இறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள்

நானூறு வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற விஞ்ஞானியான கலிலியோ கலிலி பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேலே ஏறி இரண்டு வேறுபட்ட நிறை கொண்ட பந்துகளை கீழ்நோக்கி விட்டார். பொதுவாக நிறை கூடிய பந்து வேகமாக விழும் என பலரும் எதிர் பார்த்தனர், ஆனால் இரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் விழுவதை அவர் அவதானித்தார்.

இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இது பொருளின் திணிவு ஈர்ப்புவிசையின் இழுக்கும் வேகத்தில் செல்வாக்கு செலுத்துவதில்லை என்று எமக்குச் சொல்கிறது. எவ்வளவு பாரமானதாக இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே வேகத்தில் தான் விழும்.

பல வருடங்களுக்கு பின்னர் கலிலியோ செய்த அதே பரிசோதனையை விஞ்ஞானி ஒருவர் நிலவில் செய்தார். அவர் ஒரு சுத்தியலையும் இறகையும் ஒரே நேரத்தில் கைவிட்டார். ஒரே உயரத்தில் இருந்து இரண்டுமே ஒரே நேரத்தில் நிலத்தை அடைந்தது. ஆனால் இது பூமியில் சாத்தியமில்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நிலவைப் போல அல்லாமல் பூமியில் வளிமண்டலம் இருக்கிறது. வளிமண்டலத்தில் இருக்கும் காற்று கீழே விழும் பொருட்களை மேல்நோக்கி தள்ளுவதால் சில பொருட்கள் மற்றவற்றை விட வேகம் குறைவாக நிலத்தில் வீழ்கின்றன.

படவுதவி: ASTRON

அல்பர்ட் ஐன்ஸ்டீன் மூலமாக கலிலியோவின் காலத்தி நாம் அறிந்திருந்ததை விட இன்று ஈர்ப்புவிசை பற்றி மேலும் தெளிவாக அறிந்துள்ளோம். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் உருவாக்கிய ஈர்ப்புவிசை பற்றிய கோட்பாடு இன்றுவரை பரிசோதனைக் கூடத்திலும், சூரியத் தொகுதியிலும் அனைத்து பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஆனாலும் விண்ணியலாளர்கள் மேலும் பல தீவிரமான வழிகளில் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை பரிசோதனை செய்துபார்க்க எத்தனிக்கின்றனர். அண்மையில் தொலைவில் உள்ள ஒரு குழு விண்மீன்களுக்கு இடையில் இருக்கும் மிகத் தீவிரமான ஈர்ப்புவிசையிலும் இந்தக் கோட்பாடு வேலைசெய்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்தக் விண்மீன் குழுவில் இரண்டு வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்களும் ஒரு பல்சார் வகை விண்மீனும் அடங்கும். இந்தப் பல்சாரின் ஈர்ப்புவிசை நமது பூமியின் ஈர்ப்புவிசையைவிட 2 பில்லியன் மடங்கு அதிகம். எனவே இங்கு எப்படி இந்தக் கோட்பாடு தாக்குப்பிடிக்கிறது என்று பார்க்க சிறந்த இடமாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்றால், பல்சாரும் அதற்கு அருகில் இருக்கும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் இரண்டிற்கும் தொலைவில் இருக்கும் வெள்ளைக் குள்ளனை நோக்கி இழுக்கப்பட வேண்டும்.

இவற்றின் அசைவை துல்லியமாக அளக்க பல்சார் எமக்கு சிறந்த முறையை தருகிறது – இவை பிரகாசமாக ஒளியை அதனது துருவங்களிநூடாக பீச்சியடிக்கிறது. பல்சார் சுழல்வதால், பூமியில் இருந்து பார்க்கும் போது கலங்கரை விளக்கம் போல ஒரு செக்கனுக்கு 366 தடவைகள் பூமியை நோக்கி ஒளியை பாச்சுகிறது. இந்த தொடர்ச்சியான ஒளித்துடிப்பு எப்படி பல்சார் அசைகிறது என்று கணக்கிட உதவுகிறது.

ஆறு வருடங்களும், 8000 அளவீடுகளுக்கும் பிறகு விஞ்ஞானிகள் இந்த பல்சாரும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் தான் அறைகின்றன என்று உறுதிப்படுத்தியுள்ளனர் – ஐன்ஸ்டீனின் கோட்பாடு மீண்டும் ஒருமுறை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது!

மேலும் ஒரு தகவல்

ஐன்ஸ்டீன் கோட்பாடு படி பொருள் ஒன்றைப் போலவே ஒளியையும் ஈர்ப்புவிசை பாதிக்கிறது. அதிகூடிய ஈர்ப்புவிசை கொண்ட பொருள் ஒன்றிற்கு அருகில் செல்லும் போது ஒளியின் பாதை வளைகிறது.

இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி: http://www.unawe.org/kids/unawe1817/