ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 1

இந்தப் பிரபஞ்சம் சிறிதல்ல என்பது நாமறிந்த உண்மை. சூரியத்தொகுதி இருக்குக்கும் விண்மீன் பேரடையான பால்வீதியில் அண்ணளவாக 200 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் இருக்கின்றன எனக் கணக்கிடப்படுகிறது. அதற்கு அருகில் இருக்கும் அன்றோமீடா பேரடையில் ஒரு ட்ரில்லியன் (1000 பில்லியன்) வரை விண்மீன்கள் இருக்கலாம் என்பது கணிப்பு. இத்தனை விண்மீன்களும் வெறும் இரண்டு விண்மீன் பேரடைகளில் மட்டுமே, “புலப்படும் பிரபஞ்சத்தில்” (observable universe), அதாவது நாம் பார்த்து அவதானிக்கக்கூடிய பிரபஞ்சத்தில் மட்டுமே 200 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன் பேரடைகள் இருக்கலாம் என தரவியல் ரீதியாக கணக்கிடுகிறோம்.

புலப்படும் பிரபஞ்சம் என்றால், புலப்படாத பிரபஞ்சம் என்று ஒன்று உண்டா என உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆம், அப்படி எம்மால் அவதானிக்கவே முடியாத பிரபஞ்சம் இருக்கிறது, அதனைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம். மீண்டும் விசயத்துக்கு வருவோம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் ஏன் இன்னும் ஒரு பங்காளியை கூட சந்திக்கவில்லை என்பது புதிரான, அதே நேரம் வினோதமான கேள்விதான். உண்மையில் நாம் இந்த பிரபஞ்சத்தில் தனித்துவமான ஒரு உயிரினமா? இல்லை பூமியின் உயிரினங்கள் பிரபஞ்சத்தின் தவறுகளில் ஒன்றா?

இந்தக் கட்டுரையில் இதற்கான விடையை விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்யலாம்.

“யாராவது இருக்கீங்களா? ரொம்ப அமைதியா இருக்குது” என்று விஞ்ஞான ரீதியாக இதற்கான முரண்பாட்டை முன்வைத்தவர் என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi). எனவே இவ்வளவு பரந்த பிரபஞ்சத்தில் இன்னும் ஒரு வேற்றுலக உயிரினத்தை கண்டறியாமல் இருப்பதை பெர்மி முரண்பாடு (Fermi Paradox) என அழைக்கிறோம்.

முதலில் இந்த பெர்மி முரண்பாட்டின் அடிப்படை அம்சங்களை பார்த்துவிடுவோம்.

நமது பால்வீதியிலேயே பில்லியன் கணக்கான, சூரியனைப் போன்ற விண்மீன்கள் உள்ளன. அவற்றில் பல சூரியனைவிடவும் பல பில்லியன் வருடங்கள் வயதானவை.

இவ்வாறான விண்மீன்களைச் சுற்றி பூமி போன்ற ஒரு கோள் உருவாகியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம், அவற்றில் உயிரினங்கள் கூட தோன்றியிருக்கலாம்.

அவற்றில் சில வேற்றுலக உயிரினங்கள், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அறிவை உருவாக்கியிருக்கலாம்.

அப்படி விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கக்கூடிய நுட்பத்தை மிகக் குறைந்த வேகத்தில் செயற்படுத்தினாலும், சில பல மில்லியன் வருடங்களில் பால்வீதியில் இருக்கும் அநேகமான விண்மீன்களை அவர்கள் அடைந்திருக்கமுடியும்.

மேலே கூறிய அனைத்தும் ஒரு ஊகம்தான். புள்ளிவிபரவியல் அடிப்படையில் மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற அதிகளவான சாத்தியக்கூறுகள் உண்டு. அப்படியாயின், பூமியை ஏற்கனவே வேற்றுலகவாசிகள் விசிட் அடித்திருக்கவேண்டும், இல்லை அவர்களின் ரோபோக்களையாவது அனுப்பி, இங்கிருக்கும் ஆசாமிகளை உளவுபாத்திருக்கவேண்டும்.

இயற்பியலாளர் பிரான்க் ட்ரேக் (Frank Drake) உருவாக்கிய டிரேக் சமன்பாடு பால்வீதியில் உருவாகியிருக்ககூடிய அறிவுள்ள வேற்றுலகவாசிகள் பற்றிய நிகழ்தகவு சம்பந்தப்பட்டது.

டிரேக் சமன்பாடு பற்றிய எனது விரிவான கட்டுரையை இங்கே வாசிக்கவும்.
[வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்
]

அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு மேலே இந்தக் கட்டுரையை வாசித்தால் புரிதல் இன்னும் அதிகமாக இருக்கும்.

இப்படியெல்லாம் நடந்ததற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான சான்றுகளும் இதுவரை இல்லை. பறக்கும் தட்டில் வந்து தன்னை அவர்கள் கூட்டிச்சென்று பல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்ததாக சொல்லித்திரியும் பல ஆசாமிகள் வேறு கேஸ் – அவர்களை தற்போதைக்கு விட்டுவிடுவோம்.

எனவே, பெர்மி முரண்பாடு என்பது இதுதான். இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருந்தும் எங்கே இந்த ஏலியன்ஸ்?!

இந்தக் கேள்விக்கு பல்வேறு விதமான முறையில் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஒன்றொன்றாக பார்க்கலாம்.

அரிய பூமிக் கருதுகோள் (Rare Earth hypothesis)

இந்தக் கருதுகோளின் படி, உயிரினம் ஒன்று உருவாகி, அது கூர்ப்படைந்து அறிவுள்ள ஆசாமியாக உருவெடுக்கத் தேவையான காரணிகள் சாத்தியமற்ற அளவிற்கு அரிதானது, அல்லது அது சாத்தியமே இல்லை – எதோ தெரியாத்தனமாக அது பூமியில் நடந்து நாம் உருவாகிவிட்டோம்.

“அரிய பூமி” என்கிற சொல்லாடல் முதன் முதலில் தொல்லுயிரியல் ஜாம்பவான் பீட்டர் வார்ட் 2000 ஆண்டில் வெளியிட்ட அவரது புத்தகத்தில் வருகிறது.

இந்தக் கருதுகோள், பாலூட்டிகள் போன்ற சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட உயிரினங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மிக, மிக அரிதான ஆச்சரியங்கள் என்கிறது.

பூமியில் உயிரினம் தோன்ற காரணமாக இருந்த சில காரணிகளை பார்க்கலாம். அதன் மூலம் உயிர் ஒன்று உருவாவது இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு அரிது என்று எமக்கு இலகுவாக விளங்கும்.

முதலாவது, நமது பூமி சுற்றிவரும் சூரியன். பெரிதும் அல்லாமல், சிறிதும் அல்லாமல் மத்திம வெப்பநிலையைக் கொண்ட ஒரு விண்மீன். அதே போலவே பூமியும் சூரியனில் இருந்து சரியான தூரத்தில் சுற்றிவருகிறது. சரியான தூரம் என்பது, பூமியின் மேற்பரப்பில் நீர் திரவநிலையில் இருக்கும் அளவிற்கு சூரியனில் இருந்து வெப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் தூரம்.

உயிர் தோன்ற நீர் அதுவும் திரவநிலையில் இருப்பது அவசியம். வெள்ளிக் கிரகம் போல சூரியனுக்கு அருகில் இருந்தால் நீர் எல்லாம் ஆவியாகியிருக்கும், அதேபோல செவ்வாய் போல சற்றே தொலைவில் இருந்தால் மேற்பரப்பில் நீர் உறைந்துபோயிருக்கும். எனவே ஆச்சரியமாக பூமி சரியான இடத்தில் சூரியனை சுற்றுகிறது.

