அதென்ன செயற்கை சூரியன் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நூத்தி ஐம்பது மில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் சூரியன் தான் எமக்கு எல்லாமே! மிக முக்கியமான சக்திமுதலும் அதுவேதான். ஆனாலும் சூரியனிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இரவு நேரத்தில் சூரியன் உதிக்காது, மேகம் வந்தால் மறைந்துவிடும். உலகின் சில பிரதேசங்களில் ஆண்டின் பல மாதங்களுக்கு சூரியன் தேபடுவதே இல்லை, இப்படி சில பல அசௌகரியங்கள் கொண்டவர் தான் சூரியன்.
இதனால் சூரிய ஒளியைப் பயன்படுத்தி செய்யவேண்டிய சில ஆய்வுகளுக்கு சூரியனை நம்பி களத்தில் இறங்குவதும் சில நேரங்களில் சாத்தியப்படாது. எனவே ஆய்வாளர்கள் அவர்களுக்கென அவ்வபோது செயற்கையாக சூரியன்களை அவர்கள் ஆய்வு கூடத்தில் செய்து தங்கள் ஆய்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்வர்.
இப்படி உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை சூரியன் தான் “Synlight” என அழைக்கப்படும் ஜேர்மன் விண்வெளி நிலையத்தால் உருவாக்கப்பட்ட மூன்று மாடி அடுக்கு அளவுக்கு உயரமான செயற்கை சூரியன்.
7 kW சக்தி வெளியிடும் சீனன் மின் குமிழ்கள் 149 ஐ பயன்படுத்தி மிகப்பெரிய பரவளைய ஆடியை போல இந்த Synlight உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இவ்வளவு மின்குமிழ்களும் சேர்ந்து வெறும் 20×20 செண்டிமீட்டார் அளவுள்ள பிரதேசத்தில் மொத்த ஒளியையும் குவிக்கும் ஆற்றலை இந்த Synlight கொண்டுள்ளது என்பதே.
இந்த செயற்கை சூரியனில் இருந்து வரும் ஒளியை மூன்று வெவேறு அறைகளில் உள்ள இடங்களில் குவிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இதில் இரண்டு அறைகளில் 220kW சூரிய சக்தியை பிறப்பிக்கும் அளவிற்கும் ஒரு அறையில் 280kW சூரிய சக்தியை பிறப்பிக்கும் அளவிற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை சூரியன் மக்ஸிமம் பவரில் செயற்படும் போது 320kW அளவுள்ள சக்தியை வெளியிடும், அல்லது இன்னொரு வகையில் கூறவேண்டும் என்றால் சூரியனில் இருந்து எமது பூமியின் மேற்பரப்பில் விழும் சக்தியைப் போல 10,000 மடங்கு சக்தியை இதனால் பிறப்பிக்கமுடியும். மேலும் 3,000 பாகை செல்சியல் வெப்பநிலை வரை இதனால் பிறப்பிக்கப்படும் என்றும் இதனை உருவாக்கிய ஜேர்மன் விண்வெளி நிலையம் தெரிவிக்கிறது.
இந்த செயற்கை சூரியனுக்கு அவசியம் என்ன என்கிற கேள்விக்கு வருவோம். Synlight பிறப்பிக்கும் அதிக வெப்பநிலையும் சக்தியும், சூரியன் எப்படி ஹைட்ரோஜனை பயன்படுத்துகிறது என்று மேலும் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும். ஹைட்ரோஜன் எதிர்காலத்தில் பயன்படக்கூடிய சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு எரிபொருளாகும். இதனை எரிக்கும் போது வெறும் நீரே எஞ்சும் எனவே வளிமண்டலதிற்கும் சூழலிற்கும் இது ஒரு நல்ல விடையம். ஆகவே பெற்றோல் போன்ற சூழலுக்கு மாசுவிளைவிக்கக் கூடிய எரிபொருட்களை பயன்படுத்துவதை விடுத்து ஹைட்ரோஜனை பயன்படுத்தலாம். தற்போது ஹைட்ரோஜனை பொதுவான எரிபொருளாக பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், இதனை உருவாக்க அதிகளவு சக்தியை பயன்படுத்தவேண்டி உள்ளது.
Synlight மூலம் வினைத்திறனாக நீரில் இருந்து ஹைட்ரோஜனையும் ஆக்ஸிஜனையும் பிரிப்பது எப்படி என்று ஆய்வாளர்கள் ஆய்வுகளை நடத்தமுடியும். இதுதான் தற்போதைக்கு Synlight இன் பிரதான பயன்பாடு. ஆனால் வேறு பல ஆய்வுகளுக்கும் இதனை பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக மிக உக்கிரமான புறவூதாக் கதிர்வீச்சில் எப்படி சில வஸ்துக்கள் ரியாக்ட் பண்ணும் என்று கண்டறிய முடியும்.
சூரியனுக்கு அருகில் சென்று இந்த ஆய்வுகளை செய்வதைவிட இது சீப் தானே! அப்படி ஒன்றும் இந்த Synlight விலைகுறைந்த செயற்திட்டம் இல்லை. அண்ணளவாக இந்த செயற்கை சூரியன் 3.77 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.