செவ்வாயில் திரவ நிலையில் நிலத்தடி நீர்?

செவ்வாயின் மேற்பரப்பிற்கு ஒரு மைல் ஆழத்தில் திரவ நிலையில் நீரைக் கொண்ட ஏரி ஒன்றினை மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனும் செய்மதி கண்டறிந்துள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் நிலத்தை ஊடுருவிப் பார்க்கும் ரேடார் கருவி கொண்டு இந்த நிலத்தடி ஏரியைக் கண்டறிந்துள்ளது. அண்ணளவாக 20 கிமீ நீளமான இந்த ஏரியின் ஆழம் கிட்டத்தட்ட ஒரு மீட்டருக்கும் சற்றே அதிகம் என்று இதன் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் செவ்வாயில் பூமி போலவே நீர் நிலைகள் இருந்தன என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு இவர்களின் கணிப்பை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது. ஆனாலும் வெறும் ஒரு செய்மதியின் தரவுகளைக் கொண்டு மட்டுமே உடனடியாக இங்கே நீர் திரவ நிலையில் இருக்கிறது என்று முடிவுக்கு வந்துவிடமுடியாது. அதற்குக் காரணம் இருக்கிறது. அதனைப் பற்றி மேலும் கீழே இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஆரம்பக் காலத்தில் இருந்தே எமக்கு செவ்வாயின் மேலே ஒரு அலாதியான பிரியம் இருந்தது எனலாம். முதன்முதலில் அனுப்பிய நாசாவின் விண்கலமான மரினர் 4 ஜூலை 14, 1965 இல்  செவ்வாயை அடைந்து அது அனுப்பிய 21 புகைப்படங்கள் உண்மையில் எமது எதிர்பார்ப்பை உடைத்தது, அதற்குக் காரணம் செவ்வாயில் தாவரங்கள் இருக்கலாம் என்று பல விஞ்ஞானிகள் அப்போது கருதினர். மரினர் அனுப்பிய புகைப்படங்களில் இருந்த பாலைவனக் காட்சிகளும், நிலவைப்போல பல விண்கற்களால் ஏற்பட்ட பள்ளத்தாக்குகளும் விஞ்ஞானிகளின் கனவைக் கலைத்தது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்பக் காலப்பகுதியில் செவ்வாய்க்கு அருகில் பறந்து படம் பிடித்த அனைத்து விண்கலங்களும் பார்த்த செவ்வாயின் இடம் ஒரே பிரதேசம் தான்.

அதகுப் பிறகு பல விண்கலங்களை அனுப்பி இருந்தாலும், எமக்கு செவ்வாயின் மற்றொரு முகத்தைக் காட்டியது மரினர் 9 விண்கலம் தான். நவம்பர் 1971 இல் செவ்வாயை அடைந்த மரினர் 9 செவ்வாயில் புழுதிப் புயல் அதன் பெரும்பாலான பிரதேசங்களை மூடியிருந்ததை அவதானித்தது. புழுதிப்பு புயல் அடங்கியதும் பல எரிமலை வாய்களை மரினர் கண்டது, மேலும் செவ்வாயின் பிரதான அம்சமான 4000 கிமீக்கும் அதிக நீளமான செங்குத்து பள்ளத்தாக்கை கண்டது.

செவ்வாயின் புதிரான தோற்றமும் அம்சமும் மேலும் பல விஞ்ஞான ஆய்வுகளை அங்கே மேற்கொள்ள பல புதிய விண்கலங்களை மனிதன் அனுப்ப காரணமாயிற்று என்றும் கூறலாம். செவ்வாயை சுற்றி புகைப்படங்கள் எடுத்தால் மட்டும் போதாது, செவ்வாயில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டால் அங்கே நுண்ணுயிர்கள் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

நாசாவின் வைக்கிங் திட்டம் உருவாகிற்று.

ஜூலை 24, 1976 இல் வைக்கிங் 1 எடுத்த செவ்வாயின் புகைப்படம்

வைக்கிங் 1 ஆகஸ்ட் 20, 1975 இல் பூமியில் இருந்து புறப்பட்டு 1976 இல் செவ்வாயை அடைந்தது. வைக்கிங் 2 செப்டெம்பர் 9, 1975 இல் பூமியில் இருந்து புறப்பட்டு 1976 இல் செவ்வாயை அடைந்தது. வைக்கிங் இரண்டு வகையான ஆய்வுத் திட்டம், ஒன்று செவ்வாயை சுற்றிவரும் விண்கலம், அடுத்தது செவ்வாயில் தரையிறங்கும் தரையிறங்கி. எனவே இரண்டு விண்கலம், இரண்டு தரையிறங்கி என்று மொத்தமாக சேர்த்து 50,000 இற்கும் அதிகமான புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தன.

