லார்ட் ஒப் தி ரிங்க்ஸ்: இரண்டு கலாக்ஸிகள்

விண்வெளியில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன. கரும் இருட்டு விண்கற்கள் தொகுதிகளும், அதில் மணிக்கு 50,000 கிமீ வேகத்தில் பயணிக்கும் விண்கற்களும் ஒரு புறம், ஒரு பில்லியன் அணுகுண்டுகளை விட சக்திவாய்ந்த வெடிப்பில் முடியும் விண்மீன்கள் மறுபுறம். ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேலாக இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பது கருந்துளைதான்.

இந்தக் கட்புலனாகா அரக்கன் விண்வெளியில் பயணிக்கும் போதே தனக்கு அருகில் வரும் எவரையும் கபளீகரம் செய்துவிடும். இவை ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. பாறைகள், விண்மீன்கள், ஒளியைக் கூட விழுங்கிவிடும்! இதனால்தான் கருந்துளைகளால் உருவான பாரிய வளையங்களின் கண்டுபிடிப்பு எம்மை பயமுறுத்துகிறது.

இந்தக் கருப்பு ரகசியத்தை ஒழித்துவைத்திருக்கும் விண்மீன் பேரடையை படத்தின் வலப்பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். இங்கே கருந்துளைகள் பிரகாசமான நீலம், பிங்க் நிறப் புள்ளிகளுக்குள் மறைந்திருக்கின்றன.

X-ray: NASA/CXC/INAF/A. Wolter et al; Optical: NASA/STScI

மனித இனத்தை ஆளக்கூடிய சக்தி இந்த மோதிரத்திற்கு இல்லாவிடினும், இந்த மோதிர அமைப்பு பால்வீதியை விட மூன்று மடங்கு பெரிய அளவான பிரதேசத்தை உள்ளடக்கி இருக்கிறது – இதனால் இதனை நாம் உண்மையான லார்ட் ஒப் தி ரிங்க்ஸ் எனலாம்!

இந்த வளையம் போன்ற அமைப்பு இரண்டு விண்மீன் பேரடைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் உருவாகியது. அந்த உக்கிரமான மோதல் பாரிய அதிர்ச்சிஅலையை உருவாக்க, விண்மீன் பேரடையில் இருந்த வஸ்துக்கள் வெளிநோக்கி தள்ளப்பட்டு ஒரு வளையம் போன்ற அமைப்பாக உருவாக்கிவிட்டது. இந்தக் கட்டமைப்பில் புதிதாக விண்மீன்களும் பிறந்தன, பின்னர் அவை கருந்துளைகளாக மாறிவிட்டன.

கருந்துளைகள் ஒளியைக் கூட உறுஞ்சிவிடுமே பின்னர் எப்படி எம்மால் இதனைக் கண்டறியக் கூடியவாறு இருந்தது?

படத்தில் இருக்கும் பிரகாசமான பிங்க் நிற பகுதிகள் மிகச் சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்களை வெளியிடுகின்றன. எக்ஸ்-கதிர்களை எமது கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், அதனை புகைப்படம் எடுக்கும் திறன் கொண்ட தொலைநோக்கிகளை நாம் உருவாக்கியுள்ளோம்.

மிகச் சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்வீச்சு கருந்துளைகளில் இருந்தே வருகிறது. (சில வேளைகளில் சக்திவாய்ந்த நியுட்ரோன் விண்மீனில் இருந்தும் வரலாம்). இப்படியான கருந்துளைகளுக்கு / நியுட்ரோன் விண்மீன்களுக்கு அருகில் இருக்கும் விண்மீனில் இருக்கும் வஸ்துக்களை இவை கபளீகரம் செய்வதாலேயே இப்படியான சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்வீச்சு உருவாகிறது.

கருந்துளையை நோக்கி பொருட்கள் (தூசுகள், வாயுக்கள்) விழும் போது நீர்ச் சுழல் போல கருந்துளையைச் சுற்றி ஒரு தட்டை வடிவில் இவை மிக வேகமாக சுழலத் தொடங்கும். இப்படிச் சுழலும் தகடு போன்ற அமைப்பு வேகமாக சுழல்வதால் வெப்பம் அதிகரித்து அங்கிருந்து எக்ஸ்-கதிர் வெளியீடாக உருவாகும்.

ஆனாலும் இந்த லார்ட் ஒப் தி ரிங்க்ஸ்சை பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை. காரணம், இது இங்கிருந்து 300 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. மேலும் இவற்றைப் பற்றிப் படிப்பது விண்மீன் பேரடைகள் மோதும்போது எப்படியான நிகழ்வுகள் இடம்பெறலாம் என நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது.

மேலதிக தகவல்

வளைய வடிவத்திற்கு உள்ளே பிங்க் நிறத்தில் பிரகாசமாக தெரியும் புள்ளி ஒரு பெரும்திணிவுக் கருந்துளை ஆகும். வளையத்தில் இருக்கும் கருந்துளைகள் நமது சூரியனைப் போல சில மடங்கு திணிவாக காணப்படும், ஆனால் இந்த பெரும்திணிவுக் கருந்துளை சூரியனைப் போன்று பல மில்லியன் மடங்கு திணிவைக் கொண்டது!