குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

இன்று இந்தோனேசியாவின் ஜாவன் மழைக்காடுகள் ஆல்மோஸ்ட் மயானத்தைப் போல எந்தவித சலனமும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பாடித் திரிந்த பறவைகள் அனைத்தும் கூண்டினுள் பாடல் போட்டிக்காக வளர்க்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.

பச்சை ஜாவன் மக்பை எனப்படும் பாடும் பறவைகளை ஜாவன் காடுகளில் கடந்த பல ஆண்டுகளில் யாருமே பார்த்திருக்க முடியாது. காரணம் அளப்பெரிய ஜாவன் காட்டிலேயே வெறும் ஐம்பதிற்கும் குறைவான மக்பை பறவைகளே எஞ்சியிருக்ககூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அழகிய பச்சை நிற உடலையும், தனித்துவமான கொவ்வைப்பழம் போன்ற சிவப்பு நிற சொண்டையும் கொண்ட இந்த பச்சை மக்பை, பச்சைப்பசேல் என்ற ஜாவன் காடுகளில் இலகுவாக மறைந்திருந்தாலும், இவற்றின் தனித்துவமான பாடல் ஒலிகள் இவற்றின் இருப்பிடத்தை இலகுவாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

இது ஒரு பறவையின் கதைதான், ஆனால் இந்தோனிசியா காடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடும் பறவை இனங்கள் இருக்கின்றன. இன்று இவை அனைத்துமே உயிராபத்தில் இருப்பது கவலைக்கிடமான விடையம் என்று International Union for the Conservation of Nature (IUCN) அமைப்பு கூறுகிறது.

இந்தப் பறவைகளின் இனவழிப்பிற்கு முக்கிய காரணம், இக்காட்டுப் பறவைகள் பிடிக்கப்பட்டு கூடுகளில் அடைக்கப்பட்டு வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்பதற்கு விற்கப்படுவதே. இப்படியான பாடும் பறவைகளை வளர்ப்பது ஜாவன் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இதனையெல்லாம் விட இன்னுமொரு முக்கிய காரணி இங்கே விளையாடுகிறது. அதுதான் தேசிய லெவல் பாடும் பறவைகளின் போட்டி. இப்படியான போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் ஆயிரக்கணக்காக அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பரிசுகளை வெல்லமுடியும் என்பதால் பலரும் இன்று இந்தப் பறவைகளை பிடித்து கூண்டில் வளர்க்க ஆசைப்படுகின்றனர்.

ஜாவன் காடுகள் மயாணமாகிக்கொண்டிருக்க ஜர்காட்டவில் இருக்கும் பரமுக்கா சந்தையில் பறவைகளின் கீச்சிடும் சப்தமும், சங்கீதமும் காதைப் பிளக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்குகள் விற்கவும் வாங்கவும் இருக்கும் மிப்பெரிய சந்தைதான் இந்த பரமுக்கா சந்தை.

இங்கு பல மாடிக் கட்டிடங்கள் ஆயிரக்கணக்கான பறைவைகளின் கூண்டுகளால் நிரம்பிவழிகிறது. 2015 இல் Traffic எனப்படும் வனவிலங்குகள் விற்பனையை கண்காணிக்கும் நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆய்வில் இந்த பரமுக்கா சந்தையில் ஒரு நாளில் அண்ணளவாக 20,000 பறவைகள் விற்பனைக்கு வருகின்றன என்று தெரிகிறது.

இவற்றில் பல பறவைகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டவை, அவற்றில் பல பாதுகாக்கப்பட்ட பறவைகள். இவற்றைப் பிடிப்பது இந்தோனேசிய சட்டப்படி குற்றமே. ஆனால் இந்த சந்தையின் இயக்குனர் இங்கே எந்தவித சட்டவிரோத பறவைகளும் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் இந்த இடத்தில் இருக்கும் பறவைகளை ஆய்வு செய்ய அடிக்கடி அங்கே செல்லும் இங்கிலாந்து செஸ்டர் பூங்காவைச் சேர்ந்த அன்றேவ் ஓவன் இங்க அடிக்கடி பல பாதுகாக்கப்பட்ட பறவையினங்கள் விற்பனைக்கு இருப்பதை பார்த்ததாக கூறுகிறார்.

இங்கிருந்து விடுவிக்கப்பட்டு சரணாலையங்களில் பாதுகாக்கப்பட்டும் பறவைகளையும் திருடும் நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் அங்கே நிலவும் வறுமை என்பது அடுத்த காரணி. கறுப்பு-சிறகு மைனா ஒன்றிற்கு நூறு அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும். எனவே ஒன்றை விற்றுவிட்டால் ஒரு மாத சம்பளம் கைக்கு வந்துவிடும் என்பதால் பலரும் இந்த பறவைகளை பிடிக்கவும், சரணாலையங்களில் இருந்து களவாடவும் செய்கின்றனர்.

இப்படியாக அதிகூடிய விலைகளுக்கு காரணம் இந்தோனேசியாவில் இடம்பெறும் தேசிய அளவிலான பாட்டுப் போட்டிகள். இந்தப் போட்டிகளில் கிடைக்கும் அதிகளவாக பரிசுப் பணம் பலரையும் இந்தப் போட்டியில் பங்குபெற தூண்டுகிறது.

ஜாவன் பிரதேசத்தில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை, பாடும் பறவைகளை வளர்ப்பது என்பது கலாச்சார பெருமை. எனவே அவர்களிடம் அழிவடையும் காட்டுப் பறவைகளை பிடிக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டார்கள் என்று அப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சிந்தனை கொண்டவர்கள் கருதுகிறார்கள். எனவே அழிவின் விளிம்பில் இருக்கும் காட்டுப் பறவைகளை காப்பாற்ற பாடல் போட்டிகளில் பல விதிமுறைகளை தற்போது உருவாக்கியுள்ளனர்.

காட்டுப் பறவைகளை போட்டியில் சேர்த்துக்கொள்வதில்லை. வீடுகளில் அல்லது வளர்ப்பிடங்களில் பிறந்து வளர்க்கப்பட்ட பறவைகளை மட்டுமே போட்டிகளில் சேர்த்துக்கொள்வது. இப்படியான சட்டங்கள் எதிர்காலத்தில் காட்டில் இருந்து பிடிக்கப்படும் பாடல் பறவைகளின் எண்ணிக்கையை குறைக்கும் என கருதுகின்றனர்.

பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச காட்டுவாழ் உயிரினப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஜாவாவில் உள்ள பாடசாலைகளில் சிறுவர்களுக்கு இந்தப் பறவைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கின்றனர். சிறுவர்களை கற்பிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் இந்த காட்டுப் பறவைகளை பாதுகாக்க உதவுவார்கள் என்பது இந்த திட்டத்தில் இயங்கும் பல ஆர்வலர்களின் எண்ணம்.

மனித செயற்பாட்டால் இன்று அழிவடையும் நிலையில் இருக்கும் ஒரு சூழல் கட்டமைப்பு இந்த ஜாவன் காட்டு பாடும் பறவைகள்.

“குயிலைப் புடிச்சி கூட்டில் அடிச்சி கூவச்சொல்லுகிற உலகம், மயிலைப் புடிச்சி காலை உடைச்சி ஆடச்சொல்லுகிற உலகம்” என்கிற பாடல்வரிகள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கட்டுரையின் மூலம், BBC யின் ஆய்வுக் கட்டுரை.

படவுதவி, காப்பிரைட்: Victoria Gill, David Cheeseman, CCBC, Jonathan Beilby, Anais Tritto