ஒளிக்கு என்று ஒரு தினம் – சர்வதேச ஒளி தினம்!

பல விடயங்களுக்கு நாம் சர்வதேச தினங்களை கொண்டாடுகிறோம், ஒளிக்கும் கொண்டாடிவிடவேண்டியது தான்! உதாரணத்துக்கு மே 20 உலக தேனிக்கள் தினம், ஜூன் 3 உலக சைக்கில் தினம் என்று கொண்டாடும் போது ஒளிக்கும் ஒரு தினம் – தவறில்லை.

ஏன் மே 16? அது ஒன்றும் எதேர்சையான விடையமல்ல. முதன் முதலில் வெற்றிகரமாக லேசர் கற்றையை 1960 மே 16 இல் பிறப்பித்துக் காட்டியவர் இயற்பியலாளரும் எஞ்சினியருமான தியடோர் மைமான். லேசர் உண்மையில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கு நல்ல முன்மாதிரி.

இன்றைய தினத்தில் லேசர் பல தொழில்நுட்ப இடங்களில் பயன்படுகிறதே! தொடர்பாடல், மருத்துவம், கட்டுமானம், விண்ணியல் என்று அதன் செல்வாக்கு இல்லாத துறையே இல்லை எனலாம். ஆகவே அதனைச் சிறப்பிக்கும் நோக்கோடு மே 16 ஐ ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஒளி தினமாக அனுஷ்டிக்கின்றனர்.

ஒளிக்கு என்று ஒரு தினத்தை உருவாக்குவதில் முன்னின்றது UNESCO எனும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம். United Nations Educational, Scientific and Cultural Organization தான் UNESCO.

சர்வதேச ஒளி தினத்தை இவர்கள் கொண்டாடுவதன் மூலம் அடைய நினைக்கும் இலக்குகள் என்ன?

  1. ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் எப்படி மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன என்று மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  2. உலகம் முழுவதும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், பாலின சமத்துவத்தை வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்படுத்துதல்.
  3. ஒளிக்கும் கலைக்கும் கலாச்சாரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை வெளிக்கொண்டுவருவதும், அதனைப் பயன்படுத்தி கலாச்சார மதிப்பைப் பாதுகாத்தல்.
  4. உலக நாடுகளின் அரசுகளையும், NGO க்களையும் கல்விசார் நிறுவனங்களையும் இணைத்து சர்வதேச ஒற்றுமையை உருவாக்குதல்.
  5. தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி சமூக மதிப்பீட்டை அதிகரிக்கும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

சரி, ஒளியைப் உங்களுக்கு கொஞ்சூண்டு நல்ல எண்ணம் வந்தால், அதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆசைப்பட்டால், பரிமாணத்தில் ஒளியைப் பற்றி ஒரு பெரிய தொடரே இருக்கிறது. அதனை கீழே உள்ள லிங்கில் இருந்து வாசிக்கலாம்.

மின்காந்த அலைகள் கட்டுரைத் தொடர்