‘பெரும் கிழிவு’ வருகிறது!

பல ஆயிரக்கணக்காக வருடங்களாக நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி பலரும் ஒரே வினாவைத்தான் எழுப்பியுள்ளனர். இந்தப் பிரபஞ்சத்திற்கு எல்லை உண்டா இல்லையா என்பதுதான் அது.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு விண்ணியலாளரின் பெரும் கண்டுபிடிப்பு இதற்க்கான பதிலை எமக்குக் தந்தது எனலாம்: இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று அவர் கண்டறிந்தார்.

இதிலிருந்து எமக்கு தெரிவது என்னவென்றால் இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இதே அளவில் இருந்ததில்லை, மேலும் நிரந்தரமாகவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே இதன் பொருள். இன்று பலரும் அண்ணளவாக 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பெருவெடிப்பில் (Big Bang) நம் பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என நம்புகின்றனர்.

அன்று தொடங்கி இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. சிறு வயதில் இருந்ததைவிட இன்று பல பில்லியன் மடங்கு பெரிதாக இது வெளிநோக்கி விரிந்துள்ளது.

ஆனால் அதுமட்டுமே கதை அல்ல. நாம் விண்மீன் பேரடைகள் ஒன்றை விட்டு ஒன்று விலகிப்போவதைப் பார்க்கிறோம். அதிலும் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகள் வேகமாக விலகிப் போவதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இது நமக்கு இந்தப் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

குவாசார் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. நன்றி: NASA/CXC/M.Weiss

பிரபஞ்சம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதனை தெளிவாக அவதானிக்க நாம் அதன் சிறுவயதில் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்கவேண்டியிருக்கிறது.

நேரத்தை பின்நகர்த்திப் பார்ப்பது என்பது சிக்கலான விடையம் என்ற போதிலும், அது முடியாத காரியமல்ல. மிகப் பிரகாசமான, மிகத் தொலைவில் உள்ள ஒரு விண்பொருளைக் கண்டுபிடிக்கவேண்டும். மேலும் அதன் பிரகாசம் என்ன என்பதையும் நாம் அறியவேண்டும். பொருள் ஒன்று தொலைவுக்குச் செல்லச்செல்ல அதனில் இருந்துவரும் ஒளியின் பிரகாசம் குறையும். எனவே அதன் உண்மையான பிரகாசம் என்ன என்று தெரிந்திருந்தால் அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கண்டறிந்துவிடலாம்.

வாயுக்களை கபளீகரம் செய்யும் பெரும் திணிவுக் கருந்துளைகள் இதற்காக நமக்கு உதவலாம். இவற்றை நாம் குவாசார் (quasar) என அழைக்கிறோம். 12 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்தாலும் அவதானிக்கக்கூடியளவிற்கு பிரகாசமாக ஒளிர்பவை இவை! இருந்தாலும் சில காலம் முன்புவரை இவற்றைப் பற்றிய ஒரு முக்கிய விடையம் எமக்குத் தெரியாமலே இருந்தது – அதுதான் குவாசாரின் பிரகாசம்.

விஞ்ஞானிகள் சில குவாசார்களின் பிரகாசத்தைக் கண்டறிய புதிய உத்திகளை பயன்படுத்துகின்றனர். இந்தப் புதிய உத்திகள் பிரபஞ்ச நேரக்கோட்டில் இருக்கும் பல இடைவெளிகளை நிரப்புவதுடன், சில பல ஆச்சரியமானதும், நம்மை பயமுறுத்தும் விடையங்களையும் எமக்கு வெளிப்படுத்துகின்றன.

எமது பிரபஞ்சம் இன்னும் இன்னும் வேகமாக விரிவடைந்து “பெரும் கிழிவு” (Big Rip) எனும் நிலையை நோக்கிச் செல்கிறது. இன்னும் பல பில்லியன் வருடங்களின் பின்னர் இன்று பிரபஞ்சத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அதே சக்தி முதல், விண்மீன் பேரடைகள், விண்மீன்கள் தொடங்கி அணுக்கள் வரை ஒவ்வொன்றையும் கிழித்தெறியும்!

மேலதிக தகவல்

பிரபஞ்சம் வேறு எப்படியெல்லாம் வாழ்கையை முடிக்கலாம் என்பதில் பெரும் குழைவு (Big Crunch), மற்றும் பெரும் உறைவு (Big Freeze) போன்ற கோட்பாடுகள் அடங்கும். பெரும் குழைவில் இந்தப் பிரபஞ்சம் விரிவடைவது ஒரு கட்டத்தில் நின்று மீண்டும் சுருங்கத்தொடங்கும். பெரும் உறைவு என்பது பிரபஞ்சம் தொடர்ச்சியாக விரிவடைந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் எல்லா விண்மீன் பேரடைகள், விண்மீன்கள், கோள்கள் என்பன தனித்தனியாக சென்றுவிடும். அவ்வேளையில் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு நோக்கினும் வெறும் இருளும் வெறுமையுமே எஞ்சியிருக்கும்.


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam