கடலில் மூழ்கிய எல்லாமே ஒரு கட்டத்தில் கடலோடு கடலாகிவிடவேண்டும் என்பது இயற்கையின் நியதிதான். ஏப்ரல் 15, 1912 இல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையும் அதுதான் என்பது நாமறிந்தது தான். ஆனாலும் டைட்டானிக் கப்பலின் எச்சத்தை வரலாற்றில் இருந்து எடுத்துவிட ஒரு குழு மும்முரமாக வேலை செய்கிறது!
கடலின் உப்பு நீரின் ஆற்றலோடு சேர்ந்து இந்த சக்தியும் துருப்பிடிக்கும் வேகத்தை மிக அதிகமாக்கியுள்ளது. கடல் நீரில் மூழ்கினாலேயே கொஞ்சம் கொஞ்சமாக துருப்படிப்பது வழமைதான். ஆனால் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் வழமைக்கு மாறாக மிக வேகமாக துருப்பிடித்து கரைந்து போவதை 2010 இல் இந்தக் கப்பலின் எச்சத்தை ஆய்வு செய்த குழு கண்டறிந்துள்ளது.
இப்படி வேகமாக இந்தக் கப்பலின் பாகங்களை உண்டு முடிப்பது ஒரு வகையான புரோட்டோபக்டீரியா. இதற்கு ஹலோமொனாஸ் டைட்டானிகே (Halomonas titanicae) எனப் பெயரிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் கணக்குப் படி, 2030 அளவில் மொத்த டைட்டானிக் எச்சமும் முழுதாக அழிந்துவிடுமாம்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கப்பலுக்கு இந்த நிலையா என்று சிந்திக்க தோன்றும் அதேவேளை, இந்த பாக்டீரியாவின் கண்டுபிடிப்பு ஒரு நல்ல விடையம் தான். காரணம் பல தேவையற்ற கப்பல்களும் இரும்புக் குப்பைகளும் கடலில் மூழ்கியுள்ளன அல்லது மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இந்த பாக்டீரியாவை டைட்டானிக் கப்பலின் எச்சத்தில் இருந்து எடுத்து அதனை வேறு இடங்களிலும் பயன்படுத்த முடிந்தால், இப்படியான இரும்புக் குப்பைகளை கடலில் இருந்து வேகமாக அகற்றிவிடலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.