சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

சூரியத் தொகுதி என்பது சூரியனையும், எட்டு கோள்களையும் மாத்திரம் கொண்டதல்ல. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் சிறுகோள் பட்டி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதிலே பில்லியன் கணக்காக சிறய சிறுகோள்கள் / விண்கற்கள் காணப்படுகின்றன. அதேபோல புளுட்டோ (முன்னொரு காலத்தில் கோள் – தற்போது அந்த அந்தஸ்த்தை இழந்துவிட்ட குறள்கோள்) சஞ்சரிக்கும் பிரதேசம் கைப்பர் பட்டி எனப்படுகிறது, இங்கே புளுட்டோ போல பல பனிப்பாறையால் உருவான குறள்கோள்கள் காணப்படுகின்றன. அதையும் தாண்டி ஊர்ட் மேகம், இங்கே இருந்து வால்வெள்ளிகள் சூரியனை அவ்வப்போது சந்தித்துவிட்டு மீண்டும் செல்லும். சில வால்வெள்ளிகள் சூரியனில் மோதுவதும் உண்டு.

கடந்த அக்டோபர் 19 இல் Pan-STARRS1 என்கிற தானியங்கி தொலைநோக்கி முதன் முதலாக ஒரு வான் பொருளை அவதானிக்கிறது. அதனிடம் இருந்த மென்பொருளினால் இந்தப் பொருளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள், இந்தப் பொருள் சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்களை முடிவுக்கு கொண்டுவந்தது. அதற்குக் காரணம் அதனது பயணப்பாதை.

Artist’s impression of the interstellar asteroid `Oumuamua
முதலாவது தூதுவன் என்னும் Oumuamua. படத்தை கிளிக் செய்வதன் மூலம் பெரிய படத்தை பார்வையிடலாம். படவுதவி: ESO/M. Kornmesser

சூரியன் தோன்றி அதன் பின்னர் அதை தட்டையான பாதையில் சுற்றிவந்த தூசு துரும்புகளில் இருந்தே சூரியத் தொகுதியில் இருக்கும் கோள்கள், விண்கற்கள், சிறுகோள்கள், குறள்கோள்கள் என்பன உருவாகின, ஆகவே இவற்றின் பயணப்பாதையும் சூரியனைச் சுற்றி அண்ணளவாக சமதளத்திலேயே அமைந்துள்ளது. தொலைவில் உள்ள சிறிய பொருட்களான குறள்கோள்கள், வால்வெள்ளிகள் என்பன இந்த சமதளத்தை விட்டு சற்றே விலகிய சுற்றுப்பாதையைக் கொண்டிருந்தாலும், கோள்கள் சுற்றிவரும் தட்டையான சமதளத்திற்கும்’ இவற்றின் பயனப்பாதைகளுக்கும் பாரிய இடைவெளி இல்லை.

ஆனால் இந்த புதிய ஆசாமியின் பயணப்பாதை ஏனைய சூரியத் தொகுதிப் பொருட்களின் பாதையைவிட மிகவும் வேறுபட்டதாகக் காணப்பட்டது. ஆகவே இது சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

இதனது பயணப்பாதை சூரியத் தொகுதிக்கு மேலே இருந்து, சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான சுற்றுப் பாதையின் கீழே நுழைந்து மீண்டும் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான பாதையில் மீண்டும் மேலெழும்பி செக்கனுக்கு 44கிமீ வேகத்தில் செல்கிறது.

Oumuamua இன் பயணப்பாதை – செக்கனுக்கு 44கிமீ வேகத்தில் சூரியத் தொகுதியை கடக்கிறார் இந்த ஆசாமி. படவுதவி: NASA/JPL-Caltech

இந்த விண் பொருளுக்கு “1I/2017 U1 ‘Oumuamua’” என பெயரிட்டுள்ளனர். “Oumuamua” என்றால் ஹவாயன் மொழியில் “முதலாவது தூதுவன்” என்று பொருளாம்!

இதனது பயணப்பாதை மட்டுமே இதனை சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வந்த பொருள் என்று ஆய்வாளர்களை முடிவெடுக்க வைக்கவில்லை. ஊர்ட் மேகப்பகுதியில் இருந்துவரும் வால்வெள்ளிகளின் பாதைகளும் சிலவேளைகளில் கோள்கள் சுற்றும் சமதளத்திற்கு குறுக்காக அமைவதுண்டு. ஆனால் Oumuamua வால்வெள்ளிகளைப்போல சூரியனை நெருங்கும் போதுவெப்பமடைந்து தூசு துணிக்கைகளை வால்வெள்ளிகள் வெளியிடுவது போல வெளியிடவில்லை. இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், வால்வெள்ளிகள் வெளியிடும் தூசுகளின் அளவில் 10 மில்லியனில் ஒரு பங்கு கூட இந்த Oumuamua வெளியிடவில்லை. மேலும் இதனில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறமும் இதனை சேதன மூலப்பொருட்கள் நிரம்பிய ஒரு சிறுகோள் என்றே கருத வைக்கிறது.

comet20171025-16
Oumuamua இன் பயணப்பாதை. படத்தை கிளிக் செய்வதன் மூலம் பெரிய படத்தை பார்க்கலாம். படவுதவி: NASA/JPL-Caltech

இந்த “முதல் தூதுவனது” வடிவமும் சற்றே விசித்திரமாக குழாய் வடிவில் கானபப்டுகிறது. 80மீட்டர் குறுக்களவு கொண்டதும் 800மீட்டார் நீளமுமான வடிவில் இந்த சிறுகோள் தோற்றமளிக்கிறது. மேலும், இதனது பயண வேகத்தை அவதானிக்கும் போது இந்த வடிவத்தை செக்கனுக்கு 44கிமீ என்கிற பயண வேகத்தில் பேணவேண்டும் என்றால், மிகவும் வலிமையான உட்கட்டமைப்பை Oumuamua கொண்டிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெரிய கோள்களின் ஈர்ப்புவிசை சிறிய விண்பொருட்களின் பாதையை மாற்றியமைத்தது சூரியத் தொகுதியினுள் இழுத்துவரக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியாகத் தான் விண்மீனிடைப் பிரதேசத்தில் இருந்து Oumuamua வும் சூரியத் தொகுதிக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

இதிலே கவனிக்கவேண்டிய முக்கிய விடையம், சூரியத் தொகுதியின் வெளிப்புறப் பிரதேசத்தில், அதாவது கைப்பர் பட்டி, ஊர்ட் மேகப் பிரதேசத்தில் இருக்கும் ஏனைய விண் பொருட்களைவிட Oumuamua வேறுபட்டதாக காணப்படுகிறது. பொதுவாக விண்ணியலாளர்கள் சூரியத் தொகுதியின் வெளிப்புறப் பிரதேசத்தில் இருக்கும் பொருட்கள், ஊர்ட் மேகப்பகுதியில் இருக்கும் பொருட்களைப் போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், Oumuamua என்னும் முதல் தூதுவன், கதை அப்படிப்பட்டதல்ல என்று எனக்கு சான்று ஒன்றைக் கொடுத்துவிட்டு தற்போது மறைந்துகொண்டிருகிறார்.

Pan-STARRS1 இன் மெருகேற்றிய மென்பொருள் இதனைப் போல பல விண்மீனிடைவெளி விருந்தாளிகளை விரைவிலேயே கண்டறியும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தகவல்: ArsTechnica, Nature


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam