வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்

நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம்’ என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தியுள்ளோம். சரி, உயிரினம்  என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.

எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது.

  1. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம்.
  2. தன் நிலையைப் பேன சக்தியைப் பயன்படுத்துதல்
  3. சுவாசித்தல்
  4. இனப்பெருக்கப் செய்தல்
  5. வளர்ச்சியடைதல்
  6. வளர்சிதைமாற்றத்துக்கு உள்ளாதல்
  7. தூண்டல்களுக்கான துலங்கல்களைக் காட்டுதல்
  8. சூழலுக்கு ஏற்ப்ப இசைவாக்கம் அடைதல்
  9. அசைதல்
  10. கழிவகற்றல்

இதைபோல இன்னும் சில பண்புகளும் உண்டு, அதாவது கூர்ப்படைதல், தலைமுறைகளை உருவாக்குதல், மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துதல் இப்படி பல இருந்தாலும், அடிப்படையாக உயிரினம் என்று ஒன்றை வகைப்படுத்த மேலே கூறியுள்ள பண்புகளை அது கொண்டிருக்கவேண்டும். இங்கு பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த வகையான பண்புகளை காட்டுகின்றன.

பூமியில் உள்ள உயிரினங்களை பாக்டீரியா, பாங்க்ஸ், முதலுயிரி, விலங்குகள், தாவரங்கள் என பல்வேறு வகைகளில் பிரிக்கிறார்கள். அனால் இவையெல்லாம் பூமியில் தானே, பூமியை விடவும் வேறு கோள்களில் இப்படி உயிர்கள் இருக்குமா என்பதைப்பற்றிய தேடல், காலம் காலமாகவே மனிதனுக்கு இருந்துவந்துள்ளது.

இந்தக் கட்டுரையில் அப்படி பூமியைத் தவிர வேறு இடத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாதியக்கூறுகள் பற்றியே நாம் பார்க்கப்போகிறோம்.

“இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவமானது என்று ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் நிச்சயம் வேறு பூமிகள், மனிதர்கள், மிருகங்கள் நிச்சயம் இருக்கவேண்டும்” – லுக்ரிடியஸ் (முதலாம் நூற்றாண்டு)

இப்படி ஆதிகாலத்தில் இருந்தே, அதாவது தத்துவவியல் என்ற ஒன்று மனிதனின் மனதில் வந்த காலத்தில் இருந்தே மனிதனுக்கு இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்ற கேள்வி மனதினுள் வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். ஆனாலும் காலம் காலமாக இப்படியான கேள்விகள் எழுவதும் பின்பு மறைவதுமாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் வேற்றுலக உயிர்கள் பற்றிய ஆய்வும் தேடலும் வேகமாக உருப்பெற்றது. அதற்கு கரணம் பிரான்க் டிராக் (Frank Drake) என்ற வானியலாளர்.

வேற்றுலக உயிரினங்கள் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் அறிவியல் புனைக்கதைகளில் மட்டுமே வந்த காலத்தில், அவற்றை உண்மையான அறிவியல் கருத்தாக மாற்றியவர் டிராக். வேற்றுலக உயிரினங்களின் சாதியக்கூற்றுக்கான இவரது டிராக் சமன்பாடு புகழ்பெற்றது. இவரது இந்த முயற்ச்சிக்கு பின்னரே விண்வெளி உயிரியல் என்ற தனிப்பிரிவே உருவானது என்று கூட சொல்லலாம். வேற்றுலக உயிர்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுக்கு முதன்முதலில் வித்திட்டவர், டிராக்.

nguoi-ngoai-hanh-tinh-co-that-chi-co-dieu-ho-o-qua-xa
பிரான்க் டிராக்

இந்த சமன்பாட்டை உருவாகியபின்னர், டிராக், 1960 களில் வேற்றுலக உயிரினங்களுக்கான தேடல் (Search for Extraterrestrial Intelligence – SETI) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை விண்வெளியில் வேற்றுலக உயிர்களை அறிவியல் முறையில் தேடிவருகிறது இந்த அமைப்பு. பூமியில் நாம் தொடர்பாடலுக்கு பயன்படுத்தும் மின்காந்த அலைகளைப் போன்ற தொழில்நுட்பத்தை வேறு கோள்களில் இருக்கும் யாராவது பயன்படுத்துகிறார்களா என்று ரேடியோ தொலைக்காட்டிகளை பயன்படுத்தி இந்த SETI தேடுகிறது. இப்படி இவர்கள் தேடுவதற்கு அடிப்படையாக அமைந்தது, நான் மேற்சொன்ன டிராக் சமன்பாடு.

