சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று ஹபிள் தொலைநோக்கியைக் கொண்டு எமக்கு அருகாமையில் உள்ள பிரபஞ்ச சகோதரங்களை புறவூதாக் கதிர்வீச்சில் படம்பிடித்து ஆய்வு செய்துள்ளனர். இந்தப் புதிய தரவுகளைக் கொண்டு விண்மீன்கள் எப்படி உருவாகின்றன என்றும் பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகள் எப்படி உருக்குலையாமல் காலப்போக்கில் கூர்ப்படைகின்றன என்றும் ஆய்வுகளை நடத்த உதவியாக இருக்கும்.
மொத்தமான ஐம்பது விண்மீன் பேரடைகள் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டன. கீழே உள்ள படங்களில் ஹபிள் தொலைநோக்கியில் உள்ள Wide Field Camera 3 இன் மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான சில புகைப்படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்!
படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.
NGC 4490 விண்மீன் பேரடை. சீர்குலைந்தது போல இருக்கக் காரணம் அண்மைக்காலத்தில் அது இன்னொரு பேரடையுடன் மோதியதால் ஆகும்.
சுருள் பேரடை NGC 6744.
பூமியில் இருந்து 32 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடை NGC 1433.
13 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு சுருள் விண்மீன் பேரடை NGC 7793.
விசித்திரம் நிறைந்த IC 559 விண்மீன் பேரடை.
மேசியர் 96 என வகைப்படுத்தப்பட்ட விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.
குறள்விண்மீன் பேரடை UGCA 281.
இன்னுமொரு மேசியர் பொருள். இது மேசியர் 66 – சுருள்விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.