மனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பல மடங்கு விருத்தியடைந்துவிட்டதை பல வழிகளில் நாம் இன்று பார்க்கிறோம். சாதாரணமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் தொடங்கி தானே செலுத்தக்கூடிய வாகனம் வரை இன்று பல இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு சார் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. கூகிள் ட்ரான்ஸ்லேட் கூட “பொறிக் கற்கை” (Machine Learning) எனப்படும் ஒருவகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்ட மொழிமாற்றி விடைகளை தருகிறது.

சரி, விடையம் என்னவென்றால், இதே போன்ற பொறிக் கற்றல் முறையை மனித ஜினோம் ஆய்வில் ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளன்னர். அதில் இருந்து தெரியவந்தது வியப்பளிக்கும் சமாச்சாரம். மனித ஆரம்பம் மற்றும் கூர்ப்பு ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் மனித ஜினோமில் நாம் இதற்கு முன்னர் கண்டறியாத வேறு ஒரு மனித இனத்தின் (ஹோமினின்) எச்சம் இருப்பது புலனாகிறது.

இவர்கள் ஒரு காலத்தில் ஆசியா மற்றும் ஓசியானா பகுதிகளில் வாழ்ந்த மனிதனுடன் பாலுறவில் ஈடுபட்டிருக்கவேண்டும். மேலும் கிடைத்த எலும்பு மாதிரிகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் நாம் கணிப்பது என்னவென்றால் இந்த புதிய ஹோமினின் வகை மூதாதேயர் நியண்டர்தால் மற்றும் டேனிசொவன் ஆகிய மனித இனங்களுக்கிடையிலான கலப்பு இனமாக இருந்திருக்கவேண்டும் என்பதே. அண்மையில் சைபீரிய டேனிசொவா குகையினுள் கண்டெடுக்கப்பட்ட 90,000 வருடம் பழமையான வாலிப பெண் ஒருவரின் எலும்பு எச்சங்கள் அவை நியண்டதால் அம்மா மற்றும் டேனிசொவன் அப்பா ஆகியோருக்கு பிறந்த மகள் என்பதை எமக்குக் காட்டுகிறது. இதே வகையான மனித இனமாக புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த மர்ம ஹோமினின் இருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய ஆய்வுகள் அண்ணளவாக புதிய மனிதன் 180,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்கிறது. இப்படி வெளியேறியவர்கள் நியண்டதால், டேசிநோவியன் போன்ற மனித இனங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்திருக்கவேண்டும். தற்போது நியண்டதால் மனித இனமோ அல்லது டேசிநோவியன் மனித இனமோ இல்லை. இவர்கள் அனைவரும் சேர்ந்தே இருந்த காலத்தில் எப்படி இருந்திருந்திருக்கலாம் அல்லது இவர்களை விடவும் வேறு மனித இனங்கள் இருந்தனவா என்கிற கேள்விகளுக்கு விடை கண்டறிவது இலகுவான காரியமல்ல.

இங்குதான் செயற்கை நுண்ணறிவின் பொறிக் கற்கை வருகிறது. மனிதனைப் போலவே இந்தப் பொறிக் கற்கை முறை செயற்படுகிறது. தரவுகளில் இருக்கும் அம்சங்களை கண்டறிந்து ஏற்கனவே அதற்குத் தெரிந்த அல்லது கற்ற மாதிரிகளுடன் அதனைப் பொருத்திப்பார்த்து அதனால் அளப்பரிய தரவுக்களஞ்சியங்களையும் மனிதனுடன் ஒப்பிடும் போது சொற்ப நேரத்தில் ஆய்வு செய்யமுடியும்.

இந்த மனித ஜினோம் ஆய்வில் எப்படியெல்லாம் மனித டிஎன்ஏ காலப்போக்கில் மாற்றமடைந்திருக்கலாம் என்று பொறிக் கற்கை மூலம் தேடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் மனித டிஎன்ஏவின் மாதிரி, கட்டமைப்பு மாற்றங்கள், மற்றும் மனித பரம்பல் மற்றும் புதிய மனிதன் இனப்பெருக்கம் செய்த ஏனைய இனங்கள் என பல தரவுகள் உள்ளீடாக வழங்கப்பட்டன.

மொத்தமாக எட்டு விதமான மாதிரிகளைக் கொண்டு பொறிக் கற்கை செய்யப்பட்டு அதிலிருந்து தற்போது இருக்கும் டிஎன்ஏ உடன் ஒப்பிடக்கூடியவாறு வரும் மாதிரி என்ன என்பதை கண்டறியவே ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர். இதில் தற்போதைக்கு எம்மிடம் இருக்கும் மனித ஜினோமை நோக்கி வரும் மாதிரி நாம் இதுவரை கண்டறியாத மூதாதேயர் இனம் இருந்திருக்கலாம் என்று கூறுகிறது.

மேலும் தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் அகழ்வாய்வுகள் இதற்கான விடையைக் கொண்டுவரலாம். தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிவிடும்.

நன்றி: சிமித்சோனியன்


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam