ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 2

கடந்த பதிவில் அரிய பூமிக் கருதுகோள் பற்றிப் பார்த்தோம் இல்லையா, இந்தப் பதிவில் பெர்மி முரண்பாட்டுக்கு தீர்வாக இருக்ககூடிய வேறு சில கருதுகோள்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக உயிரியல் பூங்காக் கருதுகோள் (Zoo hypothesis) பற்றிப் பார்க்கலாம். இந்தக் கருதுகோள் படி பூமியில் உயிரினங்கள் தோன்ற பல மில்லியன் அல்லது பில்லியன் வருடங்களுக்கு முன்னரே பிரபஞ்சத்தின் வேறு பகுதியில், நமது பால்வீதி உள்ளடங்களாக உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் என்றும், தற்போது அவை தொழில்நுட்பத்திலும் மிகுந்த வளர்ச்சியடைந்த நாகரீகங்களாக தற்போது காணப்படலாம் என்றும் கருதப்படுகிறது. கார்டாசிவ் அளவீட்டில் மூன்றாம் வகை நாகரீகங்களாக இவை இருக்கலாம்.

இப்படியாக பெரும் வளர்ச்சியடைந்த ஏலியன்ஸ் நாகரீகங்கள் பூமியோடு தொடர்பை வேன்றுமென்றே தவிர்க்கின்றன. இதற்குக் காரணம் பூமியின் உயிரினங்கள் (மனிதன் உட்பட) தானாகவே அவர்களது இடையூறு இன்றி இயற்கையாக கூற்படைந்து வளரவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கலாம்.

அதாவது உயிரியல் பூக்காவில் எப்படி நாம் மிருகங்களை கூண்டுக்குள் வைத்துவிட்டு வெளியே நின்று பார்க்கிறோமோ அதைப் போலத்தான். இந்த ஏலியன்ஸ் எமது வளர்ச்சியை நமக்கே தெரியாமல் அவதானித்துக்கொண்டிருக்கலாம்.

இந்தக் கருதுகோள் மனித இனம் போதுமான தொழில்நுட்ப, அரசியல் மற்றும் சமூக நெறிமுறை வளர்ச்சியடைந்த பின்னர் அவர்களோடு தொடர்பை ஏற்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறுகிறது.

இந்தக் கருதுகோளின் மிக முக்கிய எடுகோள், பிரபஞ்சத்தின் பல பகுதிகளிலும் உயிரினங்கள் உருவாகி அறிவுள்ளதாக வளர்ச்சியடையலாம் என்பதுதான். மேலும், வளர்ச்சியடைந்த ஒரு நாகரீகத்தின் செல்வாக்கில் வளரும் வேறு உயிரினங்களில் அவர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் பிரபஞ்ச பல்வகைத்தன்மை அற்றுப்போக வாய்ப்புள்ளது என்பதால், வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் அவசியமற்ற தொடர்புகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளும்.

இந்தக் கருதுகோளையும் எதிர்பவர்கள் இல்லாமலில்லை. இவர்களின் கருத்து என்னவென்றால், கருத்து முரண்பாடு கொண்ட ஒரு நாகரீகம் போதும் இந்த ஜூ கோட்பாட்டை உடைக்க. இருந்தாலும் சிலர் வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் சிந்திக்கும் முறை வேறுபட்டுக்காணப்படலாம் என்பதால் குறிப்பிட்டு எப்படி இந்தக் கோட்பாடு சாத்தியமாகலாம் அல்லது சாத்தியமற்றுப் போகலாம் என்று சந்தேகம் கொள்கின்றனர்.

அடுத்த ஒரு கருதுகோள் உயிரியல் பூங்கா கருதுகோளிற்கு எதிர்மாறானது. அதாகப்பட்டது, ஏலியன்ஸ் தொடர்பாட எத்தனித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் மின்காந்த அலைகளை குறிப்பாக ரேடியோ அலைகளை அதற்குப் பயன்படுத்தாமல் வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம், அவற்றை எம்மால் தற்போதைக்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

SETI (Search for Extraterrestrial Intelligence) திட்டம் தற்போது வானில் பல பகுதிகளில் இருந்துவரும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்கிறது. ஆனாலும் செட்டி அவதானிக்கும் ரேடியோ அலைவீச்சில் அந்த தொடர்பாடல் இல்லாமல் இருக்கலாம் . அல்லது, ரேடியோ அலைகளை முற்றாக தவிர்த்து விட்டு நியூட்ரினோ அல்லது லேசர் மூலம் அவர்களது தொடர்பாடல் தொழில்நுட்பம் இருக்கலாம். இவற்றை எம்மால் தற்போதைக்கு கண்டறியமுடியாது.

இதில் இன்னொரு கோமிக்கலான விஷயம், கார்ல் சேகன் கூறியதுதான். அதாவது, எலியன்ஸ் தொடர்பாடல் வேகம் எமக்கானதாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அவர்களின் தொடர்பாடல் வேகம் மிக மிக அதிகமாகவோ, அல்லது மிக மிக மெதுவாகவோ இருக்கலாம். உதாரணமாக, ஒரு வசனத்தை அனுப்ப அவர்கள் ஒரு வருடம் எடுத்துக் கொண்டால்? அவற்றை எம்மால் கண்டறியவே முடியாது.

நாம் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் வேற்றுலுக நாகரீகங்களின் தொடர்பாடலை கண்டறிய முனைக்கிறோம். இதற்கு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அவர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னரே கைவிட்டிருக்கலாம். எனவே மிக வளர்ச்சியடைந்த ஒரு எலியன்ஸ் நாகரீகத்தின் தொடர்பாடல் முறை எமது தொடர்பாடல் முறையுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும் என்பது மிக மிகச் சாத்தியமற்ற விடையமாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

மேலே நாம் பார்த்த கருதுக்கோள்கள் சிலதான். பெர்மி முரண்பாட்டுக்கு தீர்வாக பலநூறு கருதுக்கோள்கள் கூறப்பட்டுள்ளன. அதில் முக்கியமானவற்றையே நாம் பாரத்துள்ளோம்.

நம்மோடு எலியன்ஸ் ஏற்கனவே இலைமறைகாயாக வாழந்துகொண்டிருப்பதாக நம்பும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பறக்கும் தட்டு, பெரிய கண்கள் கொண்ட எலியன்ஸ் என்று இந்த லிஸ்ட் நீளும்.

எது எப்படியோ, உண்மையிலேயே முதன்முதலில் ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு தொடர்பு ஏற்படுத்துவது என்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/sciencepandax
https://www.facebook.com/parimaanam