கரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன?

விண்மீன் பேரடைகள் என்பவை பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்ட ஒரு தொகுதி. ஒவ்வொரு விண்மீன்களும் தனித்தனிக் கட்டமைப்பு என்றாலும் ஒவ்வொன்றின் ஈர்ப்புவிசையும் ஒன்றாக சேர்ந்தே பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகளை சிதையாமல் கட்டுக்கோப்புடன் பேணுகின்றன.

ஆனாலும் விண்மீன் பேரடைகள் சுழலும் வேகத்திற்கு இவற்றில் இருக்கும் விண்மீன்கள் வீசி எறியப்பட்டிருக்கவேண்டும். அல்லது இன்னொரு விதத்தில் கூறவேண்டும் என்றால், அவதானிக்ககூடிய விண்மீன்களின் திணிவைக் கொண்டு மட்டுமே பேரடைகளை குறித்த வடிவத்தில் பேணமுடியாது அல்லது விண்மீன்கள் பேரடைகளாக உருவாகியிருக்கமுடியாது. அப்படியாயின் விண்மீன் பேரடைகளையும், பேரடைகளின் குழுக்களையும் (galaxy clusters) கட்டமைப்பில் வைத்திருக்கும் பிரபஞ்சஆற்றல் என்ன?

கரும்பொருள் என நாம் அழைப்பதன் நோக்கம் அது கருப்பு நிறம் என்பதால் அல்ல. கரும்பொருள் என்பது இதுவரை நாம் என்னவென்றே அறியாத ஒரு பிரபஞ்ச ஆற்றல், ஆனால் திணிவிற்கும் ஈர்ப்புவிசைக்கும் எப்படி தொடர்பிருக்கிறதோ அதேபோல கரும்பொருளும் ஈர்ப்புவிசையை பிரபஞ்ச பருப்பொருள் மீது செலுத்துகின்றது. கரும்பொருள் மின்காந்தக் கதிர்வீச்சில் தாக்கம் அடையாததால் எம்மால் அதனை ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடியவில்லை எனலாம். இப்படி தெரியாத ‘X’ பொருள் என்பதால் அதனைக் கரும்பொருள் என செல்லமாக அழைக்கிறோம்.

பிரபஞ்ச சராசரி அளவீட்டின் படி ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் அல்லது அதனைச் சுற்றியும் சாதாரண பருப்பொருள் (விண்மீன்கள், கோள்கள், பிரபஞ்ச தூசுகள் மற்றும் வாயுக்கள் – நாம் அவதானிக்கக் கூடிய அனைத்தும் உள்ளடங்களாக) அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக கரும்பொருள் இருக்கிறது.

கரும்பொருள் பற்றிய விரிவான பரிமாணம் கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்வவும்.

NGC1052-DF2 விண்மீன் பேரடை
NGC1052-DF2 விண்மீன் பேரடை

நாம் விசயத்துக்கு வருவோம், கடந்த வருடம் விஞ்ஞானிகள் அவதானித்த NGC1052-DF2 எனும் விண்மீன் பேரடையில் எந்தவித கரும்பொருளும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை உருவாகியது எனலாம்.

எமது தற்போதைய விண்மீன் பேரடைகள் உருவாக்கம் சம்பந்தமான ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் கரும்பொருள் சார்ந்தே இருக்கிறது. எனவே ஒரு பேரடை கரும்பொருளே இல்லாமல் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே!

விண்மீன் பேரடைகள் கரும்பொருள் திரளாகவே முதலில் உருவாகிறது, பின்னரே இந்தக் கரும்பொருள் திரளில் இருந்து விண்மீன்கள் தோன்றி, நமது பால்வீதி போன்ற பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்ட பேரடையாக உருவாகின்றன. இப்படி விண்மீன்கள் உருவாகும் போது கரும்பொருள் ஒரு ஒளிவட்டம் போல பேரடையைச் சூழ்ந்துகொள்ளும்.

NGC1052-DF2 விண்மீன் பேரடை இந்தக் கோட்பாட்டை அசைத்துப்பார்க்கிறது என்று விஞ்ஞானிகள் கருதினர். எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்க மீண்டும் ஒருமுறை குறித்த விண்மீன் பேரடையை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

புதிய ஆய்வுகளின் படி, கடந்த வருடம் ஆய்வு செய்த குழு இந்த விண்மீன் பேரடை 64 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாக தவறாக கணக்கிட்டத்தால், அதனடிப்படையில் அங்கே கரும்பொருள் இல்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆனால் புதிய துல்லிய அளவீடுகள் இந்த விண்மீன் பேரடை 42 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதை வேறுபட்ட அளவீட்டு முறைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய தூரத்தைக் கணக்கில் கொண்டால், ஏற்கனவே அளந்த பேரடையின் மொத்த திணிவில் பாதியளவே இப்பேரடையின் உண்மையான திணிவு – அதிலும் இருக்கும் விண்மீன்களின் திணிவு, விண்மீன் பேரடையின் திணிவில் நான்கில் ஒரு பங்குதான். எனவே மிச்சமிருக்கும் திணிவு கரும்பொருள் என்றே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எனவே இந்த பேரடையில் கரும்பொருள் இல்லை என்று முடிவுக்கு வரக்காரணம் பிழையான தூர அளவீடே!


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/sciencepandax
https://www.facebook.com/parimaanam