இரத்தத்தின் நிறம் சிவப்பு… சிவப்புதானா?

மனிதனின் இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களின் இரத்தத்தின் நிறமும் சிவப்பா என்றால் இல்லை என்பதே பதில். இந்தக் கட்டுரையில் எந்தெந்த நிறங்களின் உயிரினங்களின் இரத்தம் இருக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

இரத்தம் என்றால் என்ன?

அநேக அங்கிகளில் உடல் பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை கொண்டு சேர்க்கும் ஒரு திரவமே இரத்தம். பல்வேறு பட்ட இரத்தக் கலங்களால் ஆக்கப்பட்ட இந்த தொகுதிக்கு நாயகன் இதயம். இதயத்தில் இருந்து பம்ப் செய்யப்பட்டு இரத்தநாளங்கள் ஊடாக அங்கியின் பாகங்களுக்கு இரத்தம் காவிச்செல்லப்படும்.

இரத்தத்தை குருதி என்றும் அழைப்பர்.

இரத்தம் இல்லாத உடலைக் கொண்டுள்ள அங்கிகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் கீழே பார்க்கலாம்.

சிவப்பு

முள்ளந்தண்டு உள்ளவை என வகைப்படுத்தப்படும் அங்கிகளின் உடலில், அதாவது மனிதன் போன்ற பாலூட்டிகள் உள்ளடங்கலாக சிவப்பு நிற இரத்தம் காணப்படுகின்றது. மேலும் இந்த இரத்தம் மூடிய ஒரு சுற்றுத் தொகுதியினுள், அதாவது இரத்தநாளம் மற்றும் நரம்புகளின் உள்ளே காணப்படுகிறது. சிவப்பாக இருக்க காரணம் இரத்தக் கலங்களில் இருப்பு செறிவாக இருக்கும் ஹீமோகுளோபின் (hemoglobin) எனும் வஸ்து இருப்பதலாகும்.

நீலம்

ஆக்டோபஸ் எனப்படும் கணவாய் போன்ற முள்ளந்தண்டு இல்லாத அங்கிகளின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் ஹீமோசியானின் (hemocyanin) என்கிற வஸ்து. இது ஆக்சிஜனை காவிச் செல்ல உதவுவதுடன், செப்பு செறிந்து காணப்படுவதால் இது சிவப்பிற்கு பதிலாக நீல நிறத்தில் இருக்கிறது.

ஆக்டோபஸ்

இதில் குறிப்பு என்னவென்றால், ஆக்சிஜன் ஏற்றப்பட்ட நிலையில் தான் இது நீல நிறத்தில் காணப்படும், ஆக்சிஜன் இல்லது போனால் ஹீமோசியானின் நிறத்தை இழந்துவிடும்.

ஹீமோசியானின் மூலக்கூற்றில் இரண்டு செப்பு அணுக்கள் இருக்கின்றன, இதனால் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறை சிறைப்படுத்தமுடியும்.

ஆக்டோபஸ் தவிர, நத்தை, அட்டை, மட்டிகள் போன்ற மெல்லுடலிகள் வகையைச் சார்ந்த உயிரினங்கள், ஆத்திரப்போடா வகையறாக்களான நண்டு, இறால் மற்றும் லோப்ஸ்தர் போன்றவற்றிலும் ஹீமோசியானின் நிறமிகள் (pigments) காணப்படுகின்றன.

பச்சை

முள்ளந்தண்டுள்ளவை சிவப்பு இரத்தத்தைக் கொண்டிருக்கும் என்று பார்த்தோம், ஆனால் அதிலும் ஒரு விதிவிலக்கு இருக்கிறது – ஒரு வகையான அரணை (skink) இதன் பச்சை நிற இரத்தம் காரணமாக இதனை பச்சை-இரத்த அரணை என்றே பொதுவாக அழைக்கின்றனர். எல்லா முள்ளந்தண்டுள்ளவை போலவே இந்த அரணையின் இரத்தத்திலும் ஹீமோகுளோபின் இருக்கிறது. ஆனாலும் மிகச் செறிவாக பித்தப்பச்சை (biliverdin) காணப்படுவதால் இதன் இரத்தம் பார்க்க பச்சையாக இருக்கிறது.

பச்சை-இரத்த அரணை

பப்புவா நியு கினி நாட்டில் இருக்கும் இந்த பச்சை-இரத்த அரணை, ஆக்சிஜனை கடத்த ஹீமோகுளோபினை தான் பயன்படுத்துகிறது, பல விலங்குகளைப் போலவே, பயன்பட்ட ஹீமோகுளோபினை ஈரல் bilirubin மற்றும் biliverdin ஆக மாற்றுகிறது. மனிதனில் இந்த மூலக்கூறுகள் கழிவாக வெளியேற்றப்பட்டுவிடும். ஆனால் இந்த அரணையைப் பொருத்தமட்டில் இவை வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது – இதுவே இந்த பச்சை நிறத்திற்குக் காரணம் என்று உயிரியலாளர் கிறிஸ்டோபர் ஆஸ்டின் கூறுகிறார்.