டிராக் சமன்பாடு

drac eq

ஏழு மாறிகளைக் (variables) கொண்ட டிராக் சமன்பாடு, ஒரு விண்மீன் பேரடையில் இருக்கக்கூடிய அறிவுள்ள நாகரீகங்கள் எத்தனை (N) என ஊகிக்கிறது. இங்கு கவனிக்கவேண்டிய விடயம், இது ஒரு கணிதவியல் சமன்பாடு அல்ல. இந்த சமன்பாடு ஒரு ஊகிக்ககூடிய மத்திப்பையே தரும். துல்லியமான ஒரு எண்ணிக்கையை விடையாகத் தராது. நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று யோசிக்கலாம். இதக்கு விடையை SETI அமைப்பே சொல்கிறது.

இந்தச் சமன்பாட்டில் இருக்கும் சில மாறிகளின் எண்ணிக்கையை எம்மால் கணக்கெடுக்க முடியாது என்பதைத் தாண்டியும், அவற்றை மதிப்பீடு செய்வதும் மிக மிக கடினமான காரியம். ஆக இந்த டிராக் சமன்பாடு, எத்தனை வேற்றுலக உயிரினங்கள் ஒரு விண்மீன் பேரடையில் இருக்கும் என கண்டறிவதற்கான சமன்பாடு என்று சொல்வதை விட, உயிரினங்கள் தோன்றுவதற்கான சாதியக்கூறுகள் உருவாக தேவையான காரணிகளை சிந்திக்க தேவையான அடிப்படை அமைப்பை எமக்கு தருகிறது.

இந்தச் சமன்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாறிகளாக பார்த்துக்கொண்டே வரும்போது உங்களுக்கு, ஏன் இந்த சமன்பாடு, வேற்றுலக உயிரினங்களைப் பற்றிய தேடலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெளிவாக விளங்கும்.

முதலில் நாம் காண எத்தனிப்பது, விண்மீன் பேரடையில் (நம் பால்வீதியை எடுத்துக்கொள்வோம்) எத்தனை நாகரீகங்கள், அதாவது எம்மைபோல விண்வெளியில் தொடர்பாடக்கூடிய அளவுக்கு வளர்ந்துள்ள நாகரீகங்கள், எத்தனை இருக்கும் என்பதுதான். இதுதான் N. எப்படி இந்த N இன் பெறுமதியை காண எத்தனிக்கிறோம் என்று ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

நீங்கள் கொழும்பில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்று ஞாயிற்றுக்கிழமை, காலை பத்துமணி என்றும் வைத்துக்கொள்வோம். உங்களுக்கு ஆலிவ் காய்கள் தூவிய சீஸ் பிஸ்ஸா சாப்பிடவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்துவிட்டது. இப்போது என்ன செய்வீர்கள்? கொழும்பில் எத்தனை இடங்களில் பிஸ்ஸா கடைகளில் பிஸ்ஸா கிடைக்கும் என்று பார்ப்பீர்கள் இல்லையா? பின்னர்…

ஞாயிற்றுக்கிழமையில் திறந்திருக்கும் கடைகள் எத்தனை என்று கண்டறியவேண்டும். பின்னர்?

அதிலே, காலைவேளயிலேயே திறந்திருக்கும் பிஸ்ஸா கடைகள் எத்தனை என்று பார்க்க வேண்டும். பின்னர்?

அதிலே, வீடுதேடிவந்து கொடுத்துவிட்டு செல்லும் பிஸ்ஸா கடைகள் எத்தனை என்றும் பார்க்கவேண்டும். பின்னர்?

அதிலே, நீங்கள் இருக்கும் பகுதிக்கு கொண்டுவந்து தருவார்களா என்றும் பார்க்கவேண்டும். பின்னர்?

அப்படி வரக்கூடிய பிஸ்ஸா கடையில், நீங்கள் எதிர்பார்க்கும் ஆலிவ் காய்கள் தூவிய சீஸ் பிஸ்ஸா யார் தயாரிப்பார்கள் என்றும் பார்க்கவேண்டும்!

ஆக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் தேடல் ஒரு இலக்கை நோக்கிப் போக, உங்களுக்கு கிடைக்கும் விடையின் எண்ணிக்கை குறையும். மொத்தமாக கொழும்பில் 100 பிஸ்ஸா கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், இறுதியில், உங்களுக்கு வீட்டிலேயே, ஞாயிறு காலை பத்துமணிக்கு ஆலிவ் சீஸ் பிஸ்ஸா கொண்டுவந்து தரக்கூடிய கடைகள் 5 அல்லது 6 ஆக இருக்கலாம். சிலவேளைகளில் அப்படி கடைகளே இல்லாமலும் இருக்கலாம்.

இங்கு பிஸ்ஸாவிற்கு பதிலாக வேற்றுலக உயிரினங்களை நாம் தேடுகின்றோம். உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். சரி இனி டிராக் சமன்பாட்டில் இருக்கும் மாறிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

பால்வீதியில் விண்மீன்கள் உருவாகும் வீதம் (R*)

நமது பால்வீதியில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றன என்று தெரியவேண்டும். கோள்கள் விண்மீன்களைத்தான் சுற்றிவருகின்றன. கொள்களோ, துணைக்கோள்களோ, விண்மீன் இல்லாமல் இல்லை. பால்வீதியைப் பொறுத்தவரை அண்ணளவாக 200 பில்லியன் விண்மீன்கள் இருக்கிறது என்று வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். அதுவும், ஒவ்வொரு வருடமும் புதிதாக 7 விண்மீன்கள் உருவாகுவதாக புதிய தரவு சொல்கிறது.

கோள்களைக்கொண்ட விண்மீன் தொகுதிகளின் எண்ணிக்கை (fp)

கோள்களில் தான் உயிரினம் உருவாகமுடியும். ஆக கோள்கள் இருக்கக்கூடிய விண்மீன்களின் எண்ணிக்கை அவசியம். குறைந்தது ஒரு கோளாவது இருக்கும் விண்மீன்கள் அனைத்தையும் இதில் உள்ளடக்கலாம்.

பால்வீதியில் இருக்கும் விண்மீன்களில் 10% தொடக்கம் 50% ஆன விண்மீன்கள், கோள்களைக் கொண்டது என வானியலாளர்கள் கருதுகின்றனர். கடந்த சில வருடங்களில் கெப்லர் தொலைக்காட்டி மூலம் நாம் கண்டறிந்த புறச்சூரியத் தொகுதிக் கோள்களின் எண்ணிக்கை இதை உறுதிப்படுத்துகிறது.

பால்வீதியில் இருக்கும் 200 பில்லியன் விண்மீன்களில் 10% விண்மீன்கள் கோள்களைக் கொண்டிருகின்றன என்று எடுத்தாலும், 20 பில்லியன் விண்மீன்கள்!

உயிர் உருவாகத் தேவையான காரணிகளைக் கொண்ட கோள்களின் எண்ணிக்கை (ne)

சூரியத்தொகுதியை எடுத்துக்கொண்டாலே, இருக்கும் 8 கோள்களில் ஒரே ஒரு கோளில் தான் உயிரினம் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. ஒரு கோளில் உயிரினம் உருவாக அதற்கு தேவையான காரணிகள் இருக்கவேண்டும்.

உதாரணமாக, சிறிய பாறைகளால் ஆன மேற்பரப்பு கொண்ட கோள்கள். அதாவது, பூமி, செவ்வாய், வெள்ளி போன்ற கோள்கள். வியாழன், சனி போன்ற வாயு அரக்கர்கள் வெறும் வாயுக்களால் ஆனவை, அவற்றில் உயிர் உருவாக சாத்தியம் இல்லை.

அதுமட்டுமல்லாது ஒரு வெப்பமுதலும் வேண்டும். பூமியைப் பொறுத்தவரை சூரியனே எமது வெப்பமுதல். அதுமட்டுமல்லாது, இந்த வெப்பமுதலுக்கு சரியான தொலைவில் இருக்கவேண்டும். அதாவது சூரியனுக்கு மிக அருகில் புதன் இருக்கிறது, இதனால் உருவாகும் அதிகூடிய வெப்பநிலையால் நீர் அங்கு திரவநிலையில் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல ப்ளுடோ போல மிக மிக தொலைவில் இருந்தால், நீர் உறைந்து பனிக்கட்டியாகி விடும். ஆக சரியான தூரம் மிக அவசியம்.

திரவ நிலையில் நீர் மிக மிக முக்கியம். நாம் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் எதோ ஒருவகையில் தனது வாழ்வாதாரத்திற்கு நீரிலேயே தங்கியுள்ளது. பூமியில் சில உயிரினங்கள், பிராணவாயுவோ அல்லது சூரியஒளியோ இல்லாமல் வாழ்ந்துவிடுகின்றன, ஆனால் எல்லா உயிரினங்களும் வாழ, வளர மற்றும் இனப்பெருக்கம் செய்ய நீர் அத்தியாவசியப் பொருளாகிறது.

ஆய்வாளர்கள், வேற்றுலக உயிரினங்களின் பண்புகள் எப்படி இருக்கலாம் என்று அறிந்துகொள்வதற்காக, பூமியில் மிகக்கடினாமான சூழ்நிலையில், அதாவது அதிகூடிய வெப்பத்திலோ, அல்லது அலுத்ததிலோ வாழும் நுன்னுயிர்களைப் பற்றி ஆராய்கின்றனர். எப்படியாக அவை விசித்திரமான சூழலில் வாழ்ந்தாலும் அனைத்தும் நீர் என்ற ஒரு வஸ்துவால் கட்டுண்டு கிடக்கின்றன என்பது பூமியைப் பொறுத்தவரை ஒரு மாறா உண்மைநிலை.

ஆக எம்மைப் போல உயிரினங்களை நாம் தேடவேண்டும் என்றால், இப்படியான காரணிகளைக் கொண்ட கோள்கள் இருப்பது அவசியம். அங்கேதான் பூமியை ஒத்த பௌதீக காரணிகளுக்கு ஒத்திசைவான உயிரினங்கள் உருவாகலாம்.

நமது சூரியத்தொகுதியைப் பொறுத்தவரை, பூமியைத் தவிர மேலும் ஐந்து கோள்கள் / துணைக்கோள்களில் நீர் இருப்தற்கான அறிகுறிகளை நாம் அவதானித்துள்ளோம். செவ்வாய்க் கோள், வியாழனின் துணைக்கோள்களான யுரோப்பா, கனிமெட், மற்றும் சனியின் டைட்டன் மற்றும் என்சிலாடஸ்.

உயிர் உருவாகுவதற்கான காரணிகள் மட்டும் இருந்தால் கட்டாயம் உயிர் உருவாகவேண்டும் என்று கட்டாயம் எதாவது உண்டா என்ன?

உயிர் உருவாகி இருக்கக்கூடிய கோள்களின் எண்ணிக்கை (fl)

நாம் அறிந்தவரை, பூமியில் மட்டுமே உயரினம் என்ற ஒன்று இருக்கிறது. நமது சூரியத்தொகுதியிலேயே வேறு கோள்களும், துணைக்கோள்களும் உயிர்வாழத் தேவையான அடிப்படைக் காரணிகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருப்பினும், பூமியில் மட்டுமே நாம் வளர்ச்சியடைந்த அறிவுள்ள உயிரினத்தைக் பார்த்துள்ளோம். இந்த விடயம் நமக்கு ஒன்றை தெளிவாக சொல்கிறது!

உயிர் ஒன்று உருவாகத் தேவையான காரணிகள் எல்லாம் இருந்தாலும் அங்கே உயிர் உருவாகவேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லை.

SETI மூலம் நாம் வானில் தேடிக்கொண்டிருப்பது, எம்மைப்போல வளர்ந்த ஒரு வேற்றுலக உயிரினத்தை, அதாவது மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி தொடர்பாடக்கூடியவர்களை. அப்படியான ஒரு நாகரீகத்தையும் நாம் இன்னும் கண்டறியவில்லை. அதற்காக மொத்தமாக உயிரினங்கள் வேறு இடங்களில் இருக்காது என்று எண்ணுவதும் தவறு.

அடிப்படை உயிரினங்கள், அதாவது, ஒரு கல அங்கிகள், அவற்றைத் தொடர்ந்து மிருகங்கள் தாவரங்கள் இப்படி பல உயிரினங்களும் உருவாக்கி இருக்கலாம், அல்லது மனிதனைப் போன்ற அறிவுள்ள உயிரினமும் உருவாகி இருக்கலாம், அவர்கள் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக வளராமல் இருக்கலாம். நாம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி தொடர்பாடலை மேற்கொள்ள ஆரம்பித்தே அண்ணளவாக 100 வருடங்கள் தான் ஆகின்றதே!

