அருந்தும் தேநீர் வெப்பம் குறைந்தளவில் இருப்பது உணவுக்குழாய் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
பல வைத்தியர்களும், நிபுணர்களும் பல கருத்துக்களை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது சர்வதேச சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு தேநீர் அருந்துவதற்கு பொருத்தமான வெப்பநிலை என்ன என்பதை கண்டறிந்துள்ளனர்.
அதாவது, தேநீர் என்று இல்லை, சூடான பானங்கள் எதுவாயினும் 60 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமாக இருக்கும் போது அருந்துவது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.

ஐம்பது பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு மேலே இருக்கும் பொருள் ஒன்றைத் தொடும் போது நாம் சற்றே அசௌகரியமாக உணர்வோம். எனவே 60 பாகை செல்சியஸ் என்பது பொதுவாக நமது வாய்க்கும், நாவிற்கும் சற்றே சிரமமாக இருக்கலாம், ஆனால் சிலர் மிகுந்த சூட்டிலேயே பானங்களை அருந்துவர், இது ஆபத்தானது.
பல ஆய்வுகள் தேநீர் போன்ற வெப்பமான பானங்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு இருப்பதை அறிவித்தாலும், எப்படி புற்றுநோய் இதன் மூலம் உருவாகிறது என்பது பற்றி இன்னும் பெரிய தெளிவு எமக்கில்லை. புதிய ஆய்வுகளை செய்த விஞ்ஞானிகள், பாதிக்கப்பட்ட தொண்டைக் கலங்கள் (throat cells) இதற்கு ஆரம்பக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்த ஆய்வை மேற்கொள்ள விஞ்ஞானிகள் ஈரானில் இருக்கும் கோலிஸ்டான் மாகாணத்தில் தங்கள் ஆய்வை தொடங்கியுள்ளனர். இங்கே தேநீர் அருந்துவது என்பது கலாச்சார விடையம் என்பதும், உணவுக்குழாய் புற்றுநோய் அதிகமாக காணப்படும் இடம் என்பதாலும் இந்த இடம் தெரிவு செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தை தெரிவு செய்யக்காரணம் இங்கே இருப்பவர்கள் பெரிதாக புகைபிடிப்பதோ, மது அருந்துவதோ கிடையாது. அப்படியான நடவடிக்கைகளும் புற்றுநோய் விளைவை பாதிக்கும் என்பதால், சூடான தேநீர் அருந்துவதால் வரும் பாதிப்பை நேரடியாக அவதானிப்பதில் சிரமம் இருந்திருக்கும்.
2004 இல் இருந்து 50,000 இற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து தரவுகளை இந்த ஆய்வுக்கு சேகரித்துள்ளனர். இதில் 700 மில்லிலீட்டர், அதாவது இரண்டு கோப்பை தேநீர் அருந்துபவர்கள் 60 பாகைக்கும் அதிகமான வெப்பநிலையில் அருந்தியுள்ளனர். இவர்களுக்கே புற்றுநோய் வருவதற்கான சந்தர்ப்பமும் அதிகமாக இருந்துள்ளது.
உணவுக்குழாய் புற்றுநோய் என்பது ஆபத்தானது. உலகில் இருக்கும் ஆபத்தான புற்றுநோய் வகைகளில் இதற்கு 8வது இடம். அதிகளவில் தேநீர் அருந்தும் நாடுகளில் இந்தப் புற்றுநோய் இன்னும் அதிகளவில் காணப்படுகிறது.
இன்னுமொரு விடையம், இதற்காக பயந்து தேநீர் அருந்துவதை விட்டுவிடவேண்டாம். குறிப்பாக பச்சைநிற தேநீர் அருந்துவது வேறு பல புற்றுநோய் தாக்கத்தின் அளவைக் குறைக்கிறது என்றும் வேறு பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே வெப்பத்தைக் குறைத்து சீனியற்ற தேநீர் அருந்துங்கள்!
#parimaanam #sciencepanda
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam