சிறுகோள்களுடன் மோதுவதை தடுப்பது எப்படி என்று கற்கும் இயந்திரங்கள்

ஒரு பேருந்து அளவுள்ள சிறுகோள் ஒன்று 12 அக்டோபர் 2017 இல் பூமிக்கு அருகாக புல்லட் புகையிரதத்தின் வேகத்தின் (மணிக்கு 450 கிமீ) இருமடங்கு வேகத்தில் பூமிக்கு அருகில் கடந்து சென்றது.

இந்த அளவுள்ள சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தின் நுழைந்த்திருந்தால் வானிலேயே எரிந்துவிட்டிருக்கும். ஆனால் பூமிக்கு இப்படி அருகில் வரும் சிறுகோள்களைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும். இவை பல கேள்விகளை உருவாக்குகின்றன. பூமியுடன் மோத வரும் சிறுகோள்களை எப்படி நாம் தடுப்பது? தடுக்க இருக்கும் பல வழிகளில் எது சிறந்தது?

இதற்கான விடையை அறிய விஞ்ஞானிகள் “இயந்திரக் கற்றல்” (Machine Learning) எனும் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தற்போது இயந்திரக் கற்கை எம்மைச் சுற்றி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது – உங்கள் மின்னஞ்சல் ஸ்பாம் பில்டர், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு காட்டப்படும் பரிந்துரைகள் மற்றும் பல இடங்களிலும் நீங்கள் இயந்திரக் கற்கை முறையைப் பயன்படுத்தி உங்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதை அவதானிக்கலாம். சிம்பிளாக இயந்திரக் கற்கை என்றால் என்னவென்று கூறவேண்டும் என்றால், ஒரு வேலை செய்வதற்கான எடுத்துக்காட்டை நீங்கள் கணனிக்கு காட்டினால், அதனைக் கொண்டு அந்த வேலையை எப்படி செய்வது என்று கணணி கற்றுக்கொள்ளும்.

படவுதவி: NASA/JPL-Caltech

நமது சிறுகோள் பிரச்சினையில், கணனிக்கு மில்லியன் கணக்கான பூமியுடன் சிறுகோள்கள் மோதுவது போன்ற ஒப்புருவாக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் பூமியுடன் சிறுகோள் மோதும் அல்லது மோதாது. போதுவதை வெற்றிகரமாக கண்டறிவதற்கான காரணிகள் பல. ஒன்று குறித்த சிறுகோளின் அளவு, மற்றையது என்ன முறையைப் பயன்படுத்தி குறித்த சிறுகோளின் பயணப்பாதை தீர்மானிக்கப்பட்டது என்பது அடுத்தது எவ்வளவு விரைவாக குறித்த சிறுகோள் கண்டறியப்பட்டது.

இப்படியான தகவல்களைப் பயன்படுத்தி சிறுகோள் ஒன்று மோதுமா இல்லை மோதாதா என்பதனை கண்டறிவதற்கு கணனிகள் கற்பிக்கப்பட்டன. முறையாக இவற்றைக் கணனிகள் கற்றுக்கொண்டால் அவை எமக்கு எப்படி பூமியை நோக்கி வரும் சிறுகோள் ஒன்றை தடுப்பது என்று அறிவுறுத்தும்.

எனவே, எப்போதாவது நாம் பூமியை நோக்கி மோதவரும் உண்மையான சிறுகோள் ஒன்றைக் கண்டால் அந்தச் சிறுகோள் பூமியுடன் மோதுமா இல்லையா என்று இந்தக் கற்றறிந்த கணனிகள் எமக்குச் சொல்லும். மேலும் எப்படி மோதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்றும் இவை எமக்குச் சொல்லும்!

மேலதிக தகவல்

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்களில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி பல வழிகளை பலரும் முன்மொழிந்துள்ளனர். அதில் அணுகுண்டைப் பயன்படுத்தி சிறுகோளை தகர்த்தல், ஈர்ப்பு விசையைக் கொண்டு சிறுகோளை திசை மாற்றுதல் என்பனவும் அடங்கும். இதில் ஈர்ப்பு விசையைக் கொண்டு சிறுகோள் ஒன்றின் திசையை மாற்றுவது என்பது ஒரு விண்கலத்தை சிறுகோளிற்கு அருகில் செலுத்தி அதன் ஈர்ப்பு விசை மூலம் சிறுகோளின் பயணப்பாதையை சற்றே மாற்றுவது. அணுகுண்டு முறையை விட இது சிறிய பாதிப்பைக் கொண்டிருப்பதுடன் மிகவும் ஆபத்தற்ற முறை!


இதன் ஆங்கிலப் பிரதி: http://www.unawe.org/kids/unawe1810/