பூச்சி, பூச்சி, ஏலியன் பூச்சி

அண்ணளவாக இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூச்சிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வகைப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் 31 வகைகளில் அடங்கும். ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அம்பரில் அகப்பட்டிருந்த ஏலியன் போன்ற பூச்சி ஒன்றினால், 31 வகைகளை 32 ஆக மாற்றவேண்டிய தேவை வந்துள்ளது. “Aethiocarenodea” என வகைப்படுத்தப்பட்ட 32 ஆவது பிரிவில் இந்தப் பூச்சி மட்டுமே தற்போதைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

படவுதவி: Oregon State University

மியன்மார் காட்ட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆம்பரில் அகப்பட்டிருக்கும் இந்தப் பூச்சி நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து தற்போது முற்றாக அழிந்துவிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தது. சிறகுகள் அற்ற பெண்ணினமாக கண்டறியப்பட்ட பூச்சியின் தலை பார்க்க முக்கோண வடிவில் ஏலியன் போன்று இருப்பது தற்போதைய பூச்சிகளில் இல்லாத ஒரு விடையம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த முக்கோண தலை அமைப்பும், விரிந்த கண்களும் இந்தப் பூச்சிக்கு பின்புறம் என்ன நடக்கிறது என்பதனை இலகுவாக அவதானிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

படவுதவி: Oregon State University

மேலும், இதன் கழுத்திற்கு கீழே திராவகத்தை சேமித்து வைப்பதற்கான ஒரு சுரப்பியும் காணப்படுகிறது. எதிரிகளை தாக்க பீச்சி எறியக்கூடிய ரசாயனத்தை இந்தச் சுரப்பி கொண்டிருக்கலாம்.

இந்தப் பூச்சிக்கு Aethiocarenus burmanicus எனப் பெயரிட்டுள்ளனர். ஹோலிவூட் படங்களில் வரும் ஏலியன் போலவே இதன் தலையும் இருப்பது எதேர்சையான விடையம்தான்.

தகவல்: Oregon State University