திமிங்கிலங்கள் கடலில் வாழ்கின்றன என்பது நாமறிந்ததுதான். ஆனாலும் திமிங்கிலம், டால்பின் மற்றும் கடல் பன்றி வகை உயிரினங்கள் ஒரு காலத்தில் நிலத்தில் கால்களைக்கொண்டு நடந்து வாழ்ந்த பாலூட்டி வகை உயிரினங்கள்.
அண்மையில் பேரு நாட்டில் கண்டறியப்பட்ட திமிங்கிலத்தின் மூதாதேயர் வகை உயிரினம் நீரிலும் நிலத்திலும் முதலை போல வாழ்ந்துள்ளது. இதன் கண்டுபிடிப்பு எப்படி திமிலங்கள் நீர்வாழ் உயிரினங்களாக கூர்ப்பினால் மாறியது என்று அறிய உதவும்.
இன்று கடலில் வாழ்ந்தாலும், திமிங்கிலங்கள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கால்களில் குளம்புள்ள பாலூட்டி உயிரினத்தில் இருந்து மருவியதுதான்.
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் இருந்து திமிங்கிலத்தின் முன்னோர்கள் நான்கு கால் விரல்களைக் கொண்ட மான் போன்ற ஒரு உயிரினமாக இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. குட்டியிடுவதற்கும் உணவருந்தவும் நிலத்திற்கு வந்துவிட்டு, ஆபத்தான காலங்களில் நீருக்குச் சென்றுவிடும் பண்பை இந்த உயிரினங்கள் கொண்டிருந்தன.
இன்று மிகப் பழைமையான திமிங்கில படிமம் இமாலைய மலைப்பகுதிகளில் கிடைத்துள்ளது. இவை 53 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது.
நிலத்திலும் நீரிலும் என்று சேர்ந்து வாழும் போது இந்தக் கால்களும் இவற்றுக்கு உதவின. காலப்போக்கில் வால் துடுப்பாக மாறி, முன் இரண்டு கால்களும் முன்பக்க துடுப்புகளாக மாறிவிட்டன. பின்பக்க கால்கள் இரண்டும் தேவை இல்லாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி காலப்போக்கில் மறைந்துவிட்டன.
வேட்டையாட இருந்த பெரிய பற்கள் இன்று இந்த திமிங்கிலங்களுக்கு இல்லை. சிறிய பற்களே இவற்றுக்கு உண்டு. இவை உணவை கடித்து உண்பதில்லை, மாறாக முழுதாக விழுங்கிவிடுகின்றன.
இன்று இவை பூரணமாக கடல்வாழ் உயிரினமாக மாறிவிட்டன. அடுத்த 50 மில்லியன் வருடத்தில் இவை எங்கே வாழும் என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
நன்றி: sciencealert, keele university
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam