ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொருளை சேகரிக்க ஆர்வமிருக்கும். சிலர் சுப்பர்ஹீரோ பொம்மைகளையும், சிலர் ஸ்டிக்கர், முத்திரை, சில்லறை நாணயங்கள் என்றும் சேகரிப்பர். கூழாங்கற்களை சேகரிப்பவர்களும் உண்டு. சேகரிப்பது ஒரு கேளிக்கையான விடையம் தான், அது சேகரிப்பவருக்கு சேகரிக்கப்படும் பொருட்கள் பற்றி நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவும். நீங்கள் சேகரித்த முத்திரைகளில் ஒரு ஒற்றுமை இருக்கலாம், அல்லது சேகரித்த சிப்பிகள் அதில் வாழ்ந்த உயிரினம் பற்றி எமக்குச் சொல்லலாம்.

இதைப் போலவே, ஜப்பானில் இருக்கும் விண்ணியலாளர் குழு ஒன்று அரிதான சுப்பர்நோவா வெடிப்புகளை கொண்ட 1800 படங்களை சேகரித்துள்ளனர். இவ்வளவு அதிகளவான சுப்பர்நோவா படங்களை எடுக்க, வானில் பெருமளவான பகுதியை இவர்கள் அவதானித்துள்ளனர். இந்த வான் பகுதியை கடந்த ஆறு மாதங்களாக அவதானித்து, அவற்றில் திடீரென தோன்றி மறையும் பிரகாசமான புள்ளிகளை இவர்கள் படமெடுத்துள்ளனர்.
ஒரு பெரும் விண்மீன் தனது வாழ்வுக் காலத்தின் இறுதியை அடையும் போது, தன்னில் இருக்கும் பெருமளவான பருப்பொருளை விண்வெளியில் மிக உக்கிரமாக வீசி எரியும். இந்த வெடிப்பு மிகப் பிரகாசமானதும், சில வேளைகளில் இதன் பிரகாசம் குறைய சில மாதங்களும் எடுக்கும்.
சில சுப்பர்நோவா வெடிப்புகளின் பிரகாசம் நீண்ட காலத்திற்கு அப்படியே இருப்பது விண்ணியலாளர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் எப்படி விரிவடைகிறது என்று படிக்க உதவுகிறது. இந்த சுப்பர்நோவா வெடிப்புகள் எவ்வளவு தொலைவில் இடம்பெறுகின்றன என்று கண்டறிவதன் மூலம் விண்ணியலாளர்கள் இதனை ஆய்வு செய்கின்றனர்.
தற்போது சேகரிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சுப்பர்நோவா படங்களைக் கொண்டு சுப்பர்நோவா பற்றியும், பிரபஞ்ச வளர்ச்சி பற்றியும் மேலும் அறிந்துகொள்ளலாம் என்பது இவர்களின் கருத்து. பிரபஞ்ச வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வது, இன்றுவரை புதிராக இருக்கும் கரும்சக்தி (dark energy) பற்றி அறிந்துகொள்ள உதவும்.
மேலும் ஒரு தகவல்
சுப்பர்நோவாக்கள் வெடிக்கும் போது அவை, செக்கனுக்கு 40,0000 கிமி வேகத்தில் தனது பருப்பொருளை வீசியெறியும். அந்த வேகத்தில் பூமியில் இருந்து நிலவிற்கு வெறும் 10 செக்கனில் சென்றடைந்துவிடலாம்.