எரிமலை வெடிப்பும் சூறாவளியும்

காலநிலை (climate) மாற்றங்கள் என்பது பல காரணிகளின் அடிப்படையில் நீண்ட காலத்தில் இடம்பெறும் நிகழ்வுகள். வானிலை (weather) போன்று அவற்றை உடனே நாம் அவதானித்துவிட முடியாது. பலரும் வானிலையையும் காலநிலையையும் குழப்பிக்கொள்வதுதான் தற்போது இருக்கும் பெரிய பிரச்சினையே. இன்று பனி பெய்வதால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கவில்லை என்று பொருளாகாது.

காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய காரணியாக கருதப்படுவது வளிமண்டல பச்சைவீட்டு விளைவை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களின் அளவு. தற்போது அவை மிக அதிகமாக இருந்தாலும், உடனடியாக எம்மால் மாற்றங்களை காலநிலையில் உணர முடியாமல் இருக்கக்காரணம், அதிகூடிய பச்சைவீட்டு விளைவு வாயுக்களைக் கொண்ட வளிமண்டலம் இன்னும் சூழல் சமநிலை (equilibrium) அடையவில்லை என்பதுதான். விஞ்ஞானிகள் அடுத்த 300 வருடங்களில் இந்தச் சமநிலை எட்டப்பட்டுவிடும் என்கின்றனர். அதன் பின்னான நிகழ்வுகள் தடுக்கப்பட முடியாதவை.

எனவே காலநிலை மாற்றங்கள் உருவாவதால் இயற்கையில் ஏற்படும் அனர்த்தங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அவற்றில் நீண்டகாலமாக புதிராகவே இருந்த விடையம் எரிமலை வெடிப்பிற்கும் சூறாவளிக்கும் இருக்கும் தொடர்பு.

விஞ்ஞானிகள் தற்போது சூறாவளிக்கும் எரிமலை வெடிப்பிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை கண்டறிந்துள்ளனர்.

எரிமலை வெடிப்பிற்கும், சூறாவளிக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டறிவது தற்போது இருக்கும் தொழில்நுட்ப உலகில் இலகுவானதுதான், ஆயிரக்கணக்கான சென்சர்களைக் கொண்டு எரிமலை வெடிப்புகளையும் சூறாவளிகளையும் எம்மால் அவதானித்து அதிகமான தரவுகளை சேகரிக்க முடியும், ஆனால் பிரச்சினை “எல் நினோ தெற்கத்திய அலைவு” (El Nino – Southern Oscillation) என்கிற ஒரு விடையத்தில் இருக்கிறது.

அதென்ன எல் நினோ – தெற்கத்திய அலைவு?

சமுத்திர வாழ்க்கை வட்டத்தில் கடல்நீர் வெப்பநிலை அதிகரிப்பது எல் நினோ (El Nino) எனப்படுகிறது. அதேபோல கடல் நீரின் வெப்பநிலை குறைவடைவது லா நினா(La Nina) எனவும் அழைக்கப்படுகிறது.

தெற்கத்திய அலைவில் வளிமண்டல மாற்றங்கள் கடல்நீர் வெப்பநிலை மாற்றத்துடன் சேர்ந்து விளைவுகளை தோற்றுவிக்கிறது. பொதுவாக எல் நினோ, லா நினா போன்ற செயற்பாடுகள் கடல் நீரோட்டங்களை பாதிக்கின்றன.

உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற இயற்கை நிகழ்வுகளுடன் இவை தொடர்புபட்டுள்ளன, அதேபோல சூறாவளி உருவாக்கத்திலும் இவை முக்கிய காரணியாக இருக்கின்றன.

எரிமலைக்கும் சூறாவளிக்கும் இடையில் இருக்கும் தொடர்பை அறிவதில் இருக்கும் பிரச்சினை இந்த எல் நினோ என்று கூறியதற்கு காரணம், பெரிய எரிமலை வெடிப்புகள் எல்லாமே எல் நினோ காலத்துடனேயே வருவதால் எல் நினோ மூலம் உருவாகும் சூறாவளிகள், எரிமலைகள் மூலம் உருவாகும் சூறாவளிகள் என்று இலகுவாக இவற்றைப் பிரித்து அறிந்துவிட முடியாது.

எனவே விஞ்ஞானிகள் அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியை நாடினர் – சூப்பர் கணணிகளைக் கொண்டு எரிமலை வெடிப்புகளையும், சூறாவளிகளையும் உருவகக்ப்படுத்துதல் (simulation).

இந்த கணணி உருவகப்படுத்தல் முறைமூலம் திடிரென ஏற்படும் எரிமலை வெடிப்பு, சூறாவளியின் சக்தி மற்றும் எண்ணிக்கை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும் என்று தெரிகிறது.

வடக்கு அரைக்கோள கடல் மற்றும் வளிமண்டல காற்று, தெற்கு அரைகோள கடல்நீரும் காற்றும் ஒன்றுடன் ஒன்று இணையும் இடம் Intertropical Convergence Zone (ITCZ) என அழைக்கப்படுகிறது.

வடக்கு அரைக்கோள வெப்பமண்டல பகுதிகளில் எரிமலை வெடித்தால், ITCZ தெற்கு நோக்கி நகர்கிறது – இப்படி நகரும் போது சூறாவளிகளை உருவாக்கிச்செல்கிறது. இதன் தாக்கம் அடுத்த நான்கு வருடங்கள் வரை நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த முக்கிய விடையம், இப்படியான பாரிய எரிமலை வெடிப்பு மொத்த உலக காலநிலையில் செல்வாக்குச் செலுத்துவதில்லை, மாறாக எந்த இடத்தில் வெடிப்பு நிகழ்ந்ததோ, அதற்கு அருகில் இருக்கும் கடல் பகுதிகளில் பாதிப்புக்கள் பெரிதாக இருக்கும்.

கடலின் வெப்பநிலை அதிகரிக்க நாமும் பல தரவுகளை சேகரிக்கவேண்டி இருக்கிறது, அப்போதுதான் இந்த மாற்றங்கள் எப்படி காலநிலை, வானிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது என்று எம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

இந்த ஆய்வு சூறாவளிகளுக்கும் எரிமலைகளுக்கும் இடையிலான தொடர்பையே காட்டுகிறது. ஆனால் சூறாவளி ஒன்று உருவாக எண்ணிலடங்கா காரணிகள் உண்டு. அதனால்தான் சூறாவளி பற்றிய எதிர்வுகூறல்கள் மிகக் கடினமான விடையமாக கருதப்படுகிறது.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam