“மேலே போனதெல்லாம் மீண்டும் கீழே வரவேண்டும்” என்கிற சொல்லாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் ஏன் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதற்கு விடை “ஈர்ப்புவிசை”.
இரண்டு பொருட்களை ஒன்றுடன் ஒன்று நோக்கி இழுக்கும் கண்களுக்கு புலப்படாத விசை தான் ஈர்ப்புவிசை (gravity). திணிவு இருக்கும் எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்புவிசை இருக்கும். திணிவு என்றால் அடிப்படையாக ஒன்றில் இருக்கும் வஸ்தின் அளவு எனலாம். ஒரு பொருளின் திணிவு அதிகரிக்க, அதன் ஈர்புவிசையும் அதிகரிக்கும்.
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய பொருட்களில் ஒன்று விண்மீன் பேரடைகள். பல பில்லியன் விண்மீன்கள், கோள்கள், பிரபஞ்ச வாயுக்கள் மற்றும் தூசுகள் என அசுர சைஸ் கொண்டவை அவை.
இரண்டு விண்மீன் பேரடைகளுக்கு இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும், அவற்றின் சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை தொழிற்படவே செய்கிறது. அது ஒன்றுடன் ஒன்று விண்மீன் பேரடைகளை இழுத்து, பெரும்பாலும் மோதலில் முடிக்கிறது.
இந்தப் படத்தில் வண்ணமயமான, ஆனால் விசித்திரமான வடிவமைப்பு கொண்ட விண்மீன் பேரடையை நீங்கள் பார்க்கலாம். இந்த விசித்திர வடிவத்திற்குக் காரணம், இது ஒரு விண்மீன் பேரடையல்ல, மாறாக இரண்டு விண்மீன் பேரடைகள். கடந்த சில மில்லியன் வருடங்களாக இந்த இரண்டு விண்மீன் பேரடைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருகின்றன. ஈர்ப்புவிசையின் கவர்ச்சியால் உந்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு விண்மீன் பேரடைகளும் மிகப்பெரிய விண்மீன் பேரடையாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது.
கிட்டத்தட்ட அனைத்து விண்மீன் பேரடைகளும் ஒரு கட்டத்தில் இன்னொரு பேரடையுடன் மோதவேண்டிய சூழ்நிலை வரும். அப்படியாயின் இரண்டு விண்மீன் பேரடைகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்தப் படத்தில் உள்ளது போன்று ஒன்றாக மாறும். அல்லது, இவை ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்து அவற்றின் ஈர்ப்புவிசை காரணமாக இந்தப் பேரடைகளின் வடிவங்கள் விசித்திரமாக மாற்றமடையலாம்.
மேலதிக தகவல்
எமது விண்மீன் பேரடையும் கடந்த காலத்தில் பல மோதல்களை சந்தித்துள்ளது. பல சிறிய விண்மீன் பேரடைகளின்சிறிய அங்கங்கள் நமது பால்வீதியில் இன்றும் உள்ளன. இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், எமக்கு மிக அருகில் இருக்கும் குறள்விண்மீன் பேரடை தற்போது பால்வீதியுடன் மோதிக்கொண்டிருகிறது.