செயற்பட வேண்டும் என்று இவர்கள் இன்று பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.

மேலதிக தகவல்

நிலவில் இருக்கும் சுரங்கப்பாதைகளை தெளிவாக அவதானிக்க விண்கல் ஒன்று இந்த குகையின் மேலோட்டில் மோதி உடைக்க வேண்டும். அப்படி உடைத்தால், அதன் அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1731/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam