
“ஹலோ சார், நான்தான் ராஜமாணிக்கம்! இப்ப என்னன்னு பார்த்தீங்கன்னா, எனக்கு அடிக்கடி ஒரு பிரச்சினை வருது! கண்ணை மூடினாலே கண்ணுக்கு முண்ணுக்கு அதே, அதே உருவங்கள் தெரியுது! இப்பதான் கொஞ்ச நாளா இந்தப் பிரச்சினை இருக்கு. சரி டாக்டரை கன்சல்ட் பண்ணிப் பாத்திருவோம் எண்டு வந்திருக்கன். இதால ரொம்ப பிரச்சினை சார். ஆல்மோஸ்ட் என்னோட வாழ்க்கையே ஊசலாடிட்டு இருக்குன்னு சொல்லலாம். இல்லாட்டி இப்படி தனியா புலம்பிட்டு இருப்பனா? நீங்க உண்மையா இருக்கீங்களா இல்லையான்னே தெரியலையே… யோவ் நீ உண்மையிலேயே இருந்தா தலைய ஆட்டித்தொலை!”
இரண்டு நிமிடத்துக்கு பிறகு…
“தோடா வந்துட்டாரு முனுசாமி! வாங்க மிஸ்டர் முனிசாமி, நல்லா இருக்கீங்களா? வீட்ல குழந்தை குட்டி எல்லாம் சௌக்கியமா? ஸீ மிஸ்டர் கணேஷ், இவருதான் முனுசாமி, கதைக்க மாட்டாரு… நானா வைச்ச பேர்தான் முனுசாமி… நல்லா இருக்கில்லே? நீயும் கதைக்க மாட்டீயா? சரியாப் போச்சு போ! இவனுங்க எல்லாத்தையும் கட்டி அழனும்னு எனக்கு தலையெழுத்து!”
அஞ்சு நிமிஷத்துக்குப் முன்… பக்கத்தில் டாக்டர் அறையில்…
“அவரை ஒப்செர்வ் பண்ணிப் பார்த்ததுல அவருக்கு வந்திருக்கிறது ஹல்லுசிநேஷன் போல ஒரு உணர்வு இது ஒரு நோய் இல்லை கட்டாயம் கவுன்சிலிங் மற்றும் சில மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்திரலாம். இல்லாததை இருப்பது போல பீல் பண்ணிக்கிட்டு இருக்காரு. நீங்க கவலைப் படாதீங்க, குணப்படுத்திரலாம் மிஸ்டர் ரகுவரன்.”
“டாக்டர் உங்களைத்தான் நம்பி இருக்கேன், அப்பாவை எப்படியாவது குணப்படுத்திருங்க, அவர் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.”
“டோன்ட் வொர்ரி ரகுவரன்… நீங்க போயிட்டு வாங்க… இங்க ஒரு வீக் இருந்தாருன்னா குணப்படுத்திரலாம்…”
இரண்டு நாட்களுக்குப் பிறகு…
“ப்ரோபெசர் குமாரவேல், நாம கதைக்கிறது அவருக்கு கேட்கமாட்டேன்குது! அவரு கதைக்கிறதும் நமக்கு கேட்கமாட்டேன்குது. ஐ தின்க், ஏதோ செர்கிட் டேமேஜ் ஆகிருக்கும்னு தோணுது. 2015 இங்கிறது ரொம்பத் தூரம் சார். பேசாம நம்ம ஆண்டு 2098 இற்கு பக்கத்தில ஒரு 2080 அப்படி போய்ப் பார்க்கலாமே?”
“நோநோ… நாம ஏன் நீண்ட காலத்துக்கு பின்னோக்கி போனா கதைக்க முடியல அண்ட் சவுண்ட் வரல என்றதை கண்டறிஞ்சே ஆகணும்!. நாம நிச்சயமா எப்படியாவது இவரோட கதைச்சே ஆகணும்…! நீ அந்த மதர்போர்ட்ல இருக்கிற சுவிட்ச் எல்லாத்தையும் மறுபடி செக் பண்ணிடு.”
“சரி ப்ரோபெசர்.. உங்க இஷ்டம்…”
இந்தப் பக்கத்தில் ராஜமாணிக்கம்…
“மிஸ்டர் முனுசாமி…. மிஸ்டர் கணேஷ்… என்ன சார் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இப்பயாவது கதைக்கலாமில்லே?”
-சிறி சரவணா
Image by: Laurie Justus Pace