அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

திருக்குறள்

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி டோக்கியோவின் சிபுயா ரயில் நிலையத்தின் முன்னே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அவர்கள் கூடியிருப்பது ஒரு நினைவு தினத்திற்காக, ஒரு நற்பின் இலக்கணத்திற்காக, ஒரு விசுவாசத்தின் அடையாளத்திற்காக — அந்த அடையாளத்தின் பெயர் ஹச்சிகோ, அது ஒரு நாய்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நாய்க்கு ஜப்பானில் ஏன் இவ்வளவு மரியாதை? அதன் முடி கூட இன்றுவரை தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் சிலைகளையும், படங்களையும் ஜப்பான் மக்கள் ஆர்வமாக வாங்கி தங்கள் வீட்டில் வைத்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஹச்சிகோ ஒரு கோல்டன் பிரவுன் நிற அகிரா வகை நாய். நவம்பர் 10, 1923 இல் பிறந்த இந்த நாயை 1924 இல் ஹைசபியோரோ உனோ என்கிற வேளாண்மை விஞ்ஞானி ஹச்சிகோவை தனது செல்லப்பிராணியாக எடுத்துக்கொள்கிறார். உனோ ஒவ்வொரு நாளும் காலையில் சிபுயா ரயில் நிலையத்தில் இருந்து டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்வார். இவர் வேலைக்கு செல்லும் போதும் மீண்டும் மாலையில் வேலைவிட்டு வரும் போதும் இவரை ரயில் நிலையத்திற்கே சென்று ஹச்சிகோ வரவேற்கும்.

ஹச்சிகோ எனும் நண்பன்

மே 21, 1925 அன்று வேலைக்கு சென்ற உனோ மீண்டும் அந்த ரயில் நிலையத்தில் கால் பதிக்கவில்லை. அதற்குக் காரணம் பல்கலையில் படிப்பித்துக்கொண்டிருக்கும் போதே உனோவின் உயிர் அவரைவிட்டு பிரிந்துவிட்டது. ஆனாலும், தன் நண்பரும், அன்பருமான உனோ ரயிலில் வந்துவிடுவார் என்று ஹசிக்கோ காத்திருந்தது ஒரு நாளோ இரண்டு நாட்களோ அல்ல.

அடுத்த ஒன்பது வருடங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பதினைந்து நாட்களுக்கு ஹச்சிகோ ஒவ்வொரு நாளும் ரயில் வரும் நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு சென்று உனோவின் வருகைக்காக காத்திருந்தது.

இந்த நாயின் செயலைக் கண்ட பலரும் சில நாட்களில் காரணத்தை உணர்ந்துகொண்டனர். அடிக்கடி ரயிலில் வருபவர்கள் ஹச்சிகோவை ஊனோவுடன் பார்த்திருந்தனர். அதில் உனோவின் மாணவர் ஒருவர் ஹச்சிகோவை பின்தொடர்ந்து சென்று அது சென்ற வீட்டை கண்டறிந்து அங்கிருந்த உனோவின் முன்னாள் தோட்டக்காரரிடம் இருந்து இந்த நாயின் நற்பின் இலக்ணத்தை கண்டர்ந்தார்.

1932 இல் இந்த மாணவர் எழுதிய கட்டுரை ஹச்சிகோவிற்கும் உனோவிற்கும் இருந்த சொல்லவொண்ணா அன்பின் அடையாளத்தை ஜப்பான் மக்களுக்கு தேசியளவில் கொண்டு சேர்த்தது.

மனிதன் எப்படி வாழவேண்டும் என்று ஜப்பான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஹச்சிகோவை சாட்சியாக காட்டினர்.

மார்ச் 8, 1935 இல் ஹச்சிகோ தனது உயிரை விட்டது. இந்தக் கதையைக் கேட்டபோது, நிச்சயம் உனோவுடன் ஹச்சிகோ சேர்ந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஹச்சிகோ இறந்த போது, ரயில் அதிகாரிகள் மற்றும் உனோவின் சொந்தங்கள் ஹச்சிகோவின் உடலுக்கு மரியாதை செய்யும் போது.

இறந்த ஹச்சிகோவின் உடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல் அன்பரும் நண்பருமான உனோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

உனோவின் சமாதிக்கு அருகிலேயே உறங்கும் ஹச்சிகோ

ஹச்சிகோவின் ஞாபகார்த்தமாக அந்த ரயில் நிலையத்தின் முன்னே ஹச்சிகோவிற்கு ஒரு சிலை இருக்கிறது. மேலும் மார்ச் 9, 2015 இல் டோக்கியோ பல்கலையின் வேளாண்மை துரையின் கட்டடத்தின் முன்னே ஹச்சிகோ மகிழ்ச்சியாக உனோவை பார்த்து பாய்வது போன்ற ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

ஹச்சிகோ – இன்று நிரந்தரமாகவே ஜப்பான் மக்களுக்கு ஓர் நட்பின் இலக்கணமாக நிலைத்துவிட்டது. ஜப்பான் மக்களுக்கு என்று கூறிவிட முடியாது, உலக மக்களுக்கே ஒரு உதாரணமாக வாழ்ந்தது என்று கூறலாம்.

Previous articleசூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்? விடை தெரிந்தது!
Next articleலார்ட் ஒப் தி ரிங்க்ஸ்: இரண்டு கலாக்ஸிகள்