வைக்கிங் தரையிறங்கிகள் செய்த மண் பரிசோதனையில் நுண்ணுயிர்களுக்கான எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை, ஆனாலும் அதன் வளிமண்டல ஆய்வு எமக்கு செவ்வாயின் வளிமண்டல கட்டமைப்பை தெளிவாக காட்டியது. இதன் மூலம் பூமியில் நாம் கண்டெடுத்த சில விண்கற்கள், செவ்வாயில் இருந்து வந்திருக்கலாம் என்று எம்மால் உறுதியாக கூறக்கூடியதாக இருந்தது. எனவே இந்த விண்கற்களை ஆய்வு செய்த போது பல சுவாரஸ்யமான ரகசியங்களை செவ்வாய் தன்னகத்தே ஒழித்துவைத்துள்ளது என்பது தெளிவாகிற்று. அதன் பின்னர் அமெரிக்காவின் நாசாவும் சரி, ஐரோப்பிய ஒன்றீயத்தின் ESO வும் சரி பல ஆய்வுகளை செவ்வாயில் பல தசாப்தங்களாக செய்து வருகின்றன.

இதில் தற்போதைய பிளாஷ் நியூஸ் தான் செவ்வாயில் திரவ நிலையில் நீர் இருப்பது பற்றிய கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது மார்ஸ் எக்ஸ்பிரஸ் (Mars Express) எனும் ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விண்கலமாகும். டிசம்பர் 2003 இல் இருந்து செவ்வாயை சுற்றி வரும் இந்த விண்கலம் தன்னிடம் உள்ள 40 மீட்டார் நீளமான ரேடார் மைக் கொண்டு செவ்வாயின் உட்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறது.

2007 ஆம் ஆண்டில் செவ்வாயின் தென் துருவத்திற்கு அருகில் ரேடார் சிக்னல்கள் அதிகமாக எதிரொளிப்பதை மார்ஸ் எக்ஸ்பிரஸ் அவதானித்தது. பூமியைப் போலவே செவ்வாயிலும் இப்படியான ஒரு பிரதிபலிப்பை நீரால் உருவாக்க முடியும் என்று நாம் அறிவோம். எனவே விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டனர். ஆனால் மேலதிக ஆய்வுகள் இது செவ்வாயின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைட் என்று கூறியது. ஆனாலும் நீரைப் போல அல்லாமல் கார்பன் டை ஆக்சைட் ரேடார் சிக்னல்களை கண்ணாடி போல தன்னூடாக ஊடுருவவிடும், இந்தப் பண்பு காரணமாக மேலதிக ஆய்வுகளின் முடிவுகளில் பல விஞ்ஞானிகளும் சந்தேகம் கொண்டனர்.

Mars Express, NASA/JPL/CORBY WASTE

மேலும், தொடர்ச்சியாக இந்த இடத்தை ஆய்வு செய்வதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் வேறுபட்ட தரவுகள் கிடைப்பதே ஆகும். ஒரு நாளில் தெளிவாக பிரகாசமான பிரதிபலிப்பு இருக்கும், ஆனால் மீண்டும் அடுத்த கிழமை அதே இடத்திற்கு மேலாக பறந்து ஆய்வுகளை செய்தால் எந்தவொரு பிரதிபலிப்பும் இருக்காது. இது பெரிய சிக்கலாக இருந்தது.

இந்தச் சிக்கலுக்கு காரணம் புதிரான செவ்வாய் அல்ல, மாறாக மார்ஸ் எக்ஸ்பிரஸ் தான். விண்கலத்தின் ரேடார் அதிகளவான தரவுகளை சேகரித்ததால், அவற்றை ஒருங்கிணைத்து அவற்றின் சராசரியை மார்ஸ் எக்ஸ்பிரஸ் சேமித்துக்கொள்ளும், இந்த செயன்முறையில் சில சிறிய பிரகாசமான தரவுகள் விட்டுப்போக வாய்ப்பு இருந்தது. இப்படித்தான் குறித்த செவ்வாயின் பிரதேசம் சார்ந்த தகவல்கள் சிலவேளைகளில் கிடைக்காமல் போகக் காரணமாக இருந்தது.

எனவே மார்ஸ் எக்ஸ்பிரஸ் எஞ்சினியர்கள் தரவு சேகரிக்கும் முறையை மாற்றி அமைத்து மீண்டும் தரவுகளை சேகரிக்கத் தொடங்கினர், ஆனாலும் அதிலும் ஒரு புதிய சிக்கல். மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஒரே சுற்றுப் பாதையில் செவ்வாயை சுற்றி வருவதில்லை. எனவே நீண்ட நாட்களுக்கு பிறகான அவதானிப் என்பது சற்றே சாதியக் குறைவானது. மீண்டும் அதே இடத்திற்கு விண்கலம் வரும் வரை அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

அடுத்த மூன்றரை வருடங்களில் இவர்கள் குறித்த பிரதேசத்தில் 29 அவதானிப்புகளை சேகரித்துக்கொண்டனர். அவ்வேளையிலும் இன்னொரு சோகமான நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஆய்வுகளுக்கு பொறுப்பான தலைமை விஞ்ஞானி ஜியோவானி பிக்கார்டி 2015 இல் உயிர் நீத்தார். செவ்வாயின் நிலத்தடியில் நீர் இருப்பதை முழுமையாக நம்பிய விஞ்ஞானி அவர். முழுத் தரவுகளும் வருவதற்கு முன்னரே அவர் பூமியை விட்டு சென்றுவிட்டார்.

