விண்வெளியில் ஒரு வெடிகுண்டு

Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிக்கத் தயாராக இருக்கிறது. அடுத்த வருடமோ, அல்லது அடுத்த ஒரு மில்லியன் வருடங்களிலோ அது வெடித்துவிடும். சூரியனைப் போல 150 மடங்கு திணிவைக்கொண்ட Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிப்பதற்கு ஏற்ற வேட்பாளர் தான்.

Eta Carinae என்பது ஒன்றையொன்று சுற்றிவரும் இரண்டு விண்மீன்களைக் கொண்ட தொகுதி, அண்ணளவாக 7500 ஒளியாண்டுகள் தொலைவில் Carina உடுத்தொகுதியில் இது இருக்கிறது.

Eta Carinae அமைந்திருக்கும் Carina நெபுலா. இடப்பக்கத்தில் இருக்கும் பிரகாசமான விண்மீன் தான் Eta Carinae.

வரலாற்றுப் பதிவுகள் மூலம் 1837 இல் Eta Carinae இல் இருந்து அளவுக்கதிகமான வெளிச்சம் வெளிவந்தது எமக்குத் தெரியும், அப்போது தெற்குவானில் மிகப் பிரகாசமான விண்மீனாக இது தென்பட்டது. இதனை “பெரும் வெடிப்பின்” ஆரம்பம் என விஞ்ஞானிகள் கருதினர்.

பின்னர் சிறிது காலத்திலேயே இதன் பிரகாசம் குறைவடைந்து வெறும் கண்களுக்கு புலப்படக்கூட முடியாத விண்மீனாக 1856 இல் மாறிப்போனது. ஆனால் மீண்டும் 1892 இல் ஒரு சிறு வெடிப்பு மீண்டும் சற்றே பிரகாசம் அதிகரித்து மீண்டும் மங்கியது.

அதன் பின்னர் மீண்டும் 1940 இல் இருந்து இதன் பிரகாசம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது சுப்பர்நோவா வெடிப்பிற்கான ஆரம்பம் என பலரும் கருதுகின்றனர். ஆனால் எப்போது என்பது யாராலும் விடையளிக்கமுடியாத கேள்வி.

Eta Carinae தொகுதியில் இரண்டு விண்மீன்கள் இருகின்றன. இவை 5.54 வருடங்களில் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன. இதிலிருக்கும் பெரிய விண்மீன் பிரகாசமான நீலநிற மாறுபடும் விண்மீன் (Luminous blue variable) ஆகும். இதன் நிறை அண்ணளவாக 150-250 சூரியத் திணிவு அளவாக இருந்து தற்போது 30 சூரியத் திணிவு வரை வெடிப்பின் காரணமாக் இழந்துள்ளது. இந்த விண்மீன் ஒரு விசித்திரமான விண்மீன் ஏனென்றால் இயற்கையிலேயே நாமறிந்து புறவூதாக் கதிர் லேசர் கற்றைகளை வெளியிடும் ஒரே விண்மீன் இதுதான்.

அடுத்த விண்மீன் சூரியனைப் போல 30-80 மடங்கு திணிவானது. இதுவும் பிரகாசமான வெப்பம் மிகுந்த விண்மீன் தான்.

படவுதவி: NASA, ESA, Hubble; Processing & License: Judy Schmidt

இந்தப் படத்தில் நீங்கள் இந்த விண்மீன்களைச் சுற்றி யிருக்கும் விசித்திரமான நெபுலா கட்டமைப்பைப் பார்க்கலாம். ஒளிமுறிவால் வண்ணமயமான கோடுகள் நேபுலாவில் இருந்து வருவது போல தோற்றமளிக்கிறது. மிக வெப்பமயமான மத்திய பகுதியில் இருந்து இரு திசைகளில் இரண்டு முட்டிகள் போல இந்த நெபுலா வளர்ந்து இருக்கிறது. இது அந்த விண்மீனின் ஆரம்ப வெடிப்பில் வெளியேற்றப்பட்ட விண்மீன் வாயுக்கள் தான்.

அதுபோக, இந்த நேபுலாவைச் சுற்றி சிவப்பு நிறத்தில் இரத்தத்தை தெளித்துவிட்டது போல இருக்கும் கட்டமைப்பு என்னவென்று இன்றுவரை எம்மால் உறுதியாக கூறமுடியவில்லை.

