தற்போதைக்கு விண்வெளியில் எமக்கு இருக்கும் மிகப்பெரிய கண்கள் என்றால் அது ஹபிள் விண்வெளி தொலைநோக்கிதான். பூமியில் பல தொலைநோக்கிகள் இருந்தாலும் தனது 2.4 மீட்டார் அளவுள்ள ஆடியைக் கொண்டு பூமிக்கு மேலே அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இதுவரை பிரபஞ்சம் பற்றி அறிய அது எமக்கு அளித்த தகவல்கள் இந்தப் பிரபஞ்சம் பற்றிய எண்ணிலடங்கா புதிர்களை எமக்கு தீர்க்க உதவியது என்றால் அது மிகையாகாது.
ஹபிள் தொலைநோக்கியின் Ultra Deep Field புகைப்படம் பிரசித்தி பெற்றது. ஒரு மிகச் சிறிய விண்வெளி பகுதியில் 10,000 இற்கும் அதிகமான விண்மீன் பேரடைகள் இருப்பதை அந்தப்படம் எமக்கு காட்டியது. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் பில்லியன் கணக்கான விண்மீன்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அதே ஹபிள் தொலைநோக்கி மீண்டும் எமக்கு ஒரு அற்புத படத்தை தந்துள்ளது.
Abell 370 எனும் விண்மீன் பேரடைக் கொத்துதான் தற்போதைய படத்தின் கதாநாயகன். அண்ணளவாக 4 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் Abell 307 பிரதேசத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விண்மீன் பேரடைகளை முதன்முறையாக இந்தப் புதிய படத்தில் எம்மால் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

நான்கு பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்தும் எம்மால் எப்படி இவ்வளவு தெளிவாக Abell 370 ஐ பார்க்கக்கூடியவாறு இருக்கிறது என்று நீங்கள் சிந்திக்கலாம் – இதற்குக் காரணம், இங்கிருக்கும் மொத்த விண்மீன் பேரடைகளின் ஈர்ப்புவிசையும், அங்கே இருக்கும் கரும் பொருளால் உருவான ஈர்ப்புவிசையும் சேர்ந்து பிறப்பிக்கும் அதி சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை ஆகும்.
சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை ஒளியை வளைப்பதால் ஆடி ஒன்றின் ஊடாக ஒளி செல்வது போன்ற பொறிமுறை உருவாகிறது. இதனை gravitational lensing (ஈர்ப்பு வில்லை) என அழைக்கின்றனர்.
ஈர்ப்பு வில்லைகள் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
மிகச் சக்திவாய்ந்த எந்தவொரு ஈர்ப்புவிசையும் ஈர்ப்பு வில்லைகளை உருவாக்கும். இதனை ஒரு கருவி போலவே விண்ணியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். மிகத் தொலைவில் இருக்கும் விண்வெளிப் பொருட்களை எமக்கு அருகே காட்டும் ஒரு இயற்கையின் வரப்பிரசாதமாக இது இருக்கிறது.
Abell 370 இல் ஹபிளின் உணர்திறன் கருவிகளால் படம்பிடிக்க முடியாத விடையங்களைக் கூட இந்த ஈர்ப்பு வில்லைகள் மூலம் எம்மால் தெளிவாக பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.
இந்த ஈர்ப்பு வில்லைகளில் ஒளி அகப்பட்டதற்கு சான்றாக விண்மீன் பேரடைகள் வளையம் போன்ற அமைப்பில் வளைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இங்கே வெள்ளை/மஞ்சள் நிறங்களில் காணப்படும் விண்மீன் பேரடைகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் இருக்கின்றன, மேலும் இவை முதிர்ந்த விண்மீன் பேரடைகள். நீல நிறத்தில் இருப்பவை இளமையான பால்வீதி போன்ற சுருள் விண்மீன் பேரடைகள்.
இதில் ஒரு முக்கிய விடயத்தை நீங்கள் கவனிக்கலாம். கீழே உள்ள படத்தில் உருப்பெருக்கி காட்டப்பட்டுள்ள ஒரு விண்மீன் பேரடை டிராகன் என அழைக்கப்படுகிறது – காரணம் அதன் வடிவம். எப்படி நீளமாக இழுபட்டுக் காணப்படுகிறது என்று பாருங்கள். ஆனால் உண்மையில் இந்த விண்மீன் பேரடை இந்த வடிவமுடையதல்ல. ஈர்ப்பு வில்லையின் காரணமாக ஐந்து தனித் தனி விண்மீன் பேரடைகளை அருகருகே வைத்தது போன்று தென்படுகிறது.

ஈர்ப்பு வில்லைகளை பொறுத்தவரை தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளை எமக்கு காட்டுவதை விட வேறு பல அனுகூலங்களையும் கொண்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள Niels Bohr Institute இந்த ஈர்ப்பு வில்லைகளை பயன்படுத்தி எப்படி மிகப்பெரிய, பிரகாசமான விண்மீன் பேரடைகள் தோன்றின என்று ஆய்வு செய்கிறனர்.மேலும், பிரபஞ்சம் பெருவெடிப்பில் உருவாகி முதல் 800 மில்லியன் வருடங்களில் எவ்வளவு வேகமாக விண்மீன் பேரடைகள் உருவாகின என்றும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
விண்மீன் கொத்துக்களில் இருக்கும் கரும்பொருள் பற்றியும் இவர்கள் ஆய்வுகள் செய்வார்கள் என்று தனியாக கூறவேண்டியதில்லை. இப்படியான கொத்துக்களில் இருக்கும் கரும்பெருளின் அளவை அளப்பதுதான் முதல் படி. படத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் ஈர்ப்புவிசையை கழித்த பின்னர் எஞ்சும் ஈர்ப்பு விசைக்கு காரணம் கரும்பொருள் என்று கருதமுடியும்.
நன்றி: spacetelescope.org