மின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்

உலகில் மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு ஆண்டுக்கு 24 என்று அமெரிக்காவின் தேசிய மின்னல் பாதுகாப்பு ஆய்வகம் கூறுகிறது. அதிலும் மெக்சிக்கோவில் ஆண்டுக்கு சராசரி இறப்பு 233! பெரும்பாலும் மின்னார் இறப்பிற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது கவலையீனமும் மின்னல் பற்றிய அறிவும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்றும் பலருக்கும் தெரியாமல் இருபதுதான்.

நாம் இந்தக் கட்டுரையில் மின்னல் பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மழை காலம் என்பதால் இடியும் மின்னலும் அடிக்கடி அந்தி வேளையில் இடம்பெறுவதால் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க இந்தக் கட்டுரை உதவக்கூடும்.

முதலில் மின்னலைப் பற்றி தெரிந்துகொள்வோம்!

மின்னல் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது?

பொதுவாக மழைக் காலத்தில் வளிமண்டலத்தில் இடம்பெறும் நிலைமின் வெளியேற்றமே மின்னல். மிகப் பிரகாசமான வெளிச்சக்கீற்று தோன்றி அதன் பின்னர் சற்று நேர இடைவெளியில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்கும். மின்னல் எட்டு கிமீக்கும் அதிகமான நீளம் வரை நீளலாம், மற்றும் பல மில்லியன் வோல்ட் அளவுள்ள மின்னழுத்தத்தை காவி வருவதால் அதனைச் சுற்றியுள்ள காற்றை சுமார் 27,000 பாகை செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலைக்கு கொண்டுசெல்லும் சக்திகொண்டது இந்த அரக்கன்.

மின்னலின் போது தோன்றும் ஒளிக்கீற்று மிக வெப்பமான பிளாஸ்மாவின் கருவுடல் கதிர்வீச்சு (blak body radiation) மூலம் வெளியிடப்படுகிறது. சில வேளைகளில் மின்னல் கீற்று தெரியலாம் ஆனால் ஒலி கேட்காது, இதற்குக் காரணம் மின்னல் மிகத் தொலைவில் இடம்பெற்றால் அவ்வளவு தொலைவில் இருந்து ஒலி எம்மை அடைந்திருக்காது ஆனால் ஒளி வந்திருக்கும் என்பதேயாகும்.

மின்னலின் சக்தி

மின்னல் தோன்றுவதற்கு உரிய அளப்பரிய நிலைமின் சக்தி எப்படி உருவாகிறது என்று இன்றும் ஆய்வுகள் நடக்கின்றன, ஆனாலும் பல விஞ்ஞானிகள் சில கருத்துக்களில் ஒரே மாதிரியான முடிவுகளைக் கொண்டுள்ளனர். அதாவது கருமேகம் நிரம்பிய புயல்மழையின் மத்திய பிரதேசத்தில் -15 தொடக்கம் -25 பாகை செல்சியஸ் வெப்பநிலை உள்ளவேளையில் காற்று மேல் நோக்கி வேகமாக பயணிக்கும் போது மின்னலுக்குத் தேவையான நிலைமின் ஏற்றம் உருவாகிறது.

இப்படியாக குறைந்த வெப்பநிலையும், மேல்நோக்கிய வேகக்காற்றும் மிகக் குளிரான நீர்த்துளிகளையும் (water droplets), சிறு சிறு பனித்துகள்களையும் (graupel), படிகங்களையும் (ice crystals) உருவாக்குகின்றன.

மேல்நோக்கிய காற்று நீர்த்துளிகளையும் பனிப் படிகங்களையும் மேல்நோக்கி காவிச்செல்ல, சற்றே பாரமான பனித்துகள்கள் கீழ் நோக்கி விழும். இப்படி இரு திசை நோக்கிய பயணம், நீர்த்துளிகள், பனிப் படிகங்கள் மற்றும் பனித்துகள்களுக்கு இடையில் உராய்வு விசையைத் தோற்றுவிக்கும்.

இந்த மோதலின் காரணமாக மேல் நோக்கிச் செல்லும் பனிப் படிகங்கள் நேர் ஏற்றம் (+) கொண்டதாக மாறும் அதேவேளை, கீழ் நோக்கி செல்லும் பனித்துகள்கள் மறை ஏற்றம் (-) கொண்டதாக மாற்றமடையும். எனவே நேர் ஏற்றம் கொண்ட படிமங்கள் முகிலின் மேற்பகுதியை அடையும், சற்றே பாரமான பனித்துகள்கள் முகிலின் கீழ்நோக்கி வரும் அல்லது சில வேளைகளில் அவ்விடத்திலேயே இருந்துவிடும். இந்த செயற்பாடு பின்வரும் நிலையைத் தோற்றுவிக்கிறது.

மழை முகிலின் மேற்பகுதி நேர் ஏற்றம் கொண்டதாகவும், மத்திய பகுதியும், கீழ்ப் பகுதியும் மறை ஏற்றம் கொண்டதாகவும் மாறுகிறது. இதுதான் மின்னல் தோன்றுவதற்கான முக்கிய நிலைமின் சக்தி உருவாகும் செயற்பாடு. இதன் பின்னர் மூன்று விதமாக மின்னல் பாயலாம்.

