ஈரமான சுரங்கத்தினுள் இருந்த சமாதியில் 2500 வருடங்களாக இருந்ததும் துருப்பிடிக்காமல் அதன் கூர்மையை சற்றும் இழக்காத இந்த வாள் 1965 இல் சீனாவின் குபே மாகாணத்தில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சமாதி 2500 வருடங்கள் பழமையானது, எனவே அதற்குள் இருக்கும் இந்த வாளும் அதே பழமையுடன் துருப்பிடித்து இருக்கும் என்று எதிர்பார்த்த அகழ்வாய்வாளர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இந்த வாள்.
சீனாவின் வசந்த இலையுதிர் காலம் என அழைக்கப்படும் கிமு 722 – கிமு 479 வரையான காலப்பகுதியில் பெரும் யுத்தங்களும், நீண்ட காலப் போர்களும் பல பகுதிகளாக பிரிந்திருந்த சீனாவில் நடைபெற்றது. இக்கலகட்டதில் இடம்பெற்ற கதைகள் இன்று பெரும் சரித்திரமாக சீனாவில் கூறப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இக்காலகட்டத்தில் பல வரலாற்றுக்கு அப்பாற்பட்ட சுப்பர் ஹீரோக்கள் வாழ்ந்ததாக சீன சரித்திரக் கதைகள் கூறுகின்றன. அப்படியான ஒரு ஹீரோ ஒருவரின் சமாதியில் இருந்து எடுக்கப்பட்ட வாள் தான் இந்த துருப்பிடிக்காத கூர்மை மாறாத வாள்!
தங்கநிறச் சாயலைக் கொண்டுள்ள இந்த வாளில் பல கருப்புநிற வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக ஈரப்பதமாக காலநிலையில் இருந்தாலும் துருப்பிடிக்காமல் இருப்பது என்பது ஆச்சரியமான விடையம் அல்லவா?
சரி, இந்த வாளுக்கு சொந்தக் காரர் யார் என்று தேடிய ஆய்வாளர்கள், “அரசர் யூவின் சொந்தப் பாவனைக்காக உருவாக்கப்பட்டது” என்கிற வாசகம் வாளிலேயே பொறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் குழம்பினர். இதற்குக் காரணம் வசந்த இலையுதிர்க் காலத்தில் சீனாவின் பல அரசர்கள் யூ என்கிற பேரில் இருந்துள்ளனர். எனவே இந்த வாலில் உள்ள செய்தி கூறுவது இதில் எந்த யூ என்பது அவர்களின் சந்தேகம்.
வாளையும் சமாதியையும் ஆய்வு செய்த பல தொல்பொருள் வல்லுனர்கள் இந்த வாளின் உரிமையாளர் அரசர் கூஜியான் (King Goujian) என்கிற முடிவுக்கு வந்தனர்.
இந்த வாள் இவ்வளவு காலமாக துருப்பிடிக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன? அப்படி என்ன மாயம் அல்லது மந்திரத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொல்லர்கள் வாளை உருவாக்கும் போது செய்தனர் என்று சந்தேகம் நமக்கு வரலாம்.
விஞ்ஞானம் அதற்கு விடை வைத்துள்ளது.
இந்த வாள் வளையக்கூடிய செப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வாளின் ஓரங்கள் தகரத்தால்/வெள்ளீயத்தால் ஆக்கப்பட்டுள்ளது. இதுதான் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் இந்த வாளை கூர்மையாக வைத்திருந்த ரகசியம். மேலும், காற்று போகாவண்ணம் உருவாக்கப்பட்ட வாள் உறையுனுள் இந்த வாள் இருந்ததால் நீண்ட காலத்திற்கு இந்த வாள் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஒரு துணுக்கு
இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பாக இருந்த வாள், 1995 இல் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டது. அங்கே அதனைக் கையாண்ட ஒருவர் இந்த வாளை உறையில் இருந்து வெளியே எடுக்கும் போது கைதவறி வாளை கடினமான மேற்பரப்பில் தட்ட வாளின் ஓரத்தில் ஒரு வெடிப்பு வந்துவிட்டது.
இந்த சங்காத்தமே வேணாம் என்று சீனா முடிவெடுத்து, தற்போது இந்த வாளை சீனாவை வெட்டு வெளியே கொண்டு செல்வது தடைசெயப்பட செயலாக சட்டமாக்கப்பட்டுவிட்டது. தற்போது சீன அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த வாள் இன்னும் பல சகாப்த்தங்களை பார்க்கும் என நம்பிக்கை கொள்வோம்!