வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

நவம்பர் ஐந்தாகட்டும், தேங்க்ஸ்கிவ்விங் ஆகட்டும் அல்லது தீபாவளியோ சீன புதுவருடமே என்றாலும், உலகம் முழுதும் இருக்கும் மக்கள் வானவேடிக்கைகளை கண்டுகளிப்பதில் உற்சாகமடைவர்.

ஆனால் இயற்கை இந்த மனித வானவேடிக்கைகளை விடவும் தத்துரூபமான ஒளி விளையாட்டுக்களை கொண்டுள்ளது. கோளின் காந்தப்புலமும், சூரியனில் இருந்து வரும் சக்திவாய்ந்த அணுக்களும் சேர்ந்து “அரோரா” என்கிற மதிமயக்கும் வானவேடிக்கையை உருவாக்குகின்றன.

வட மற்றும் தென் துருவங்களில் ஒளிர்ந்துகொண்டே அசையும் திரைச்சீலையாக இந்த ஆரோராக்கள் காணப்படும். சூரிய தொகுதில் இருக்கும் சில கோள்களில் உள்ள வானை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் எக்ஸ்-கதிர் ஆகியவற்றால் ஆரோராக்கள் நிறம் தீட்டுகின்றன. இந்தப் படத்தில் நாம் முதன் முதலாக வியாழனின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் ஒளிரும் ஆரோராவை பார்க்கின்றோம்.

வியாழனின் தென்துருவ ஒளி. படவுதவி: X-ray: NASA/CXC/UCL/W.Dunn et al, Optical: South Pole: NASA/JPL-Caltech/SwRI/MSSS/Gerald Eichstädt /Seán Doran; North Pole: NASA/JPL-Caltech/SwRI/MSSS

நாம் இதுவரை கோளின் ஒரு பகுதியில் உள்ள காந்தப் புலத்தில் ஏற்படும் தாக்கம் கோள் முழுவதும் தாக்கத்தை செலுத்தும் என்றுதான் கருதினோம். அதனால் தான் பூமியில் வடக்கில் தோன்றும் அரோராவிற்கு சரி எதிராக தென் துருவத்திலும் அரோரா தோன்றுவதை விளக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் வியாழன் இந்தத் தத்துவத்திற்குள் வரவில்லை – வியாழனில் உருவாகும் ஆரோராக்கள் ஒவ்வொரு துருவத்திலும் வேறுபட்ட பண்புகளை வெளிக்காட்டுகின்றன.

கடிகாரத்தைப் போல, வியாழனின் தென்துருவத்தில் உருவாகும் அரோரா ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒருமுறை எக்ஸ்-கதிர்ரை பிளாஷ் செய்கிறது. ஆனால் வாடதுருவத்தில் எழுமாராக பிரகாசம் கூடிக் குறைகிறது.

விண்ணியலாளர்களைப் பொறுத்தவரையில் ஏன் இப்படியான மாறுபாடு ஒவ்வொரு துருவத்திலும் காணப்படுகிறது என்று தெளிவாக கூறமுடியவில்லை. ஆனால் இதனைக் கண்டறிய இவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

கோள் ஒன்றினைச் சுற்றியிருக்கும் காந்தப்புலக் கோளம் சூரியன் மற்றும் வேறு விண்மீன்களில் இருந்துவரும் ஆபத்தான துணிக்கைகளில் இருந்து பாதுகாப்பதுடன், கோளின் வளிமண்டலம் விண்வெளியில் கசிவதையும் தடுக்கிறது. எமக்குத் தெரிந்தவரை வளிமண்டலம் இல்லாத கோளில் உயிரினம் இருக்க முடியாது. எனவே சூரியத் தொகுதிக்கு வெளியே இருக்கும் கோள் ஒன்றில் நாம் ஆரோராவை அவதானித்தால், அங்கே உயிரினகள் இருக்கமுடியுமா என்று ஒரு துப்புக் கிடைக்கும்.

மேலதிக தகவல்

வியாழனில் தோன்றும் அரோராவின் ஒவ்வொரு பிரகாசமான புள்ளிகளும் பூமியின் மேற்பரப்பில் பாதியளவைக் கொண்டுள்ளது!


மூலம்: http://www.unawe.org/kids/unawe1734/