சூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்? விடை தெரிந்தது!

நவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விருந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். ஊர்ட் மேகப் பிரதேசத்தில் இருந்துதான் நீண்டகால வால்வெள்ளிகள் வருகின்றன, அதனால் தான் இந்த சுருட்டு போன்ற வடிவம் கொண்ட விண்கல் சூரியத் தொகுதிக்குள் நுழைய, இது ஊர்ட் பிரதேசத்தில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்று முதலில் கருதப்பட்டது.

இந்த விருந்தாளியைப் பற்றிய கட்டுரைகளை வாசிக்க

சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

ஏலியன் விண்கலமா? இல்லை விண்வெளி அகதியா? தேடல் தொடங்குகிறது

குறித்த விண்கல்லிற்கு Oumuamua என பெயரிட்டனர். அப்படியென்றால் ஹவாய் மொழியில் ‘தூர தேசத்தில் இருந்து வந்த தூதுவன்’ என்று அர்த்தமாம். எப்படியோ, இது எங்கிருந்து வந்திருக்கலாம் என்கிற ஆய்வு அதன் பின்னர் தொடர்ந்தது. தற்போது இதற்கான விடை கிடைத்து விட்டதாக விண்ணியலாளர்கள் கருதுகிறனர்.


ஓவியரின் கைவண்ணத்தில் ‘Oumuamua விண்கல். படவுதவி: ESO/M. Kornmesser

சூரியனுக்கு அருகில் இந்த விண்கல் வந்த போது இதன் வேகம் திடீரென அதிகரித்ததை அவதானிக்கக்கூடியவாறு இருந்து. இதற்குக் காரணம் வால்வெள்ளிகள் போல இந்த விண்கல்லில் இருந்த பனிப்பாறைகள் சூரிய வெப்பத்தால் உருகி இதிலிருந்து வெளிவந்த நீராவி இந்த விண்கலத்தை உந்தி வழமையை விட சற்றே வேகமாக செலுத்தியுள்ளது.

இதையெல்லாம் வைத்து கணக்கிட்டு Oumuamua எங்கிருந்து வந்திருக்கலாம் என்று பின்னோக்கி பார்த்த போது, ஐரோப்பிய காயா திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருக்கும் சில விண்மீன்களின் இடத்தை நோக்கி இந்த விண்கல்லின் பாதை இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது என்று இதனை ஆய்வு செய்த விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.

சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வரும் ஒரு பொருளின் பாதையை கணிப்பது என்பது அவளவு சுலபமான காரியமில்லை. அது வரும் பாதையில் இருக்கும் வேறு விண்மீன்களின் ஈர்ப்புவிசை காரணமாகவும் அதன் பாதையில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் இல்லையா, அதனால் அதனையும் கருத்தில் கொண்டு இவ் விஞ்ஞானிகள் குறித்த விண்கல்லின் பாதையை கணக்கிட்டுள்ளனர்.

கிடைத்த தரவுகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இந்த விண்கல் பிறந்திருக்ககூடிய இடம் என்று நான்கு விண்மீன்களை இவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். HIP 3757 எனும் ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன், HD 292249 எனும் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன், மற்றும் பெயர் வைக்கப்படாத இரண்டு விண்மீன்கள்.

இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் இருந்துதான் Oumuamua வந்திருக்கவேண்டும். மேலும், அது உருவாகிய விண்மீன் தொகுதியில் நிச்சயம் வியாழனைப் போன்ற பாரிய வாயு அரக்கன் வகை கோள் ஒன்றாவது இருக்கவேண்டும், காரணம், அப்படியான பாரிய கோளின் ஈர்ப்புவிசை தான் இந்த பிரபஞ்ச விருந்தாளியை அதன் தாய் விண்மீன் தொகுதியில் இருந்து தூக்கி எறிந்திருக்கவேண்டும்.

ஆனால் இந்த நான்கு விண்மீனைச் சுற்றியும் இதுவரை நாம் ஒரு கோளைக்கூட கண்டறியவில்லை. அதற்காக அங்கே கோள்கள் இல்லை என்று கருதமுடியாது, நாம் இதுவரை அவற்றை அவதானிக்கவில்லை, எனவே அங்கே கோள்கள் இருக்கலாம்.