ஐன்ஸ்டீன் சிலுவை: ஈர்புவிசையின் விசித்திரம்

பொதுவாக விண்மீன் பேரடை ஒவ்வொன்றுக்கும் ஒரு கருவே இருக்கும். இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடைக்கு நான்கு கருக்கள் இருக்கிறதா? முதன்முதலில் இதனை அவதானித்த விண்ணியலாளர்களுக்கும் இதே சந்தேகம் தான். ஆனால் அவர்கள் இறுதியில் வந்த முடிவு சற்றே விசித்திரமானது!

படவுதவி: J. Rhoads (Arizona State U.) et al., WIYN, AURA, NOAO, NSF

படத்தில் தெரியும் நான்கு பிரகாசமான புள்ளிகளும் குறித்த விண்மீன் பேரடையின் கருக்களே அல்ல. அந்த விண்மீன் பேரடைக்கும் அந்த பிரகாசமான புள்ளிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் அவர்களது முடிவு. காரணம் அந்தப் பிரகாசமான புள்ளிகள் எங்கிருந்து வந்தன என்று இவர்கள் கண்டறிந்துவிட்டனர். இந்த விண்மீன் பேரடைக்கு பின்னால் இருக்கும் ஒரு குவாசார் எனப்படும் பாரிய பண்டைய பேரடை தான் இது.

நான்கு புள்ளிகளும் உண்மையில் ஒரே புள்ளிதான். முன்னிலையில் இருக்கும் விண்மீன் பேரடையின் ஈர்ப்புவிசை அதன் பின்னால் இருந்து வரும் குவாசாரின் ஒளியை, வில்லைகள் வளைப்பது போன்று வளைப்பதால் இப்படியாக நான்கு வெவ்வேறு புள்ளிகளாக அந்தக் குவாசார் தென்படுகிறது. இப்படி ஈர்ப்பு விசை ஒளியை வளைப்பதை “ஈர்ப்பு வில்லைகள்” என அழைக்கின்றனர். இதற்கான அடிப்படைத் தத்துவம் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து வந்தது.

குறிப்பாக படத்தில் உள்ள உதாரணத்தை ஐன்ஸ்டீன் சிலுவை (Einstein Cross) என அழைக்கின்றனர். உண்மையில் பின்னால் இருக்கும் குவாசார் இவ்வளவு பிரகாசமாக நமக்கு தெரியாது. ஈர்ப்பு வில்லை என்கிற செயற்பாட்டு மூலமாக உருப்பெருக்கப்பட்டு பிரகாசமாக இந்த குவாசார் எமக்கு தெரிகிறது.

இப்படியான அரிதான சந்தர்ப்பங்கள் மூலம், தொலைநோக்கியால் பார்க்க முடியாத அளவு மிகத்தொலைவில் இருக்கும் பொருட்களை ஈர்ப்பு வில்லைகளை பயன்படுத்தி எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த ஐன்ஸ்டீன் சிலுவை கூட அவ்வபோது பிரகாசம் கூடிக் குறைவதை நாம் அவதானிக்கிறோம். இதற்குக் காரணம், முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையில் இருக்கும் பெரிய விண்மீன்கள் அவ்வப்போது குறுக்கறுக்கும் போது ஈர்ப்பு வில்லையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தப் பிரகாசமாற்றம் ஏற்படுகிறது.