சரி, சேகரித்த தரவுகள் என்ன கூறியது?

ஆய்வுகளின் முடிவு இந்த நிலத்தடி ஏரி நீர் சற்றே உப்புக் கலந்த நீராக இருக்கவேண்டும் என்று கூறுகிறது, மேலும் திரவநிலையில் இது இருக்கவேண்டும் என்பதும் கூடுதல் தகவல். அண்ணளவாக மைனஸ் 10 பாகை செல்சியல் வெப்பநிலையில் இந்த ஏரி காணப்படுகிறது.

மைனஸ் டிகிரி செல்சியசிலும் நீர் திரவநிலையில் இருக்க இந்த நீரில் உப்புக்கள் கலந்திருக்கவேண்டும். சோடியம், மக்னீசியம், கல்சியம் போன்றவை நீரில் கலந்தால் நீரின் உருகுநிலை மைனஸ் 74 பாகை செல்சியஸ் வரை செல்லும்.

பூமியிலும் இப்படியான நிலத்தடி ஏரிகள் இருக்கின்றன. அவை மிகுந்த உப்புத்தன்மையானவை, ஆனாலும் அப்படிப்பட்ட அதிக செறிவான உப்பு நீரிலும் சிறிய நுண்ணுயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. இவை அந்த நீரில் இருக்கும் உப்பை தங்கள் சக்திமூலமாக பயன்படுத்திக்கொள்கின்றன. இதனைப்போல ஒரு செயன்முறை செவ்வாயிலும் இடம்பெறலாம் அல்லவா? யாருக்குத் தெரியும், அதெல்லாம் அங்கே சென்றுதான் ஆய்வு செய்யவேண்டும்.

மேலும் இந்த ஆய்வை செய்துவரும் குழு இந்த நிலத்தடி ஏரி தனிப்பட்ட ஒரு ஏரியாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதுகிறது. பெரிய ஒரு ஏரிகளின் குழுமத்தில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் பல வேறு இடங்களிலும் பிரகாசமான பிரதிபலிப்புகளை மார்ஸ் எக்ஸ்பிரஸ் அவதானித்துள்ளது. ஆனால் அவற்றுக்கு கீழே இருக்கும் ஏரிகளின் குழுமத்தைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம் தற்போது இவர்களிடம் இல்லை என்று இந்தக் குழு கூறுகிறது.

செவ்வாயில் நிலத்தடி ஏரி இருப்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்தாலும், இதனை உறுதிப்படுத்த மேலும் வேறு குழுக்களின் அவதானிப்புகள் தேவை. இதற்கு முக்கிய காரணம், மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருக்கும் MARSIS ரேடார் தான் இந்த பிரதிபலிப்பை அவதானித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் போலவே நாசாவின் செவ்வாய் புலனாய்வு சுற்றுவான் (Mars Reconnaissance Orbiter) இல் இருக்கும் SHARAD ரேடர் மூலம் இந்த குறித்த இடத்தில் இருக்கும் நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

Mars Reconnaissance Orbiter (MRO)

இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் MARSIS ஐ விட SHARAD ரேடார் தான் அதிகூடிய மீடிரனில் தொழிற்படுகிறது. எனவே SHARAD தான் உண்மையில் இதனைக் கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் அதனால் இந்த நிலத்தடி நீரைக் காணமுடியவில்லை. இதற்குக் காரணம் தென் துருவத்தில் இருக்கும் துருவப் பனி SHARAD இன் ரேடார் சிக்னல்களை சிதறடிக்கச் செய்வதால் இப்படி நிகழலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

SHARAD 20Mhz இல் தொழிற்படுவதால் இந்தச் சிக்கல் இருக்கிறது. MRO வின் ஆய்வாளர்களில் ஒருவர் துருவப் பிரதேசங்களை ஆய்வு செய்வதில் சிக்கல்கள் ஏற்கனவே SHARAD இற்கு இருப்பதாக கூறுகிறார்.

ஆனாலும் பல விஞ்ஞானிகள் புதிய ஆய்வின் முடிவை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கருதுகின்றனர், மீண்டும் வேறு ஒரு ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தும் வரை எம்மால் உறுதிபடக் கூறமுடியாதுதான்.

2020 இல் செவ்வாய்க்கு செல்லப்போகும் சீனாவின் விண்கலம்.

2020 இல் சீனாவின் செவ்வாய்த் திட்டம் ரேடார் ஒன்றைக் காவிச் செல்கிறது. இது MARSIS இன் மீடிரனுக்கும் SHARAD இன் மீடிரனுக்கும் இடையில் தொழிற்படும். எனவே அதனால் இதனை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

செவ்வாயில் திரவநிலையில் நீர் இருந்தால் உண்மையிலேயே அது மிக மிக ஆச்சரியமான விடையம்தான். திரவநிலை நீர் உயிருக்கு நாடி என்பது நாமறிந்த விடையம் தானே.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

படங்கள்: நாசா, இணையம்