புதிய ஆய்வு ஒன்று உயிர்பல்வகைமையின் தீவிர அழிவிற்கு முறையற்ற தேசிய ஆட்சிமுறையே காரணம் எனக்கூறுகிறது. எனைய சூழல் காரணிகளை விடவும் தேசிய அரசியலே உயிரினங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு மேலும் கூறுகிறது. என்னதான் பாதுகாகப்ட்ட சரணாலையங்கள் ஒரு நாட்டில் இருந்தாலும், உள்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகள் நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றன.
கடந்த மூன்று தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு செய்யப்பட் இந்த ஆய்வில் தேசிய அரசியல் கோட்பாடுகள் பொருளாதாரத்தை வளர்த்ததைவிட உயிர்ப்பல்வகைமையை அழித்ததையே அதிக முனைப்போடு செய்துள்ளது.
ஸ்திரமான அரசியல் கட்டமைப்பை கொண்ட நாடுகளில் உள்ள சரணாலையங்களில் உயிர்ப்பல்வகைமை பேணப்படுகிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
1990 களில் இருந்து எடுக்கப்பட்ட நீர்ப்பறவைகளின் தரவுகளையே ஆய்வாளர்கள் அடிப்படையாக பயன்படுத்தியுள்ளனர். காரணம், நீர்ப்பறவைகளின் ஈர வாழ்விடங்கள் உலகில் உள்ள உயிர்ப்பல்வகைமைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். மேலும் இவை தற்போது அழிவை நோக்கிய நிலையில் இருக்கும் உயிரினங்களாகும்.
சர்வதேச ஆய்வாளர்கள் குழு அண்ணளவாக 461 வேறுபட்ட நீர்ப்பறவை இனங்களின் 2.4 மில்லியன் வருடாந்த கணக்கெடுப்பு அறிக்கைகளை உலகில் உள்ள 26,000 இடங்களில் இருந்து சேகரித்துள்ளது.
இந்தத் தரவுகளைக் கொண்டு உலகளாவிய ஆட்சிமுறை குறிகாட்டிகளான வன்முறையின் அளவு, ஊழலின் அளவு மற்றும் தேசிய மொத்த உற்பத்தி போன்றவை உற்பட பல குறிகாட்டிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒப்பீட்டில் மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுளில் நீர்ப் பறவையின் அளவு துரிதமாக குறைவடைந்துள்ளது. இந்த வளையங்களில் இருக்கும் நாடுகளில் அரசியல் ஊழல் மற்றும் சமூக/அரசியல் கட்டமைப்புகள் என்பன நிலையாக இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியில் சரணாலையங்களின் அளவு அதிகரித்தாலும், முறையற்ற ஆட்சியும் ஊழலும் இந்த சரணாலையங்களின் கடமையை மட்டுப்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் குழு தெரிவிக்கின்றது.
மேலும், எவ்வளவு வேகமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கிறதோ அதே அளவு வேகத்தின் அந்நாட்டில் இருக்கும் உயிர்பல்வகைமையின் அளவும் குறைவதை இந்தக் குழுவின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
முறையற்ற நீர் முகாமைத்துவம் மற்றும் அணை கட்டுமானம் என்பன நிரந்தரமாக பல நீர் சார்ந்த வாழ்விடங்கள் வற்றிப் போக காரணமாக இருந்துள்ளது, இதற்கு ஈரான் மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகள் உதாரணம்.
இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்நிலை தொடருமாயின் பெரும் இயற்கை மாற்றங்களை நாம் சந்திக்கநேரிடும். பூமியில் மனிதன் தனிப்பட்ட ஒரு உயிரினம் அல்ல. எல்லாம் சேர்ந்த ஒரு பல்வகைமையில் நாமும் ஒன்று. ஒரு கட்டத்தில் இந்நிலை உடையுமாயின் நாம் பல எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும்.
தகவல்: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்