  1. முகிளுக்குள்ளே மின்னல்; இதனை intra-cloud lightning என்கின்றனர். (IC)
  2. இரண்டு மேகங்களுக்கு இடையில் (CC)
  3. மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையில். (CG)

மேகத்தில் இருந்து நிலத்தை நோக்கி பாயும் மின்னலே பெரும்பாலும் எம்மைத் தாக்குகிறது. மேகத்தின் கீழ்ப் பகுதியில் உருவாகியுள்ள மறை ஏற்றம், நேர் ஏற்றம் கொண்ட நிலப்பரப்பை நோக்கி பாயமுற்படும் போது மின்னல் கீற்று உருவாகிறது.

சரி, அடுத்ததாக மின்னல் தாக்குதல்கள் பற்றி பார்க்கலாம்.

மின்னல் தாக்குதல் & பாதுகாப்பு நடவடிக்கைகள்

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் உருவானாலும், மழை பொழியும் இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் கூட, நீல வானம் பளிச்சிடும் போதும் கூட மின்னல் தாக்கும் வாய்ப்பு உண்டு.

மேலும் ரப்பர் பாதணிகள் அணிந்திருப்பதால் மின்னல் மின்சாரம் தாக்காது என்று நினைப்பிருந்தால் அதனை இப்போதே குழிதோண்டி புதைத்துவிடுங்கள்.

வீட்டினுள் இருக்கும் போதும் மின்னல் தாக்குவதற்கு முக்கிய காரணியாக இருப்பது தொலைபேசிப் பாவனையாகும்.

வருடத்தில் சராசரியாக 1.4 பில்லியன் (1,400,000,000) மின்னல் கீற்றுகள் தோன்றுகின்றன, அதாவது செக்கனுக்கு 40-50 கீற்றுக்கள்.

எதிர் ஏற்றம் கொண்ட மேகத்தின் அடிப்பகுதி நிலத்தை நோக்கி ஏற்றத்தை அனுப்பும். இந்த் ஏற்றம் நிலத்திற்கு அருகில் வரும் போது, அங்கே நேர் ஏற்றம் கொண்ட பொருட்களால் கவரப்படும், அவ்வேளையில் அங்கே ஏற்றங்கள் காவப்படுவதர்கான ஒரு பாதை திறக்கும், இந்த பாதையினூடு மின் பயணிப்பதே இந்த மின்னல் கீற்றுக்களாகும்.

மழை பொழியும் வேளையில், அல்லது நன்றாக கரும் முகில் இருட்டும் வேளையில் நீங்கள் வெளியே நிற்கும் போது உங்கள் கைகள் கால்களில் உள்ள முடிகள் சிலிர்த்து நின்றால் ஆபத்து என்று அர்த்தம். அதாவது நேர் ஏற்றம் உங்கள் உடலினூடாக பெருகுகிறது என்று அர்த்தம், அடுத்தது மின்னல் உங்களை நோக்கியும் பாயக்கூடும்! அப்படியான நிலை ஏற்பட்டால் உடனே வீட்டிற்கு உள்ளேயோ, அல்லது கட்டடங்களின் உள்ளேயோ சென்றுவிடவேண்டும்.

மின்னல் வேளையில் உயரமான மரங்களின் கீழே சென்று ஒதுங்குவது என்பது உங்கள் உயிரை நீங்களே மின்னலுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு சமன்!

இடிமின்னல் வேளையில் வெளிவரும் ஒவ்வொரு மின்னல் கீற்றும் ஆபத்தை தோற்றுவிக்கக்கூடிய ஆசாமிதான். எனவே கவனம் அதிகம் வேண்டும்.

மின்னல் மரத்தை தாக்கி நிலத்தில் பாய்ந்து அதற்கு அருகில் இருப்பவரை தாக்குதல்

இன்னொரு முக்கிய விடையம் மின்னல் கீற்றுக்கள் மட்டுமே ஆபத்தானவை என்று கருதுதல் தவறு. அதிகளவாக உயிரிழப்புகள் நேரடியான மின்னல் கீற்றுக்களால் ஏற்படுபவை அல்ல, மாறாக மின்னல் நிலத்தில் பாய்ந்து நிலம் மின்னேற்றம் அடைந்து அருகில் இருப்பவர்களை எல்லாம் தாக்கும் சந்தர்ப்ப சாத்தியக்கூறுகளே அதிகம். எனவே மின்னல் கீற்று மட்டுமே ஆபத்து என்று நினைப்பதை இப்போதே விட்டுவிடுங்கள்.

மேலும் உங்களால் இடிமுழக்கத்தை கேட்கமுடிந்தால், மின்னல் உங்களிடம் இருந்து 16 கிமீ தொலைவிற்குள்தான் இருக்கிறது என்று பொருள், எனவே அது உங்களை அடுத்ததாக தாக்க வாய்ப்புண்டு.

மின்னலில் இருந்து உடனடியான பாதுகாப்பு என்பது வீட்டினுள் இருப்பதே. மின்னல் வேளையில் ஜன்னல் ஓரங்களில் நிற்பதையும், மின்சாரக் கருவிகளை பாவிப்பதையும் முற்றாக நிறுத்தவேண்டும். அதிலும் மிகப்பெரிய ஆபத்து தொலைபேசிகள் மூலமே! மேலும் மின்சாரத்தைக் கடத்தகூடிய பொருட்களான இரும்புக் கதவுகள், கதிரைகள், கைபிடிகள் என்பவற்றை பாவிப்பதையோ தொடுவதையோ தவிர்ப்பதும் நல்லது.

நீர் நிலைகளுக்கும், கடலுக்கும் அருகிலும், நீரிலும் இருப்பவர்களுக்குத்தான் மின்னல் வேளையில் மிக அதிகமான ஆபத்து உருவாக வாய்ப்புண்டு. எனவே மின்னல் வரும் என அறிந்தால் நீரில் இருப்பதை தவிர்ப்பது அடுத்த நாள் சூரிய உதயத்தை பார்க்க உங்களுக்கு வாய்ப்பளிக்கலாம்!

மின்னல் ஒருவரை தாக்கிவிட்டால் அவரைக் காப்பாற்ற உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படலாம். நேரடியான மின்னல் கீற்றுத் தாக்குதல் பெரும்பாலும் உயிராபத்தில் முடிவடைந்தாலும், மறைமுகமான தொடுகைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் உங்கள் இலத்திரனியல் சாதனங்களை பாதுகாக்க மின்சார இணைப்பில் இருந்து துண்டித்துவிடுதல் நல்லது. இணைய இணைப்பை / தொலைபேசி இணைப்பை பயன்படுத்துபவர்கள் தங்கள் ரவுட்டரில் இருந்து தொலைபேசி இணைப்பை துண்டித்துவிடுதல் மின்னல் தாக்குதலின் போது அந்தக் கருவிகளை பாதுகாக்க உதவும்.

ஒரு வீட்டினுள் மின்னல் வர மூன்று பொதுவாக வழிகள் உண்டு.

  1. நேரடித் தாக்குதல் – மின்னல் நேரடியாக வீட்டை தாக்குவது.
  2. வீட்டின் வெளியே இணைக்கப்பட்டிருக்கும் இரும்பு பைப், டீவி, ரேடியோ அன்டெனாக்கள் மூலம் வீட்டினுள் நுழைதல்.
  3. நிலம் மூலம் வீட்டினுள் நுழைதல்.

மின்னல் வீட்டினுள் நுழைந்துவிட்டால் வயர், கம்பி, நீர்க் குழாய் என்று பல வழியாலும் பயணிக்கும். மேலும் கொங்கிறீட் பாளத்தினுள் உள்ளே இருக்கும் கம்பிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதெல்லாம் ஒரு சில செக்கன்களில் நடந்தேறிவிடும் என்பதால் வரும்முன் காப்பது மட்டுமே எம்மால் முடியுமே தவிர வந்த பின்பு என்கிற கதைக்கே இங்கே இடமில்லை.

முக்கிய குறிப்புகள்

மின்னல் தாக்கிய ஒருவரின் உடலில் மின்சாரம் நிலைத்திருக்காது. எனவே எந்தவித பயமுமின்றி அவருக்கு முதலுதவியோ மருத்துவ உதவிகளையோ செய்யமுடியும்.

ரப்பர் காலணிகள் ஒரு போதும் மின்னல் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாக்காது!

முக்கியமாக ஒரு மூடநம்பிக்கை, மின்னல் ஒரே இடத்தில் இரண்டு தடவை தாக்காது என்பது – இது பெரிய தவறு. மின்னல் குறிப்பாக அதே இடத்தில் மீண்டும் தாக்குவதற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே அவதானிப்பு முடிவுகள் கூறுகின்றன.

குடை உங்களை மின்னல் தாக்கும் சாத்தியக்கூற்றை அதிகரிக்கலாம். எனவே அதனையும் தவிர்ப்பது நல்லது.

இடிமின்னல் வேளையில் உயரமான இடங்களில் இருப்பதையோ, நிற்பதையோ தவிருங்கள். மேலும், இரும்பு வேலி, இடி தாங்கி ஆகியவற்றின் அருகில் நிற்பதையும் தவிர்க்கவும்.

இப்போது மழை காலம் என்பதால் பத்திரமாக அவதானத்துடன் இருப்பது அவசியம்.


படங்கள், தகவல்கள்: விக்கிபீடியா, natgeo, canada.ca

உபரித் தகவல்: உயிர் போனா வராது!

இன்னொரு உபரித் தகவல்: இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எதோ மின்னல் பல வருடங்களாக உங்களை தாக்க பிளான் போட்டு வைத்திருந்து அதை செயற்படுத்தப் போவதாக நினைக்கவேண்டாம்.

⚡ #parimaanam #sciencepanda ⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://www.facebook.com/parimaanam
⚡ மின்னூல்கள் ➡ https://bit.ly/parimaanam-books