அது மட்டும் போதுமா? உயிரினம் பூமியில் தோன்ற நம் நிலவு முக்கிய பங்காற்றியிருக்கிறது. சூரியத் தொகுதியின் ஆரம்பக் காலத்தில் பூமியுடன் பாரிய கோள் ஒன்று மோதியதால் உருவான எச்சமே நிலவாகும். ஆரம்பத்தில் தற்போது பூமியை சுற்றிவருவதை விட ஐந்து மடங்கு அருகில் சுற்றிவந்தது நம் நிலவு. அதனால் பூமியின் கடல் நீரில் நிலவின் ஈர்ப்புவிசையின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுனாமி போன்ற பாரிய அலைகள் எழுந்து நிலத்தினுள் சென்று அங்கே இருந்த மூலகங்களை நீருக்குள் இழுத்துவந்து நீரில் உயிரினத்தின் முதல் சுழியை போட்டது இந்த நிலவின் ஈர்ப்புவிசைதான்.

மேலும் பூமியை நோக்கி வந்த பல விண்கற்களை தனது ஈர்ப்புவிசையால் திசை திருப்பியும், அவற்றுடன் மோதியும் பூமியில் ஸ்திரமான காலநிலையை நீண்ட காலத்திற்கு உருவாக்கி உயிரினங்கள் தோன்ற ஏற்ற நிலையை உருவாகிய நிலவு இல்லாவிட்டால் பூமியில் இன்று உயிரில்லை.

அடுத்தது பூமியில் உயிரினம் தோன்ற அதற்கு அருகில் இருந்த நிலவு உதவியது சரி; ஆனால் வியாழன், சனி போன்ற தொலைவில் இருக்கும் பாரிய கோள்கள் இல்லையென்றாலும் பூமியில் உயிரினங்கள் உருவாகியிருக்காது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

சூரியனுக்கு அடுத்த சூரியத் தொகுதியில் இருக்கும் மிகப்பெரிய ஆசாமி வியாழன் தான். தனது ஈர்ப்புவிசையால் சூரியத் தொகுதியில் இருக்கும் ஏனைய கோள்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் என்று எல்லாவற்றிலும் இதன் தாக்கம் இருக்கிறது.

வெளிச்சூரியத் தொகுதியில் இருந்து வரும் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் அடிக்கடி பூமியுடன் மோதாமல் தடுத்து அவற்றை தனது ஈர்ப்புவிசையால் திசை திருப்பிவிட்டு பூமியயை பாதுகாக்கும் ஒரு ஆபத்பாண்டவர் நம் வியாழன். எனவே இவர் இல்லாவிட்டாலும் பூமியில் உயிரினம் தோன்றி இருக்கமுடியாது.

மேலே நாம் பார்த்த விடையங்கள் வெறும் சாம்பிள் தான். இன்னும் பல காரணிகளை இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னொரு உதாரணம் பால்வீதியில் நம் சூரியனின் அமைவிடமும் ஒரு காரணிதான்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் அரிய பூமிக் கருதுகோள், பூமியை ‘அரிய பூமி’ என கூறுகிறது என்று.

ஆனாலும் கார்ல் சேகன், டிரேக் போன்ற அறிவியல் மேதைகள் இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருக்கும் விண்மீன்களும் அவற்றை சுற்றிவரும் கோள்களும் தான். பில்லியன் கணக்கில் இவை இருப்பதால் நிச்சயம் வேறு ஒரு இடத்தில அறிவார்ந்த உயிரினம் தோன்ற காலநிலை உருவாகியிருக்கும் சாத்தியக்கூறு அதிகமே என்று இந்தக் கருதுகோளை எதிர்க்கும் பல விண்ணியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடுத்த பகுதியில், வேறு சில கருதுகோள்களையும் பார்க்கலாம்.

தொடரும்…

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam