சூரியனைத் தொட ஒரு திட்டம்

நாசாவின் பார்கர் சோலார் ஆய்வி (Parker Solar Probe) வரும் சனிக்கிழமை (11.8.2018) அன்று செலுத்தப்படவுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதலாவது திட்டம் இது. இதற்கு முன்னரும் பல செய்மதிகளையும் விண்கலங்களையும் நாம் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தாலும் அவை ஒன்றும் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யவில்லை. இந்த பார்கர் விண்கலம் சூரியனில் இருந்து வெறும் 6 மில்லியன் கிமீ தொலைவில் சுற்றிக்கொண்டே சூரியனை ஆய்வு செய்யும். அதாகப்பட்டது சூரியனின் வளிமண்டலத்திற்கு உள்ளே இது சுற்றும் என்றும் சொல்லலாம்!

நாசா பார்கர் விண்கலம், நன்றி: Steve Gribben/NASA/Johns Hopkins APL

பல தசாப்தங்களாக சூரியனை மிக அருகில் சென்று ஆய்வுகளை நடத்தவேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக அது சாத்தியப்படவில்லை. காரணம் சூரியனின் வெப்பம் – விண்கலத்தையும் அதில் இருக்கும் தொழில்நுட்ப கருவிகளையும் எப்படி இவ்வளவு உக்கிரமான வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது? எனவே சூரியனை அருகில் சென்று ஆய்வுசெய்யும் திட்டம் கனவாகவே இருந்தது.

சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பிரயோக இயற்பியல் ஆய்வுகூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பார்கர் விண்கலத்திற்காண வெப்பக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். எட்டு அடி அகலமான இந்த வெப்பக் கவசம் விண்கலத்தில் இருக்கும் கருவிகளை 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்கும்.

அண்ணளவாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் 2025 வரை நீடிக்கும். இந்த ஏழு வருட ஆய்வில்முக்கியமாக நான்கு விடையங்கள் சம்பந்தமாக தரவுகள் சேகரிக்கப்படும்.

அதில் முதலாவது Wide-Field Imager எனப்படும் புகோ[புகைப்படக் கருவி. இது பார்கர் விண்கலம் சுற்றும் பாதையில் இருந்து புகைப்படங்கள் எடுக்கும். இந்தப் புகைப்படங்கள் ஏனைய கருவிகளில் இருந்து எடுக்கும் தரவுகளுக்கு படம் மூலமான ஆதாரத்தைக் கொடுக்கும்.

அடுத்த கருவி FIELDS எனப்படும் கருவி. இது சூரியனின் வளிமண்டத்தில் இருக்கும் மின் மற்றும் காந்தப்புலங்களை வரைபடமாக்கும். இதன் மூலம் அதிக சக்திகொண்ட பிளாஸ்மா வகை துணிக்கைகள் எப்படி வீரியமான மின் மற்றும் காந்தப்புலங்களில் செயலாற்றுகின்றன என்று ஆய்வாளர்களால் அறிய உதவும்.

அடுத்த கருவி Solar Wind Electron Alphas and Protons எனப்படுகிறது. இது சூரிய புயலை பற்றி ஆய்வு செய்யும். சூரியப் புயலில் இருக்கும் துணிக்கைகளை எடுத்து அவற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை என்பவற்றை இது குறித்துக்கொள்ளும். அடுத்த கருவியும் சூரிய புயலைப் பற்றி ஆய்வு செய்வதுதான். Integrated Science Investigation of the Sun எனப்படும் அடுத்த கருவி சூரியப் புயலில் இருக்கும் துணிக்கைகள் எப்படி மிக வேகமாக பயணிக்கின்றன என்று ஆய்வு செய்யும். செக்கனுக்கு 500 கிமீ இற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் இந்த துணிக்கைகளுக்கு காரணம் என்ன என்று தெளிவாக இது கண்டறியும்.

பார்கர் விண்கலத்தின் முக்கிய நோக்கமே சூரிய புயலைப் பற்றி படிப்பதுதான். சூரியப் புயலே விண்வெளி வானிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். எனவே இதனை தெளிவாக படிப்பதன் மூலம் விண்வெளி வானிலை பற்றி மேலும் அறிந்து கொள்வதுடன் அதனை ஊகிக்கும் சாத்தியக்கூற்றையும் அதிகரிக்கலாம் என்பது பார்கர் விண்கல விஞ்ஞானிகளின் எண்ணம்.