டிக்டிக் டைம்பாம்

சேகரிக்கப்பட்ட நிகழ்தகவின் அடிப்படையில் நமது பால்வீதியில் இடம்பெறப்போகும் அடுத்த சுப்பர்நோவா வெடிப்பு நாம் இதுவரை அவதானித்திருக்காத வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் (white dwarf) அல்லது சிவப்புப் பெரும் அரக்கன் (red super giant) வகை விண்மீனாக இருக்கவேண்டும். இது நமது வெற்றுக் கண்களுக்கே தெரியாமல் போவதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் பூமிக்கு மிக அருகில் இருக்கும், அதிகமான ஆய்வுகள் செய்யப்பட்ட ஒரு விண்மீன் சுப்பர்நோவாவாக வெடிக்கும் என்றால் அது எமது ஆர்வத்தைத் தூண்டுகிறது இல்லையா?

சூரியனைப் போல 150 மடங்கிற்கும் அதிகமான திணிவைக் கொண்ட Eta Carinae 3 மில்லியன் வருடங்களிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டுவிடும். இப்படியான விண்மீன்கள் பெரும் வெடிப்புகள் ஒன்றும் இல்லாமல் அப்படியே சுருக்கமாக கருந்துளையாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனாலும் சிலவகை விண்மீன்கள், குறிப்பாக அதிகளவு திணிவு கூடிய மூலகங்களைக் கொண்ட விண்மீன்கள் பெரிய வானவேடிக்கை நிகழ்வை நடத்திவிட்டே கருந்துளையாக மாறும்.

Eta Carinae வைப் பொறுத்தவரையில் அதற்கு அருகில் இன்னுமொரு பெரிய விண்மீன் இருப்பதால் சுப்பர்நோவா வெடிப்பில் பல நடைமுறைச் சிக்கல்கள் வரலாம். விண்ணியலாளர்கள் வேறு பல இப்படியான விண்மீன்கள் / சுப்பர்நோவா வெடிப்புகளை கருத்தில் கொண்டு Eta Carinae வின் இறுதிக் காலம் எப்படி இருக்கலாம் என கணக்கிடுகின்றனர்.

பூமிக்கு என்ன நடக்கும்?

ஒரு வேளை Eta Carina சுப்பர்நோவாவாக வெடித்தால் பூமிக்கு என்ன நடக்கும்? சாதாரண சுப்பர்நோவா வெடிப்பாக இருந்தால் அதன் பிரகாசம் வெள்ளிக் கோளின் பிரகாசத்தை அடையும், ஆனால் அதுவே ஹைபர்நோவாவாக வெடித்தால் இதுவரை நாம் பார்த்த சுப்பர்நோவா வெடிப்புகளிலேயே மிகப் பிரகாசமான வெடிப்பாக இது இருக்கும். வெள்ளிக் கோளின் பிரகாசத்தை விட 16 மடங்கிற்கும் அதிகமான பிரகாசமாக இரவு வானில் இது ஒளிரும்.

7500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த நிகழ்வு இடம்பெறும் என்பதால் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. பூமியின் வளிமண்டலமும் ஓசோன் மண்டலமும் ஆபத்தான காமாக் கதிர்வீச்சை வடிகட்டிவிடும். ஆனால் விண்கலங்கள், செய்மதிகள், விண்ணில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பாதிக்கப்படலாம்.

7200 ஒளியாண்டுகளுக்கு அப்பால் கிபி 1006 இல் சுப்பர்நோவாவாக வெடித்த SN 1006 இன் எச்சம். இதுவரை நாம் பார்த்த மிகப் பிரகாசமான சுப்பர்நோவா வெடிப்பாக இது கருதப்படுகிறது.

ஒரு சுப்பர்நோவா வெடிப்பு 50 ஒளியாண்டுகளுக்குள் இடம்பெறும் என்றால் பூமியில் இருக்கும் மொத்த ஓசோன் படலமும் அப்படியே வடித்துத் துடைத்து எறியப்படும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே ஹைப்பர்நோவா வெடிப்பு அப்படியான ஒரு பாரிய நிகழ்வை நிகழ்த்த Eta Carinae வைவிட மிக அருகில் இருக்கவேண்டும். எனவே நாம் தற்போதைக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்.

அதுபோக, Eta Carinae பூமியை நோக்கிய ஒரு காமா கதிர் பீச்சி (gamma-ray burst) இல்லை, எனவே அதனாலும் பாதிப்புக்கள் வராது. இப்படியான தொலை தூரப் பாதிப்புகளில் இருந்து பாதுக்கக்கவே பூமியில் ஓசோன் படலமும், காந்தப்புலக் கோளமும் காணப்படுகின்றன. எனவே எம்மை வாழவைக்கும் தெய்வம் என பூமியை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவும்!

நன்றி: NASA APOD, Wikipedia


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam