ஏலியன்ஸை தேடும் பணியில் டிராய்டுகள்

ஸ்டார் வார்ஸ் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னும் அதன் புகழ் மங்கவில்லை. அந்தப் படத்தில் வந்ததைப் போல உண்மையிலும் எப்போது நடக்கும் என்று ஏங்குபவர்கள் அதிகம். செயற்கை அறிவு கொண்ட ரோபோ, ஒளியைவிட வேகமான பயணம், விசித்திரமான ஏலியன் நண்பர் என்று எல்லாவற்றிலும் எமக்கு ஆசைதானே!

இருபத்துஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்ததன் மூலம் இந்த விண்வெளிக் கனவின் முதற்படியை எடுத்து வைத்தோம். இன்று அறிவுள்ள ரோபோக்கள் அல்லது அறிவுள்ள கணனிகள் இப்படியான பிறவிண்மீன் கோள்களில் உயிர்வாழக்கூடிய நிலை உண்டா என்று தேடுவதற்கு எமக்கு உதவுகின்றன.

“டடூயின்” போன்ற கோள்களைப் பற்றி ஆய்வுகளை நடத்த செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பெரிதும் உதவுகிறது. ஸ்டார்வார்ஸ் படத்தில் வந்த டடூயின் கோளைப் போலவே இந்தக் கோள்களும் இரண்டு விண்மீன்களை சுற்றி வரும் கோள்களாகும். இப்படியான கோள்களில் உயிர்கள் உருவாகும் சாத்தியக்கூறு உண்டா என்று கண்டறிவதே சிக்கலான விடையம்.

Kepler 16-b: நாம் முதன் முதலில் கண்டுபிடித்த இரண்டு விண்மீன்களை சுற்றிவரும் கோள். நன்றி: T. Pyle / NASA / JPL-Caltech

உயிரினம் தோன்றி கூர்ப்படைய கோள் ஒன்று உருவாக்கி பல பில்லியன் வருடங்களுக்கு நிலையாக இருக்கவேண்டும். எனவே இப்படியான கோள்களின் சுற்றுப்பாதை நிலையானது என்பதனை முதலில் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் குறித்த கோள் இரண்டு விண்மீன்களைச் சுற்றிவருகிறது என்கிற வெளியில் இதனைக் கண்டறிவது மிக மிகக் கடினமான ஒரு விடையமாகிறது.

ஒரு விண்மீனை விட இரண்டு விண்மீன்களை சுற்றும் கோளில் பாரிய மாற்றங்கள் நிகழக்கூடும். இப்படிச் சுற்றும் போது விண்மீன்களின் ஈர்ப்பைத் தாண்டி விண்வெளியில் வீசி எறியப்படக்கூடும், அல்லது இரண்டு விண்மீன்களில் ஒன்றில் மோதிவிடக்கூடும்.

செயற்கை நுண்ணறிவு கொண்ட ப்ரோக்ராம்கள் ஒவ்வொரு கோளையும் 10 மில்லியன் முறை அதன் சுற்றுப் பாதைகளில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி சிமுலேட் (simulate) செய்து இவற்றில் எது நிலையான பாதை என்பதனைக் கண்டறிகிறது. இந்தப் ப்ரோக்ராம் தொழிற்படத் துவங்கி சில மணிநேரங்களிலேயே விஞ்ஞானிகளை மிஞ்சிவிட்டது. இதற்கு முன்னர் நிலையான சுற்றுப் பாதையைக் கொண்டிருக்காத கோள்கள் என்று விஞ்ஞானிகள் கருதிய கோள்களைக் கூட இந்தப் ப்ரோக்ராம் நிலையான பாதையைக் கொண்டிருக்கும் என்று காட்டியது.

மேலதிக தகவல்

ஒரு டஜன் கோள்கள் இரட்டை விண்மீன் தொகுதியில் சுற்றிவருவதை நாம் கண்டறிந்துள்ளோம். நாம் கண்டறிந்த மற்றுமொரு கோள் மூன்று விண்மீன்கள் கொண்ட தொகுதியில் சுற்றிவருகிறது!

கட்டுரையின் ஆங்கிலப் பதிப்பு: http://www.unawe.org/kids/unawe1808/