உலகின் முதலாவது உயிரினகள் எப்போது தோன்றியது என்றால் சரியாக எம்மால் அதனைக் கூறிவிட முடியாது. ஆழ்கடலின் அடியில் இருக்கும் நீர்வெப்ப துளைகளுக்கு அருகில் படிமங்களாக கிடைத்த நுண்ணுயிரினங்கள் பூமியின் ஆதிவாசிகள் என பல விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
பூமி தோன்றி 4.54 பில்லியன் வருடங்கள் ஆகின்றது. இதில் சமுத்திரங்கள்தோன்றி 4.41 பில்லியன் வருடங்களே ஆகின்றன. எனவே நீரில் தோன்றிய உயிரினங்களின் காலம் இதற்கு பிறகே இருக்கவேண்டும். இப்படியான முதலாவது பூமியின் நுண்ணுயிரினங்கள் 3.37 பில்லியன் வருடங்களுக்கு முதலே தோன்றி இருக்கலாம் என்பது பல விஞ்ஞானிகளின் கருத்து. சிலர் உயிரினகள் 4.28 பில்லியன் வருடங்களுக்கு முன்னரே வித்தாகியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
தற்போதைய அவுஸ்திரேலியாவில் எமக்கு ஆதார பூர்வமாக கிடைத்துள்ள மிகப்பழைய நுண்ணுயிரினத்தின் படிமங்கள் 3.465 பில்லியன் பழமையானவை. ஆனால் இந்தக் கட்டுரை நுண்ணுயிரினங்கள் பற்றியது அல்ல மாறாக விலங்குகள் பற்றியது.
பூமியில் முதன் முதலில் சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட உயிரினங்களின் படிமங்கள் தோன்றத் தொடங்கிய காலமாக கம்பிரியன் வெடிப்பு (Cambrian Explosion) எனும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர். வெடிப்பு என்றால் உண்மையிலேயே எதோ வெடித்தது என்று கருதவேண்டாம். உயிரினப்பல்வகைமை விரிவடைந்ததற்கு சாட்சியாக இந்தக் காலப்பகுதி இருப்பதால் இதனை வெடிப்பு என அழைக்கின்றனர். இந்தக் கம்பிரியன் வெடிப்பின் காலத்தை ஆய்வாளர்கள் 540 – 542 மில்லியன் வருடங்களுக்கு முந்தையது என்று கணக்கிடுகின்றனர்.
கம்பிரியன் வெடிப்புக்கு முந்தைய காலத்தில் இருந்த உயிரினங்கள் எளிமையாக இருந்தன. ஒரு கல அங்கியோ (single cell organism), அல்லது சில கலங்களின் தொகுதியாக உருவாகிய அங்கிகளோ இங்கே காணப்பட்டன, ஆனால் அடுத்து வந்த 70 தொடக்கம் 80 மில்லியன் வருட காலப்பகுதியில், உயிரினப் பல்வகைமை பல்கிப்பெருகிற்று. நத்தைகள், ஆத்திரப்போடா வகையை சார்ந்த ஊர்வன போன்றவை இக்காலத்தில் உருவாகின. தற்போது இருக்கும் உயிரினங்களின் மூதாதேயர்களாக இவர்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியிலேயே தற்போது இருக்கும் விலங்குகளின் பகுதிகள் பல் உருவாகியது என்றும் எமக்கு தெரிகிறது. எனவே கம்பிரியன் வெடிப்பு உலகின் உயிரினத் தோற்றத்தில் மிக முக்கிய அம்சமாகும்.
558 மில்லியன் வருட பழமையான படிமம்
தற்போதைய புதிய கண்டுபிடிப்பு என்னவென்றால், கம்பிரியன் வெடிப்பிற்கான காலப்பகுதியை விட 20 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு விலங்கின் படிமம் (fossil) எமக்கு கிடைத்துள்ளது! இதுதான் தற்போதைக்கு எமக்கு கிடைத்த மிகப்பழமையான விலங்கின் எச்சம்.
இந்த புதிய அங்கி Dickinsonia என்கிற விலங்குப் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. Dickinsonia வை எடியகரன் கால உயிரினமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எடியகரன் காலம் எனப்படுவது 635 தொடக்கம் 542 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியாகும். இது கம்பிரியன் காலத்திற்கு முற்பட்டது.
இது ஒரு விலங்கு என்று கண்டறியக்காரணம் இதன் படிமத்தில் உள்ள கொழுப்பு கூறுகள் தான். விலங்குகளுக்கே உரித்தான கலங்களில் இருக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் சாட்சியாகின்றன.
தென்மேற்கு ரஸ்சியாவில் உள்ள மலைச் சரிவில் தான் இந்த படிமம் Ilya Bobrovskiy என்ற PhD மாணவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் எடியகரன் காலப்பகுதியைச் சேர்ந்த அங்கிகளில் உள்ள சேதனப்பொருட்கள் இதுவரை பாதுகாப்பாக இருப்பது தான் என்று இதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, கம்பிரியன் வெடிப்புக்கு முன்னரே சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட விலங்குகள் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கம்பிரிய காலத்து விலங்குகளை விட இவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுவதால், இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சு ஒன்று உள்ளது.
கம்பிரியனுக்கு முற்பட்ட காலத்து விலங்குகள் எப்படி கம்பிரியன் காலத்து விலங்குகளாக பரிமாணவளர்ச்சி அடைந்தன என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி!
எப்படியோ, இந்தப் புதிய கண்டுபிடிப்பு பற்றி பல உயிரியலாளர்களும் விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். காரணம், உலகின் உயிர்ப் பரிமாண வளர்ச்சியை பிரித்தறிவதில் இது முக்கிய கண்டுபிடிப்பு என்பதே அதற்குக் காரணம்.
தகவல்கள்: wikipedia, theguardian, the burgess shale museum