மனிதர்களில் இந்தளவிற்கு பித்தப்பச்சை செறிவாக இருந்தால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள்!

இந்த அரணை தவிர சில புழுக்கள் மற்றும் அட்டைகளில் குளோரோக்குருவோரின் (chlorocruorin) எனப்படும் நிறமி காணப்படுவதால் இவற்றின் இரத்தமும் பச்சையாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் குளோரோக்குருவோரின் இருப்பதால் மட்டுமே இரத்தம் பச்சையாக இருந்துவிட முடியாது, அதற்குக் காரணம், சில புழுக்களில் குளோரோக்குருவோரின் இருந்தாலும், அதில் இருக்கும் ஹீமோகுளோபின் இந்த பச்சை நிறமியை மறைத்துவிடுகிறது.

மேலும் ஒரு தகவல் – மூடிய இரத்தச் சுற்றோட்டத் தொகுதியை முள்ளந்தண்டுள்ளவை கொண்டிருப்பது போல சில புழுக்கள் திறந்த சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டுள்ளன. கீழே உள்ள வீடியோவில் அதனை நீங்கள் பார்க்கலாம்

மஞ்சள்

பல்வேறுபட்ட பூச்சிகளில் இரத்தம் / இரத்தம் போன்ற திரவம் (circulatory fluid) மெல்லிய மஞ்சள், பச்சை மற்றும் நிரமற்றத்தாகவும் காணப்படுகிறன. நுளம்பு ஒன்றை நீங்கள் அடித்தால் அதிலிருந்து சிவப்பு இரத்தம் வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் அது நுளம்பின் இரத்தம் அல்ல – அது வேறு ஒரு விலங்கின் உறுஞ்சப்பட்ட இரத்தம் தான்.

பூச்சிகளின் உடலில் ஆக்சிஜன் இரத்தத் திரவத்தால் கடத்தப்படுவது இல்லை என்பதால் மூச்சுயிர்ப்பு நிறமிகளுக்கு (respiratory pigments) அங்கே அவசியமில்லை.

கடலட்டை

கடலட்டை கடல் நீரில் இருந்து வனேடியம் (வெண்ணாகம்) என்கிற மூலகத்தை பிரித்தெடுத்து அதன் இரத்தத்தில் சேர்க்கிறது. வனேடியம் வணபின்ஸ் எனும் புரதத்தை உருவாக்க பயன்படும் – இந்த புரதம் ஆக்சிஜன் உடன் சேர்ந்தால் மஞ்சள் நிறமாகும். சில வகையான கடலட்டைகளில் ஹீமோகுளோபின் காணப்படுகிறது.

ஆரெஞ்சு, வைலட், நிறமற்ற இரத்தம்

இறுதியாக, இந்த உலகில் உயிர்கள் பலவிதம் அதில் ஒவ்வொன்றில் இருக்கும் இரத்தமும் ஒருவிதம் என்று எம்மால் புரிந்துகொள்ளக்கூடியவாறு இருக்கிறது. குறிந்த அங்கியின் வாழ்விடம், அதன் கட்டமைப்பு, அதன் ஆக்சிஜன் தேவைப்பாடு என்பவற்றைப் பொறுத்து இரத்தத்தின் நிறமும் மாறுபடுகிறது.


Ocellated icefish (Chionodraco rastrospinosus)

அண்டார்டிக் கடலில் மிகுந்த குளிரில் வாழும் Ocellated icefish (Chionodraco rastrospinosus) எனும் மீனின் இரத்தம் நிறமற்றது! இதற்குக் காரணம் இந்த இரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் ஹீமொசியானின் போன்ற எந்தவொரு நிறமிகளும் இல்லை.

இதற்குக் காரணம் கூர்ப்புதான் – சூடான நீரைவிட குளிர்ந்த நீரில் அதிகளவான ஆக்சிஜன் அகப்பட்டிருக்கும். இந்த மீன் வாழும் ஆழத்தில் போதுமானளவு ஆக்சிஜன் நீரில் கரைந்திருப்பதால், வினைத்திறனாக ஆக்ஸிஜனைக் கடந்தவேண்டிய தேவை இந்த மீனின் இரத்தத்திற்கு இல்லை.

மேலும் இன்னொரு ஆச்சரியமான விடையம் இந்த icefish மீனில் செதில்கள் இல்லை — இதற்குக் காரணம் உடலின் எல்லப்பகுதியாலும் நீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுக்க இது உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.தகவல்கள் மற்றும் படங்கள்
nationalgeographic.com
owlcation.com