Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

வெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

ஆனால் புதிய கணணிக் கணிப்பீடுகள் (computer simulations) இந்தக் கோள் habitable zone இனுள் இருந்தாலும், இதன் தாய் விண்மீனில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சு, இந்தக் கோளின் வளிமண்டலத்தை அழித்திருக்கும் எனக் காட்டுகிறது.

இந்தப் புதிய ஆய்வு Proxima b கோள் தாய் விண்மீனில் இருந்துவரும் கதிர்வீச்சுக்களை தாங்குமா என்று கண்டறியவே செய்யப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வெளியீடு இங்கே உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கான சாத்தியத்தை பலமாக குறைத்துள்ளது எனலாம்.

புறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தைப் பற்றி இலகுவாக அறிவதற்கு, அந்தக் கோள் தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது, தாய் விண்மீனின் ஒளி, கோளின் வளிமண்டலத்தை கடந்துவரும். அப்படிக் கடந்துவரும் ஒளியை ஆய்வு செய்வதன் மூலம் குறித்த கோளின் வளிமண்டலத்தில் எப்படியான மூலக்கூறுகள் மற்றும் வாயுக்கள் காணப்படுகின்றன என்று அறிந்துகொள்ள முடியும்.

ஓவியரின் கைவண்ணத்தில் Proxima b கோள். படவுதவி: ESO/M. Kornmesser

Proxima b ஐ பொறுத்தவரை இந்தச் உத்தியைக் கையாளமுடியாது. காரணம், எமது பூமிக்கும், Proxima Centauri க்கும் இடையில் இந்தக் கோள் கடப்பதில்லை. ஆகவே இதன் வளிமண்டலக் கூறுகளை ஆய்வு செய்வது என்பது சற்றே கடினமான விடையம்தான்.

எனினும், Proxima Centauri போன்ற சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடும் அதேவேளை, சூரிய கதிர்புகளும் (solar flare) அடிக்கடி இப்படியான விண்மீன்களில் ஏற்படும். ஆபத்தான புறவூதாக் கதிர்வீச்சுக்களும், சூரிய கதிர்ப்புகளும் மிக அருகில் சுற்றிவரும் Proxima b போன்ற கோளில் மிகவும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

குறிப்பாக வளிமண்டலத்தை அழித்ததுடன் தொடர்ச்சியாக கோளின் மேற்பரப்பில் இந்தக் கதிர்வீச்சு தாக்கியிருக்கும். அதி சக்திவாய்ந்த புறவூதாக் கதிர்வீச்சு, கோளின் வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களை அயனாக்கியிருக்கும். இப்படியாக ஏற்றம் கொண்ட அணுக்கள், இலகுவாக கோளின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பித்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடரான செயற்பாடாக இடம்பெற்று மொத்த வளிமண்டலமும் கரைந்துபோக வழிவகுத்திருக்கும்.

சூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் கதிர்வீச்சை விட பல நூறு மடங்கு அதிகமாக அதன் தாய் விண்மீனில் இருந்து Proxima b கோள் கதிவீச்சை பெறுகிறது. இதன் காரணமாக, ஹைட்ரோஜன் போன்ற எளிதான அணுக்கள் மட்டுமின்றி, ஆக்ஸிஜன் போன்ற பாரமான அணுக்களும் வளிமண்டலத்தை விட்டு வெளியேறியிருக்கும்.

இந்தக் கோள் பூமிக்கும், அதன் தாய்க் கோளான Proxima Centauri க்கும் இடையில் கடப்பது இல்லை என்பதால், எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்று நேரடியாக அளக்க முடியாததால், கணணிக் கணிப்புகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எவ்வளவு வேகமாக, எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்பதனைக் கணக்கிடுகின்றனர்.

இந்தக் கணனிக் கணிப்பீட்டில் இருந்து தெரிய வருவதாவது, பூமி இழக்கும் வளிமண்டலத்தின் அளவை விட 10,000 மடங்கு வேகமாக Proxima b தனது வளிமண்டலத்தை இழக்கிறது.

ஆனால் இது வெறும் சராசரி கணக்கீடு மட்டுமே என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் கருத்து.

மேலும், குறித்த கோளின் துருவங்களின் அளவு, புற வளிமண்டலத்தின் வெப்பநிலை என்பவற்றையும் கருத்தில் கொண்டால், பூமியின் அளவுள்ள வளிமண்டலத்தை இழக்க கூடியபட்சம் இரண்டு பில்லியன் வருடங்களும், குறைந்த பட்சம் வெறும் நூறு மில்லியன் வருடங்களும் எடுக்கும் என்பது கணிப்பீட்டின் முடிவு.

இங்கு உயிரினங்கள் தொன்றியிருப்பதர்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கருதினாலும், முற்றிலுமாக அதனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. பாரிய எரிமலை வெடிப்பு, விண்கற்கள்/சிறுகோள்கள் மோதுகை என்பன வளிமண்டல இழப்பை நீடித்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இயற்கையின் கைவண்ணத்தில் சாத்தியப்படாதது என்று நாம் எதனை முடிவெடுத்துவிடமுடியும்?

தகவல்: NASA, The Astrophysical Journal Letters, New Atlas


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam