படத்தில் நீங்கள் பார்ப்பது பெரும்திணிவுக் கருந்துளைகளுக்கு எல்லாம் பெரும்திணிவான கருந்துளை S5 0014+81 நமது சூரியத் தொகுதியோடு ஒப்பிடப்பட்டுள்ளது. நடுவில் ஒரு புள்ளியைச் சுற்றி தெரியும் வட்டம் தான் புளுட்டோ சூரியனைச் சுற்றிவரும் பாதை!
பூமியில் இருந்து அண்ணளவாக 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த குவாசாரிற்குள் ஒழிந்திருக்கும் அரக்கன், நமது சூரியனைப் போல 40 பில்லியன் மடங்கு அதிக திணிவு கொண்டது. இது நமது பால்வீதியின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையின் திணிவை விட 10,000 மடங்கு அதிகமாகும்.
அதே போல நமது பால்வீதியில் இருக்கும் 200 பில்லியனிற்கும் அதிகமான விண்மீன்களின் ஒட்டுமொத்த பிரகாசத்தை விட 25,000 மடங்கு அதிக பிரகாசமானது இந்த குவாசார். இவ்வளவு பிரகாசமாக இருப்பதால் இது ஒரு பிளாசார் (blazar) வகை குவாசர் ஆகும்.
இதன் பிரகாசத்தைப் பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், பூமியில் இருந்து 280 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தக் பிளாசார் இருக்கிறது என்று கருதினால், சூரியனில் இருந்து எவ்வளவு ஒளி எமக்கு வருமோ அதே அளவு ஒளி இந்த பிளாசாரில் இருந்து வரும்.
ஒரு வருடத்தில் சராசரியாக 4000 சூரியன்களின் அளவுள்ள திணிவை இந்த பிளாசாரின் மையத்தில் இருக்கும் கருந்துளை கபளீகரம் செய்கிறது.
நாம் கண்டறிந்ததில் மிகப்பெரிய கருந்துளை இதுதான். இதற்கு முன்னர் சுமார் 60 ஆண்டுகளாக மேசியர் 87 தான் பெரிய கருந்துளை என்று கருதினோம். ஆனால் இந்த புதிய கருந்துளை மேசியர் 87 ஐ விட ஆறு மடங்கு பெரியது.
S5 0014+81 ஐ அருகில் இருந்து பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படம் கீழே.

இன்னொரு தகவல்: இந்தக் கருந்துளையின் சுவர்ட்சைல்ட் ஆரை 118 பில்லியன் கிமீ. அதாவது அதன் மையத்தில் இருந்து இந்த ஆரைக்குள் இருக்கும் தொலைவிற்குள் ஏதாவது வந்துவிட்டால் மீண்டும் வெளியேறிவிட முடியாது. அது இந்தக் கருந்துளையின் பிடிக்குள் சிக்கிவிடும்.
சூரியனின் சுவார்ட்சைல்ட் ஆரை அண்ணளவாக 3 கிமீ தான். பூமியின் சுவர்ட்சைல்ட் ஆரை வெறும் 8.7 மில்லிமீட்டர் மட்டுமே! இப்படியென்றால் பூமி கொண்டிருக்கும் திணிவிற்கு அதனை 8.7 மில்லிமீட்டர் அளவிற்கு நசுக்கிவிட்டால் அது கருந்துளை ஆகிவிடும்.
தகவல்: blackholecam.org, astronomy.swin.edu.au, britannica.com, wikipedia.org
⚡ #parimaanam #sciencepanda ⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://www.facebook.com/parimaanam
⚡ மின்னூல்கள் ➡ https://bit.ly/parimaanam-books