கடந்த மாதம் பீப்பீகொலம்போ எனும் விண்கலம் புதனைச் சுற்றிவரும் தனது நீண்ட, ஏழு வருட பயணத்தைத் தொடங்கியது!
புதன் கோள் சூரியத் தொகுதியில் இருக்கும் மிகச் சிறிய கோளும், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளாகும். இரவு வானில் தென்படும் பிரகாசமான கோள்களுள் ஒன்றான புதனை பல ஆயிரம் வருடங்களாக மக்கள் அவதானித்துள்ளனர்; இருப்பினும் சூரியத் தொகுதியில் இருக்கும் ரகசியங்கள் நிறைந்த இடங்களுள் புதனும் அடங்கும்.
சூரியனுக்கு மிக, மிக அருகில் புதன் இருப்பதால் அதனைச் சென்று ஆய்வு செய்வது என்பது சிரமமான காரியம் தான். புதனுக்கு அருகில் செல்லும் எதுவும் 450 பாகை செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையை உணரும். இதுவரை இரண்டே இரண்டு விண்கலங்கள் மட்டுமே இந்த தீரச்செயலில் ஈடுபட்டன. ஆனால் இன்று புதிய சவாலை பீப்பீகொலம்போ விண்கலம் சந்திக்கத் தயாராகிவிட்டது.
பீப்பீகொலம்போ இரண்டு ஆய்விகளையும் ஒரு என்ஜினையும் கொண்டுள்ளது. இது சூரியத் தொகுதியில் பயணித்து புதனை அடைய உதவும்.
புதனிக்கு அருகில் இருக்கும் கொதிக்கும் வெப்பத்தை கையாள ஒரு ஆய்வி நிமிடத்திற்கு 15 முறை சுழலும். இதன் மூலம் வெப்பம் எல்லாத் திசைகளிலும் பிரிக்கப்படும். அடுத்த ஆய்வி பாதுகாப்பாக பிரத்தியோக உறையால் மூடப்பட்டுள்ளது. இது சூரியனின் சக்தி மிகுந்த கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.
இந்த இரண்டு ஆய்விகளுக்கும் இடையில் பீப்பீகொலம்போ காவிச்செல்லும் விஞ்ஞான ஆய்வுக் கருவிகள், இதற்கு முதல் இங்கே சென்ற விண்கலங்களில் இருந்த கருவிகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அதுமட்டுமல்லாது, இதற்கு முன்னர் சென்ற விண்கலங்களைவிட நீண்ட காலத்திற்கு பீப்பீகொலம்போ புதனை ஆய்வு செய்யும், எனவே பல புதிய விடங்களை நாம் அறிந்துகொள்ளக்கூடியவாறு இருக்கும்.
பீப்பீகொலம்போ தீர்க்க முனையும் புதிர்களுள் ஒன்று புதனின் அளப்பெரிய மையப்பகுதி. நம் பூமியை எடுத்துக்கொண்டால், அதன் மையப்பகுதி பூமியின் மொத்த கணவளவில் 17% மட்டுமே, ஆனால் புதனைப் பொறுத்தவரையில் அதன் மையப்பகுதி அதன் அளவில் 60% ஆகும்!
இதற்குக் காரணம் என்னவென்று இன்றுவரை எமக்குத் தெரியாத போதிலும், ஒரு கோட்பாடுப் படி புதன் சூரியனுக்கு அண்மையில் உருவாகவில்லை, மாறாக தொலைவில் உருவாகி சூரியனுக்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக வரும் போது வேறு ஒரு பாரிய விண்பொருளுடன் மோதியிருக்கவேண்டும்.
இந்த மோதலில் புதனில் வெளிப்பகுதியில் இருந்த அதிகளவான பாறைகள் விண்வெளியில் தூக்கி வீசப்பட்டிருக்கவேண்டும், இதனால் புதனின் அளவு அதன் முன்னைய அளவைவிட பல மடங்கு சிறிதாகியிருக்கும். ஆனால் புதனின் அடியில் புதையுண்டு இருந்த மையப்பகுதி பாதுகாப்பாக இருந்திருக்கும்.
மேலதிக தகவல்
பீப்பீகொலம்போ எனும் பெயர் விசித்திரமாக உங்களுக்குத் தெரியலாம். இந்த விண்கலம் இத்தாலிய விஞ்ஞானியான Giuseppe “Bepi” Colombo யைக் கவுரவிக்கும் நோக்கோடு வைக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முதல் புதனை நோக்கி அனுப்பப்பட்ட மரினர் 10 விண்கலத்தை உருவாக்கியதில் பங்களிப்பு செய்தவர்.
⚡ #parimaanam #sciencepanda ⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://www.facebook.com/parimaanam
⚡ மின்னூல்கள் ➡ https://bit.ly/parimaanam-books