“நரி நக்கிக் கடல் காயுமோ” என்று ஒரு முதுமொழி உண்டு. பழமொழி நானூறு என்கிற நீதி நூலில் இது இருக்கிறது. அதனைப் பற்றி கட்டுரையின் முடிவில் சொல்கிறேன். ஆனால் இந்தக் கேள்வி நல்ல கேள்வி அல்லவா? நரி நக்கிக் கடல் வற்றுமா? கடல்ல எம்புட்டு தண்ணி இருக்கு அது வற்றிப் போகுமோ? வற்றி இருக்கு! வற்ற வச்சி இருக்கிறோம் என்பதுதான் ஹைலைட்.
கசகஸ்தான் நாட்டின் தெற்குப்பகுதியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் வடக்கிலும் இருக்கும் ஒரு கடல் தான் “ஏரல் கடல்”. கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒரு ஏரி. ஏரி என்றதும் குட்டை காய்ந்ததற்கு எல்லாம் ஒரு கட்டுரையா என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஏரி முன்பு உலகில் இருந்த ஏரிகளில் நான்காவது பெரிய ஏரியாக இருந்துள்ளது. அதனது அளவு 68,000 சதுர கிமீ. ஒரு ஒப்பீட்டுக்கு இலங்கையின் மொத்த பரப்பு 65,610 சதுர கிமீ மட்டுமே!
தற்போது எஞ்சி இருக்கும் மொத்த ஏரல் கடலின் பரப்பு வெறும் 17,160 சதுர கிமீ தான். அதுவும் இந்த அளவீடு 2004 இல் எடுக்கப்பட்டது. நடந்தது என்ன என்றால் 1960 களில் சோவியத் ஒன்றியம் இந்த ஏரிக்கு நீரைக் கொண்டுவரும் ஆறுகளை மடக்கி நீர்பாசன திட்டங்களை அமைத்ததால் இந்த ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைவடையத் தொடங்கி அப்போதிருந்து கொஞ்சம் கொஞ்சமாக் வற்றி இன்று முழுதும் இழக்கும் நிலையில் இருக்கிறது.
1997 இல் எடுத்த அளவீட்டில் இந்த ஏரியின் உண்மையான மொத்த அளவில் எஞ்சியிருந்தது வெறும் 10% மட்டுமே! ஒரு காலத்தில் இங்கிருந்த மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி இருந்தனர். ஏரல் கடலும் வற்றிவிட அவர்களும் வேறு வாழ்வாதாரங்களை தேடி நகர்ந்துவிட்டனர்.
உலகின் மிக மிக மோசமான சுற்றுச் சூழல் பேரழிவு என்று இந்த நிகழ்வு கருதப்படுகிறது. ஆனாலும் இதனால் விளைந்த ஒரு நன்மை, நீர்ப்பாசன திட்டத்தின் காரணமாக அதற்கு அருகில் இருந்த 5 மில்லியன் ஏக்கர் பாலைவன நிலம் பச்சைப் பசேல் என்று விவசாய நிலமாக மாற்றிவிட்டது தான்.
தற்போது கசகஸ்தான் அரசு இந்தக் கடலை மீண்டும் புதுப்பிக்க பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2005 இல் கட்டி முடிக்கப்பட்ட ஒரு அணை காரணமாக 2008 இல் ஏரல் கடல் நீர் மட்டம் 2003 உடன் ஒப்பிடும் போது 12 மீட்டார் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது உப்புத் தன்மையும் கொஞ்சம் குறைவடைந்து மீன்கள் மீண்டும் வந்துள்ளதாகவும் மீன் பிடி கொஞ்சம் கொஞ்சம் தொடங்குகிறது.
ஆனால், 2014 இல் நாசா எடுத்த புகைப்படம், இந்தக் கடலின் கிழக்குப் பிரதேச பகுதி முழுமையாக வற்றிவிட்டத்தைக் காட்டுகிறது. தற்போது இந்தப் பிரதேசம் அரல்கும் பாலைவனம் என அழைக்கப்படுகிறது.
ஒரு கடலையே வற்ற வைக்கும் திறன் கொண்டவன் மனிதன் என்பதனை எந்த பிரிவில் சேர்ப்பது என்று எனக்கும் புரியவில்லை.
சரி மேலே கூறிய “நரி நக்கிக் கடல் காயுமோ” என்கிற பழமொழி முன்றுறை அரையனார் எனும் புலவர் கூறிய பாடலில் இருக்கிறது.
களமர் பலரானும் கள்ளம் படினும்,
வளம்மிக்கார் செல்வம் வருந்தா – விளைநெல்
அரிநர் அணைதிறக்கும் ஊர! அறுமோ
நரிநக்கிற் றென்று கடல்.
பொருள்: சிலர் திருடிவிட்டார்கள் என்பதற்காக பெரும் செல்வந்தரின் செல்வம் குறைந்துவிடாது. நரி நக்கி கடல் காய்ந்துவிடுமோ? இல்லை தானே, வயலில் விளைந்த நெல்லை அறுக்கும் பொருட்டு வரப்பு நீரை திறந்துவிடும் நெல்வளம் மிக்க ஊரை உடைய வேந்தனே!
பழமொழி நானூறு என்கிற புத்தகத்தில் இருக்கும் மூலமும் உரையும். விக்கிமூலத்தில் இருக்கிறது. லிங்க் இதோ – https://goo.gl/EhDxan