மிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு

சூரியன் தனது கதையை தனது கட்டமைப்பின் ஒளி அடுக்குகள் மூலமே சொல்கிறது. ஒவ்வொரு அடுக்கும் குறித்த வெப்பநிலையில் என்ன செயற்பாடு இடம்பெற்றது என்று எமக்குக் காட்டுகிறது. உதாரணமாக, நாம் பார்க்கும் சூரிய ஒளியானது 6000 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் மேற்பரப்பில் இருந்து வருகிறது.

ஆனாலும் சூரியனில் நம் கண்களால் பார்க்கக்கூடிய விடையங்களையும் தாண்டி வேறு பல விடையங்களும் இடம்பெறுகின்றது. எக்ஸ்-கதிர் மூலம் பார்க்கும் போது, சூரியனில் இடம்பெறும் மிகவும் வெப்பமான அதே நேரம் முக்கியமான பல விடையங்களை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சூரிய நடுக்கம் (solar flare) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் சூரியனில் இடம்பெறும் நுண் நடுக்கம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

சூரியனின் வளிமண்டலத்தில் இடம்பெறும்மிகச் சக்திவாய்ந்த ஆனால் சிறிய வெடிப்புகளே நுண் நடுக்கங்கள் எனப்படுகின்றன. இவை சூரியனின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இந்த வெடிப்புகள் சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் துணிக்கைகளை மிக வேகமாக விண்வெளியில் சிதறடிக்கின்றன. சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இந்த வெடிப்புகளே சூரியனின் வளிமண்டலம் நம்பமுடியாதளவு ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைவதற்குக் காரணம்!

எக்ஸ்-கதிர் மூலமே நுண் நடுக்கங்களை ஆய்வு செய்து படிக்கமுடியும். உலகின் பல பாகங்களில் உள்ள விஞ்ஞானிகள் பலரும் சேர்ந்து இதற்கென்றே திறமையான ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி ஒரு மிகச் சிறிய ஆனால் மிகத் திறன் வாய்ந்த FOXSI என அழைக்கப்படும் ஆய்வு ராக்கெட் ஆகும்.

இந்த FOXSI பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பயணித்து விண்வெளியை சற்று நேரம் பார்த்துவிட்டு மீண்டும் பூமியில் விழுந்துவிடும்.

கடந்த வருடத்தில் இந்த ராக்கெட் பூமிக்கு மேலே 300 கிமீ உயரத்திற்கு சென்று 6 நிமிடங்கள் வரை சூரியனை நேரடியாக பார்வையிட்டது. இந்தப் பயணத்தின் போது, நாம் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகத் துல்லியமாக சூரியனின் வெப்பமயமான வளிமண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் படம்பிடித்தது. படத்தில் இருப்பது போல!

படம்: FOXSI எடுத்த எக்ஸ்-கதிர் புகைப்படம். நன்றி: FOXSI-3 team

விஞ்ஞானிகள் இந்தப் புதிய எக்ஸ்-கதிர் புகைப்படங்கள் எப்படி நுண் நடுக்கங்களை ஆய்வு செய்ய பயன்படும் என சிந்திக்கின்றனர்.

மேலதிக தகவல்

நுண் (nano) எனும் சொல் மிகச் சிறியது என்கிற பொருளைக் கொண்டது. நுண் நடுக்கங்கள் சாதாரண சூரிய நடுக்கங்களை விட மிகச் சிறியவை என்றாலும், இவை அண்ணளவாக 240 மெகாடன் TNT யின் சக்தியைக் கொண்டவை, அதாவது ஒரே தடவையில் 10,000 அணுகுண்டுகள் வெடிப்பதால் வெளியிடப்படும் சக்தி!


#parimaanam #sciencepanda

⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam