துணை விண்மீன் பேரடை என்றால் என்ன?

விண்மீன் பேரடை என்றால் என்னவென்று பரிமாணத்தை வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அனேகமாக தாரை தப்பட்டைகள் கிழியும் அளவிற்கு விண்மீன் பேரடை என்கிற சொல் இந்த தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்! இருந்தாலும், கட்டுரையின் நோக்கத்திற்காக விண்மீன் பேரடை என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன்.

எமது சூரியனைச் மையமாகக் கொண்டே பூமி உட்பட ஏனைய கோள்கள் மற்றும், துணைக்கோள்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள் என்று பல சுற்றிவருகின்றன. நமது சூரியன் விண்வெளியில் தனியாக இல்லை. பால்வீதி எனும் பல நூறு பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு தொகுதியில் எமது சூரியனும் ஒன்று. அப்போ இந்த பால்வீதி என்றால் என்ன?

பால்வீதி

‘யாருயா வீதில பாலை கொட்டினது?’ என்று நாம் கேட்கலாம். ஆதிகாலத்தில் இரவுவானை அவதானித்த ஆர்வலர்கள், வெள்ளைவெளேர் என இரவு வானம் பூராக விரிந்திருந்த ஒரு கட்டமைப்பைப் பார்த்து பால் போல வெண்மை வீதிபோல நீண்டு இருப்பதால் பால்வீதி (Milky Way) எனப்பெயரிட்டனர். எனவே எந்த ஏலியனும் வானில் பாலைக் கொட்டவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்!

வெள்ளையாக அப்படியே நீண்டு இருந்தது உண்மையில் பல பில்லியன் கணக்கான விண்மீன்கள் தான். அதாவது நமது சூரியனைப் போன்றவை. ஆனால் வெறும் கண்களுக்கு அவை புள்ளிகளாக கூட தெரிவதில்லை. அதானால் தான் அவற்றைப் பார்க்கும் போது பால்போல ஒரே கட்டமைப்பாக தெரியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இப்போ நீங்கள் இரவுவானை அவதானித்தால் நிச்சயம் பால்வீதியை பார்க்க முடியாது. காரணம் ஒளிமசடைவு. நமது தெரு விளக்குகளும், இரவு விளக்குகளும் சேர்ந்து மெல்லிய பால்வீதியை மறைத்துவிட்டன. கிராமப்புறத்தில் இருந்தால், அதிர்ஷ்டசாலி நீங்கள்! அங்கேயும் தெருவிளக்குகள் நிரம்பி இருந்தால் துரதிஷ்டசாலி நீங்கள் – சாரி.

பெரிய மகிலன் முகிலும், சிறிய மகிலன் முகிலும்

விண்மீன் பேரடைகளின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து இதனை பல வகைகளாக பிரிக்கின்றனர். வடிவ வகையில் பார்த்தால், ஒன்று சுருள் விண்மீன் பேரடை (spiral galaxies) – நமது பால்வீதி இதற்கு உதாரணம். அடுத்தது நீள்வட்ட விண்மீன் பேரடை (elliptical galaxies) – இதற்கு நல்ல உதாரனம பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் பேரடையான அன்றோமீடா. அடுத்த வகை ஒழுங்கற்ற வடிவமுடை விண்மீன் பேரடைகள் (irregular galaxies) – இவற்றுக்கு இதுதான் வடிவம் என்பதுபோல இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும். இதற்கு உதாரணம் பெரிய மகிலன் முகில். முகில் என்று பெயரிட்டுள்ளனரே தவிர இது முகில் இல்லை. இவரைப் பற்றிக் கீழே பார்க்கப்போகிறோம்.

அளவு அடிப்படையில் பார்த்தால் சாதாரண விண்மீன் பேரடையில் நூறு பில்லியன் தொடக்கம் சில ட்ரில்லியன் விண்மீன்கள் வரைக் காணப்படலாம். நமது பால்வீதியில் அண்ணளவாக 200 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடுகின்றனர். அதுவே அருகில் இருக்கும் அன்றோமீடா விண்மீன் பேரடையில் ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் பில்லியன்) வரையான விண்மீன்கள் இருக்கலாம்!

அளவு அடிப்படையில் அடுத்தவகை குறள்விண்மீன் பேரடைகள் (dwarf galaxies). இவற்றில் 100 மில்லியன் தொடக்கம் சில பல பில்லியன் விண்மீன்கள் இருக்கக்கூடும். எனவே அளவில் இவை விண்மீன் பேரடைகளை விடச் சிறியவை. குறள்விண்மீன் பேரடையிலும் பல வகைகளை விண்ணியலாளர்கள் இனங்கண்டுள்ளனர். பொதுவாக இவற்றின் தோற்றமும் வாழ்க்கைக் கோலமும் அவற்றுக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளுடன் இவற்றின் இடைவினைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

சரி, நாம் கட்டுரையின் விடயத்திற்கு வருவோம். துணை விண்மீன் பேரடைகள் என்றால் என்ன? தனக்கு அருகில் இருக்கும் பாரிய விண்மீன் பேரடையின் ஈர்ப்புவிசையால் கட்டுப்பாட்டு அதனைச் சுற்றிவரும் விண்மீன் பேரடையே துணை விண்மீன் பேரடை எனப்படுகிறது.

அன்றோமீடாவும் அதன் இரண்டு துணை விண்மீன் பேரடைகள் M32, M110.

இவை தனது தாய் விண்மீன் பேரடையை சுற்றும் போது, இதன் ஈர்புவிசையும் தாய் விண்மீன் பேரடை மீது பாய்வதால், இரண்டும் இரண்டுக்கும் பொதுவான திணிவு மையத்தை அடிப்படையாக வைத்து சுற்றும். விண்மீன் பேரடை என்பது ஒரு தனிப் பொருள் அல்ல. அது விண்மீன்கள், கோள்கள் தூசு துணிக்கைகள் என்று ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்படாத வஸ்துக்களால் உருவான ஒன்று. அப்படி இருப்பினும் விண்மீன் பேரடைகளுக்கு சராசரி திணிவு மையப்புள்ளி உண்டு. விண்மீன் பேரடைகள், குறிப்பாக சுருள் விண்மீன் பேரடைகளில் உள்ள விண்மீன்கள் அவற்றின் மையத்தையே (galactic center) சுற்றி வருகின்றன.

பல விண்மீன் பேரடைகளுக்கு துணை விண்மீன் பேரடைகள் இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். எமது பால்வீதிக்கும் பல துணை விண்மீன் பேரடைகள் உண்டு. பால்வீதியில் இருந்து 1.4 மில்லியன் ஒளியாண்டு எல்லையினுள் 59 சிறிய விண்மீன் பேரடைகள் உண்டு. ஆனால் இவை எல்லாமே நமது பால்வீதியை சுற்றிவருகிறது என்று கூறிவிடமுடியாது.

பெரிய மகிலன் முகில் மற்றும் சிறிய மகிலன் முகில் என அழைக்கப்படும் இரண்டு குறள்விண்மீன் பேரடைகளை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதில் பெரிய மகிலன் முகில் அண்ணளவாக பால்வீதியின் மையத்தில் இருந்து 163,000 ஒளியாண்டுகள் தொலைவில் சுற்றிவருகிறது. இதன் விட்டம் அண்ணளவாக 14,000 ஒளியாண்டுகள். இருபது பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை கொண்டுள்ள பெரிய மகிலன் முகில், Local Group என அழைக்கப்படும் பால்வீதிக்கு அருகில் இருக்கும் 54 இற்கும் அதிகமான விண்மீன் பேரடைகளின் தொகுதில் இருக்கும் நான்காவது பெரிய விண்மீன் பேரடை ஆகும்.

அடுத்தது சிறிய மகிலன் முகில். இது பால்வீதியில் இருந்து 200,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இதன் விட்டம் அண்ணளவாக 7000 ஒளியாண்டுகள். இதில் பல நூறு மில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர். சிறிய மகிலன் முகில் ஒழுங்கற்ற வடிவமுடை விண்மீன் பேரடையாகும். ஆனால் பெரிய மகிலன் முகில் நடுவில் பட்டிபோன்ற அமைப்புக் கொண்ட ஒரு சுருள் விண்மீன் பேரடை. ஆனால் தற்போது இதன் அமைப்பை அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் பால்வீதியின் ஈர்புவிசையும், சிறிய மகிலன் முகிலின் ஈர்புவிசையும் சேர்ந்து பெரிய மகிலன் முகிலின் கட்டமைப்பை சீரழித்துவிட்டதே ஆகும்.

முதலில் இரு மகிலன் முகில்களும் பால்வீதியையே சுற்றி வருகிறது என்று கருதினாலும், 2006 இல் ஹபிள் தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பெரிய மகிலன் முகில் பயணிக்கும் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இது பால்வீதியை சுற்றிவரவில்லை என்று புலனாகிறது.

இவ்விரண்டு பேரடைகளையும் தவிர்த்தாலும், இவற்றைவிட இன்னும் அருகில், அதாவது வெறும் 50,000 ஒளியாண்டுகள் தொலைவில் சஜிட்டேரியஸ் குறள்க்கோல விண்மீன் பேரடை (Sagittarius Dwarf Spheroidal Galaxy) பால்வீதியை சுற்றிவருகிறது. இதனது சாதனையையும் முறியடிக்கும் வகையில் வெறும் 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் கனிஸ் மேஜர் குறள்விண்மீன் பேரடை பால்வீதியை சுற்றுகிறது.