ஏலியன் விண்கலமா? இல்லை விண்வெளி அகதியா? தேடல் தொடங்குகிறது

சூரியத் தொகுதிக்கு விருந்தாளியாக வந்த ‘Oumuamua என்கிற விண்கல் பற்றி ஏற்கனவே பரிமாணத்தில் எழுதியுள்ளேன். நாம் இதுவரை பார்த்திராத ஒரு விசித்திர வான்பொருள் அது – அதற்குக் காரணம் அது நமது சூரியத் தொகுதியைச் சார்ந்தது அல்ல என்பதே. ஒரு விருந்தாளி போல சூரியத் தொகுதியை விசிட் அடித்துவிட்டு மீண்டும் விலகிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆசாமி.

‘Oumuamua பற்றிய பரிமாணத்தின் கட்டுரையை வாசிக்க…

சூரியத் தொகுதிக்கு மேல் பக்கம் இருந்து புதனின் சுற்றுப் பாதைக்கு உள்ளே ஆல்மோஸ்ட் செங்குத்தாக மணிக்கு பல்லாயிரக்கணக்கான கிமீ வேகத்தில் நுழைந்து மீண்டும் மேலெழுந்து தற்போது வியாழனுக்கு அருகில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த விண்கல் சூரியனின் ஈர்புவிசைக்கு கட்டுப்பட்டதல்ல. எனவே இது சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்பது விண்ணியலாளர்களின் முடிவு எனேவேதான் இதற்கும் ஹவாயன் மொழியில் ‘Oumuamua எனப் பெயரிட்டனர் – அப்படியென்றால் ‘முதலாவது தூதுவன்’ என்று பொருளாம்!

ஓவியரின் கைவண்ணத்தில் ‘Oumuamua விண்கல். படவுதவி: ESO/M. Kornmesser

விண்ணியலாளர்கள் இந்தப் பொருளை ஆச்சரியத்தோடு நோக்க முக்கிய காரணம், ஏனைய சூரியத் தொகுதியின் குழந்தைகள் போல இது சூரியனை அண்மிக்கும் போது வெப்பமாகி பனித்துகள்களை வெளியிடவில்லை (வால்வெள்ளிகள் போல).

முக்கிய விடையம் இதன் வடிவம் – பார்க்க சுருட்டு போல வடிவம் கொண்டதாக இது இருக்கிறது. 800 மீட்டார் நீளம் ஆனால் வெறும் 80 மீட்டார் அகலத்தைக் கொண்டது. மேலும் ஒவ்வொரு 7 மணி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இது சுழல்கிறது.

இதன் மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு நிறம், காஸ்மிக் கதிர்களால் இந்த விண்கல் தாக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் நமக்கு சொல்கிறது. மேலும் இதன் பயணப்பாதையும், செக்கனுக்கு 20 கிமீ என்கிற வேகமும் சூரியனின் ஈர்புவிசைக்கு இது கட்டுப்பட்டதல்ல என்றும் சொல்கிறது, எனவே இது நிச்சயம் வேறு ஒரு விண்மீனில் இருந்து வந்திருக்கவேண்டும் என்று கருத வைக்கிறது.

அடுத்த முக்கிய விடையம் இதன் கட்டமைப்பு – இது சுழலும் வேகத்திற்கு வெறும் பாறைகளால் ஒன்றுசேர்க்கப்பட்ட விண்கல் என்றால் சிதறியிருக்க வேண்டும். ஆனால் இதன் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. எனவே நிச்சயம் உலோககட்டமைப்பை இந்த விண்கல் கொண்டிருக்கவேண்டும். மேலும், இதன் வடிவம் இயற்கைக்கு முரணானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காரணம், இப்படியான விண்கற்களை உருவாக்கும் செயற்பாடு, அதாவது விண்மீனைச் சுற்றிவரும் ஒரு விண்கல்லை மிக வேகமாக சுழற்றி வீசும் செயற்பாடு வியாழன் போன்ற பாரிய கோள் ஒன்றுக்கு அருகில் விண்கல் ஒன்று வரும் போது இடம்பெறலாம். ஆனாலும் இப்படியான மிக வேகமான என்கவுண்டர்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் அளவுக்கதிகமான இயக்கசக்தியை உள்ளடக்கியிருக்கும். அந்தவேளையிலும் இப்படியான நீளமான வடிவத்தை எப்படி ஒரு விண்கல் தக்கவைத்திருக்கும் என்பது இதுவரை புரியாத புதிரே!

எனவேதான் சில விஞ்ஞானிகள் ‘ஏன் இது ஒரு எலியன் விண்கலமாக இருக்ககூடாது?’ என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். SETI – Search for Extraterrestrial Intelligence என்கிற அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் ரேடியோ தொலைநோக்கிகளைக் கொண்டு விண்ணில் இருக்கும் ஏலியன்ஸ் தொடர்பாடலை தேடுபவர்கள். இவர்களின் கருத்துப்படி, இந்தன் தூதுவன் ஒரு ஏலியன் விண்கலமாக இருப்பின் நிச்சயம் இது ரேடியோ அலைகளை ஒலிபரப்பும் எனவே இதனைக் கண்டறிய SETI யின் Allen Telescope Array யைப் பயன்படுத்தி இவர்கள் ‘Oumuamua வில்  இருந்து இப்படியான ரேடியோ கதிர்வீச்சு வருகிறதா என்று தேடியும் எதுவும் அகப்படவில்லை!

எனவே இவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்டனர். நம்மை விட்டு மிக வேகமாக இது விலகிச் செல்வதால், அதற்கிடையில் Breakthrough Listen ப்ராஜெக்ட் மூலம் 100 மீட்டார் அளவுள்ள Green Bank தொலைநோக்கியைப் பயன்படுத்தி 10 மணித்தியாலங்களுக்கு இதிலிருந்து ஏதாவது ரேடியோ சிக்னல்கள் வருகிறதா என்று இவர்கள் ஆய்வுசெய்வார்கள்.

Green Bank ரேடியோ தொலைநோக்கி. படவுதவி: National Radio Astronomy Observatory

அந்த விண்கல்லில் இருந்து ஒரு செல்போன்னின் சிக்னலைக் கூட துல்லியமாக கண்டுபிடித்துவிடக்கூடிய சக்தியைக் கொண்டது Green Bank தொலைநோக்கி. ஆனாலும் டிசம்பர் 14 வரை இதிலிருந்து எந்தவொரு சிக்னல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று breakthrough Listen அறிவித்துள்ளது. ஆறு மணிநேரங்கள் நீடித்த இந்தத் தேடல் 90 டெராபைட் அளவு தரவுகளை திரட்டியுள்ளது. ஆனாலும், மேலும் மூன்று கட்ட அவதானிப்பை மேற்கொள்ளப்போவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.

பெரும்பாலான அறிவியலாளர்கள் இது வேறு ஒரு விண்மீனில் இருந்து வந்த வெறும் விண்கல் என்றே கருதுகின்றனர், இருப்பினும் மிகநுண்ணிய ஏலியன்ஸ் விண்கல சாத்தியக்கூறையும் ஆராய்ந்துவிடவேண்டும் என்பது விஞ்ஞானஆர்வம்!

ஏலியன்ஸ் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக பொதுமக்களுக்கும் அறிவிப்போம் என்று Breakthrough Listen அமைப்பு கூறியுள்ளது.

தகவல்: scientific american