முதுகுத் தண்டில் விபத்து என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. உடலின் முழு செயற்பாட்டையும் பாதிக்கும் அளவிற்கு மிக முக்கியமான ஆசாமி இந்த முண்ணாண். எனவே அதில் ஏற்படும் தாக்குதல் மொத்த உடலையும் தாக்கும். மேலும் அதனை சரி மீண்டும் செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. மினிசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விபத்தின் பின்னர் முள்ளந்தண்டு வடத்தை மீண்டும் இணைக்கும் கருவியை உருவாகியுள்ளனர். சிலிக்கன் பசைக்குள்ளே 3D யில் பிரிண்ட் செய்யப்பட்ட நரம்புக் குருத்தணுக்கள் இருகின்றன. விபத்து ஏற்பட்ட இடத்தில் இதனை பூசுவதன் மூலம் உடைந்த நரம்புக் கலங்களின் இடையே மீண்டும் இணைப்பை வளர்க்கும் பாலமாக இது தொழிற்படும்.
சுகப்படுத்துவதற்கு மிகவும் கடினமானது இந்த முள்ளந்தண்டு விபத்து. ஆனாலும் தற்போது இதற்கான வைத்திய முறையில் பல முன்னேற்றங்கள் உருவாகியுள்ளன. ஜீன் தெரப்பி மூலம் காயப்பட்ட திசுக்களை உடைத்து மீண்டும் அங்கே நரம்புக் கலங்களை வளர்க்கலாம். சில வேளைகளில் இது சாத்தியமில்லை என்றால், இலத்திரனியல் சிப்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு ஒரு பைபாஸ் போட்டு ஏனைய இடங்களை இணைக்கலாம். அல்லது வயர்லஸ் மூலம் மூளையில் இருந்து வரும் சிக்னல்களை உடலின் கீழ்ப் பாகத்திற்கு அனுப்பலாம்.
ஆனால் மேலே கூறப்பட்ட மருத்துவ முறைகள் அனைத்தும் மிகச் சிக்கலான முறைகளாகும், மேலும் மிகவும் செலவானதும் கூட. மினிசோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்களின் முறை மேலே கூறப்ப்டட்ட டெக்னிக்குகளை ஒன்றாக கலந்துகட்டி உருவான ஒரு முறையாகும். வயது வந்தவரின் உடலில் இருக்கும் தோல் அல்லது இரத்தத்தில் இருந்து இதற்கான குருத்தணுக்கள் எடுக்கப்படுகின்றன. அதன்பின்னர் உயிர்ப்பொறியியல் முறையில் இவை நரம்புக் கலங்களாக மாற்றப்படுகிறன. இதன் பின்னர் 3D முறையில் பிரிண்ட் செய்யப்பட்ட சிலிக்கன் அடுக்குகளில் நரம்புக் கலங்கள் சாண்ட்விட்ச் போல அடுக்குகளாக வைக்கப்பட்டு இந்தக் கருவி தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கருவியை விபத்து ஏற்பட்ட இடத்தில் பொறுத்தமுடியும்.
மனிதக் கலங்களில் இருந்து நரம்புக் கலங்களை 3D முறையில் பிரிண்ட் செய்வது இதுவே முதன்முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி பிரிண்ட் செய்யும் போது சராசரியாக 75% மான நரம்புக் கலங்களை அவர்களால் உயிரோடு வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. இதுவே இந்த ஆய்வின் வெற்றிக்கு காரணமாகும்.
Michael McAlpine, இந்த ஆய்வின் விஞ்ஞானிகளில் ஒருவர்
இதுவரை மனிதரிலோ அல்லது விலங்குகளிலோ இது பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. ஆனால் ஆய்வுகூட பரிசோதனைகள் பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் வளர்வதை காட்டுகின்றன. விரைவில் மனிதருக்கும் இது பயன்படும் என்று நம்பலாம்.
நன்றி: மினிசோட்டா பல்கலைக்கழகம், நியூஸ்அட்லஸ்