வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள்

உங்கள் இளம் பருவத்தில் நீங்கள் திடீர் வளர்ச்சியை உணர்ந்து இருகிறீர்களா? அடிக்கடி காலணிகளை மாற்றவும், நீளம் குறைவடைந்துவிட்ட காற்சட்டையை மாற்றவும் கடைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளீர்களா?

இளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.

ஒரு மிகப்பெரிய இளம் விண்மீன் முதலில் 2008 இலும், பின்னர் 2015, 2016 இலும் அவதானிக்கப்பட்டது. அதனுடைய பழைய படத்தை புதுப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த விண்ணியலாளர்கள், கடந்த சில வருடங்களில் இந்த இளம் விண்மீன் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

Cat’s Paw நெபுலா. படவுதவி: ESO

எல்லாப் புதிய இளம் விண்மீன்களைப் போலவே இந்த விண்மீனைச் சுற்றியும் வாயுக்கள் மற்றும் தூசாலான கூடு காணப்படுகிறது, எனவே இந்த விண்மீனை நேரடியாக அவதானிக்க முடியாது. ஆனால் இந்த வாயு/தூசால் உருவான கூட்டை அவதானித்த விண்ணியலாளர்கள் கடந்த சில வருடங்களில் அதன் பிரகாசம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். அப்படியாயின், அந்தக் கூட்டினுள் இருக்கும் விண்மீன் முன்னர் இருந்ததை விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதால் தான் அதனால் அதன் கூட்டை நான்கு மடங்கிற்கு பிரகாசமாக்க முடிந்துள்ளது.

எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி?

மிகப்பெரிய வாயுத் திரள் இந்த விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது நீர் ஒரு துவாரத்தினூடாக பாய்வது போல. முதலில் இந்த வாயுத் திறன் விண்மீனைச் சுற்றி ஒரு தட்டுப்போல உருவாக்கி சுற்றி வந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அதிகளவான வாயு இந்த தட்டுப் போன்ற அமைப்பில் சேர, பனிச்சரிவு போல, வாயுத் திரள்கள் சரிந்து விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும்.

இன்னும் சில வருடங்களில் மீண்டும் ஒரு திடீர் வளர்ச்சியை இந்த விண்மீன் அடையலாம். அவற்றுக்கு காலணியும் பாண்டும் வாங்கவேண்டிய தேவையில்லாதது நல்ல விடயமே!

மேலதிக தகவல்

Cat’s Paw நேபுலாவில் உள்ள பல விண்மீன்களில் ஒன்றுதான் இந்த விண்மீன். இரவு வேளையில் படம் பிடிக்கும் போது, பூனையின் பாதத்தைப் போல இருந்ததால் இந்த விண்மீன் உருவாகும் பிரதேசத்திற்கு இப்படியொரு விசித்திரப் பெயர்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி http://www.unawe.org/kids/unawe1735/