அறிவுள்ள உயிரினம் உருவாகி இருக்கக்கூடிய கோள்களின் எண்ணிக்கை (fi)

மேலே சொல்லியது போல, வெறும் அடிப்படை உயிரினங்கள் உருவாகி இருந்தாலும், நுண்ணறிவு கொண்ட உயிரனங்கள் மட்டுமே தொழில்நுட்ப ரீதியாக தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். பூமியை எடுத்துக்கொண்டால், மில்லியன் கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன, அனால் அதில் ஒரே ஒரு உயிரினம் மட்டுமே அதுதான் மனித இனம், கணித அறிவை வளர்த்து, அறிவியல் அறிவை வளர்த்து, விண்வெளிக்கு கருவிகளையும் தன்னையும் அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

பூமியைப் பொறுத்தவரை டால்பின்கள் மற்றும் காகங்கள், சிக்கலான அறிவு முறையைக் காட்டுகின்றன. இருந்தும் அவைகள் மனிதனளவு வளரவில்லை. ஆக அறிவு மற்றும் நுண்ணறிவு என்பது பல்வேறுபட்ட தளங்களில் இந்த இயற்கையில் காணப்படுகின்றது.

உயிரினங்கள் உருவாகி இருக்கும் எல்லாக் கோள்களிலும் நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் உருவாகி இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அப்படி உருவாக கூடாது என்று ஒன்றும் இல்லை, சிலவேளைகளில் போதியளவு காலம் இல்லாமல் இருக்கலாம். பூமியில் முதல் உயிரினம் தோன்றி பல பில்லியன் வருடங்களுக்குப் பிறகே மனிதன் தோன்றினான். அதிலும், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆனாலும், தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த மனித இனம் வெறும் 300 தொடக்கம் 400 வருடங்களே பழமையானது! அதேபோல வேறு கோள்களிலும் இப்படியான செயற்பாடு இடம்பெற பல பில்லியன் வருடங்கள் ஆகலாம்.

தொழில்நுட்ப ரீதியாக தொடர்பாடக் கூடிய நாகரீகங்களின் எண்ணிக்கை (fc)

இந்த நாகரீகங்களால் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பாடக் கூடியதாக இருக்க முடியும், அதாவது எம்மைப் போல. நாம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி தொடர்பாடுகின்றோம். நுண்ணலைகள், ரேடியோ அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தொடர்பாடலை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது இவை விண்வெளிக்கும் செல்ல வாய்ப்புண்டு. அவற்றைத்தான் நாம் “கேட்க” விரும்புகின்றோம்.

நாம் தொலைக்காட்ச்சி ஒளிபரப்பை ஆரம்பித்து அண்ணளவாக 100 வருடங்கள் ஆகின்றது, பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகளுக்குள் இருக்கும் ஒரு தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாகரீகத்தால் இந்த ஒளிபரப்பை பார்க்கக் கூடியதாக இருக்கும். பூமியில் இருந்து 10 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு நாகரீகம், 10 வருடத்திற்கு முன் நாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை இப்போது பார்ப்பார்கள். அதேபோல 100 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பவர்கள் இப்போதுதான் எமது முதலாவது ஒளிபரப்பைப் பார்ப்பார்கள். அனால் 100 ஒளியாண்டுகளுக்கு வெளியே இருக்கும் நாகரீகங்கள்? அவர்களுக்கு எமது ஒளிபரப்பை பார்க்க முடியாது. மின்காந்த அலைகள் ஒளியின் வேகத்திலே பயணிப்பவை, ஆக அவர்களுக்கு எமது ஒளிபரப்பு சென்று அடைந்திருக்காது!

இதையே நாம் மாறிச் சிந்தித்துப் பார்க்கலாம். வேறு ஒரு கோளில் இப்படி வேற்றுலக வாசிகள் தொடர்பாடலை நடத்தினாலும், அவர்கள் எம்மைவிட்டு பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்தால், அவர்களிடமிருந்து எமக்கு இந்த ஒலி/ஒளிபரப்புகள் வந்து சேர்ந்திருக்காது.

இன்னொரு சாத்தியக்கூறும் உண்டு. அதாவது ஒரு அளவிற்கு வளர்ந்த நாகரீகங்கள், தங்கள் ஒளி/ஒலிபரப்புகளை வெளியில் கசிந்துவிடாமலும் பாதுகாக்கலாம் அதாவது அவர்களுக்கு வேற்றுலக வாசிகளோடு தொடர்பாட விருப்பமில்லாமலும் இருக்கலாம். அல்லது அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நாம் அறியாததாகவும் இருக்கலாம். அதனால்தான் நாம் எவ்வளவு தேடியும், எம்மால் இன்னமும் ஒரு சரியான சிக்னலை கண்டறியமுடியாமல் உள்ளது.

தொடர்பாடக்கூடிய நாகரீகத்தின் சராசரி வாழ்க்கைக் காலம் (L)

இது மிக முக்கியம், அதாவது எவ்வளவு நாட்கள் ஒரு உயிரினம் வாழக்கூடும். அதாவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் அல்ல, மாறாக அதன் இனம். பூமியை எடுத்துக்கொள்ளுங்கள், பூமியில் இருவரை வாழ்ந்த உயிரினங்களில் 99% ஆனா உயிரினங்கள் இப்போது முழுதாக அழிந்துவிட்டது. பூமியைப் பொறுத்தவரை பல மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இப்படியான பேரழிவுகள் வருகின்றன. 65 மில்லியன் வருடங்களுக்கு முன் டைனோசர்கள் அழிந்ததைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இதே போல தான் மனிதனும், ஒரு மிகப்பெரிய அழிவில் இருந்து மனித இனத்தால் தப்பிக்க முடியுமா? விண்கல் மோதல், வறட்சி, பனியுகம், யுத்தம், அணுவாயுதப் பிரயோகம், செயக்கை நுண்ணறிவு, சனத்தொகைப்பெருக்கம், சூழல் மாசடைதல். இப்படி இயற்கையான நிகழ்வுகளும், மனிதனே தனக்குத் தானே வைத்துள்ள ஆபத்துக்களும், மனித இனத்தையே முழுதாக பூமியில் இருந்து அழித்துவிடலாம்.

சில அறிவியலாளர்கள், ஒரு அளவிற்கு வளர்ந்துவிட்ட நாகரீகங்களால் எப்படிப் பட்ட அழிவிலிருந்தும் தப்பிவிடலாம் என்றும் நம்புகின்றனர். ஆனால் மனித இனம் அப்படி இன்னும் வளரவில்லை, அப்படி வளர இன்னும் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்படலாம்.

இந்தப் பின்னணியில் சிந்தித்துப் பார்த்தால், தொழில்நுட்ப ரீதியாக தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய ஒரு வேற்றுலக உயிரினங்கள் ஏற்கனவே அழிந்தும் போயிருக்கலாம். அதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு.

ஆக, இப்படியான மாறிகளைக் கொண்டு இந்த டிராக் சம்னபாட்டை நிரப்பும் போது, நமக்கு ஒரு அண்ணளவான எண்ணிக்கை கிடைக்கலாம், ஆனால் இதில் பயன்படுத்தும் பெறுமதிகள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அந்த பெறுமதிகள் நமக்கு சரியாக தெரியாத ஒன்று. ஆனால் இந்தச் சமன்பாடு உயிரனங்கள் தோன்ற தேவையான காரணிகளையும் அவற்றைக் கண்டறியவேண்டிய முறைகளில் இருக்கும் சிக்கல்களையும் எமக்குத் தெளிவாக காட்டுகின்றது.

கடந்த சில வருடங்களாக, நாம் பல்வேறு கருவிகளைக் கொண்டு, இந்த சமன்பாட்டில் இருக்கும் மாறிகளின் பெறுமதியின் அளவை துல்லியமாக அளக்க முயன்றுகொண்டு இருக்கிறோம். இன்னும் சில வருடங்களில் இந்தப் பெறுமதிகளின் அளவு தெரிந்துவிடலாம்.

சில அறிவியலாளர்கள், நாம், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் வேற்றுலகவசிகளிடம் இருந்து சிக்னலை அவதானிப்போம் என்று கருதுகின்றனர். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலம் பதில்சொல்லும்.


parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam